தொடா்மாடிகள்

“வருடப்பிறப்பண்டைக்கு நான் போய் எங்கள் வீட்டு ‘பல்கனி’யில் நிண்டு மாமா வாறாரா எண்டு பார்த்துக் கொண்டிருந்தன். ‘டங்’ எண்டு றால் கோது கட்டின சொப்பின்பாக் எனக்கு கிட்ட வந்து விழுந்தது. அண்ணாந்து பார்த்தன் மேல் மாடியில் இருந்து கீழே உள்ள குப்பைத் தொட்டிக்கு எறிஞ்ச றால்கோது பாக் தான் அது. இப்பிடி யாரும் செய்வினமோ…. கீழ இறங்கிப் போய் போட்டால் என்ன….” அலுத்துக் கொண்டார் வெள்ளவத்தையில் தொடர்மாடி வீட்டில் 5 வருடமாக வாழும் ரஞ்சி (வயது 30)
“ஊரில கதவையும் திறந்திட்டு றோடியோவையும் கூட்டி வைச்சிட்டு முத்தத்தில நிண்டு பாட்டு கேக்கிற மாதிரி இங்கையும் செய்யுதுகள். ரி.வி யின்ற சத்தத்தையும் கூட்டி வைச்சுக்கொண்டு கதவையும் திறந்து விடுதுகள். எரிச்சலா இருக்கும். என்ன செய்யுறது?” என்று எரிச்சலானார் வேறு ஒரு தொடர்மாடியில் வசிக்கும் கணேஷ்.

இன்று விரும்பியோ விரும்பாமலோ எம்மில் பலர் தொடர்மாடி வாசிகளாகிவிட்டோம். பெரிய முற்றத்துடன் நிலத்துடன் அமைந்த வீட்டில் சாமியறை, சாப்பாட்டறை, குசினி, முன்விறாந்தை, பின்விறாந்தை, படுக்கையறை, படிக்கும் அறை என ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அறை என வாழ்ந்த மக்களில் பலர் இன்று 2 அல்லது 3 அறைகளுடன் தொடர்மாடி வீடுகளில் வசிக்கத் தொடங்கி விட்டார்கள்.
தொடர்மாடி வீடுகளில் சட்டப்பிரச்சினை, நீர் பிரச்சினை, இடப்பிரச்சினை… இப்படி பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க தொடர் மாடி வீடுகளில் வாழ்பவர்கள் தமக்குத் தாமே பல பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

காலி வீதியில் இருந்து சற்று உள்ளே அமைந்திருந்த அந்த தொடர்மாடி 6 அடுக்குகளை கொண்டது. அந்த வீட்டில் இருப்பவர்கள் அணியும் ஆடைகள் கலர் கலராக வீட்டு ‘பல்கனி’யில் தொங்கிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் மறுபுறம் அந்த தொடர் மாடியை அலங்கோலமாக்குவதாக இருந்தது. சில வேளைகளில் தவிர்க்க முடியாததாக இருந்தாலும் அதற்கான மாற்று வழியை கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. அதற்காக குடியிருப்பாளர் எல்லோரும் சேர்ந்து மொட்டை மாடியில் அதற்கான ஒழுங்குகளை மேற் கொள்ளலாம்.
“விடிய எழும்பினால் வாசல் படியை கழுவ வேண்டி இருக்கிறது” என்றார் ராஜி (ஆசிரியர்) இவற்றுக்கெல்லாம் காரணமாவது முதலில் எப்படி தொடர்மாடிகளில் வாழ்வது என்று தெரியாமல் வாழ்வது தான். அதைத்தான் ‘குயின்ஸ்கோட்’ சிவகாமி (ஆசிரியர்) சொல்கிறார். “காசைக் கொட்டி வீட்டை வாங்கினால் காணாது. அதில் எப்படி வாழ்வது என்று கூடத் தெரிய வேண்டும். ஊரில் வாழும் போது எமது இஸ்டப்படி வாழலாம். காரணம் பெரிய காணி, வளவு கேட்பதற்கு யாரும் இல்லை” இவ்வாறு எத்தனையோ உள்ளங்கள் வெந்து கொண்டிருக்கின்றன.
இதே மாதிரித்தான் வெளிநாடுகளிலும் இதைவிட இரண்டு மடங்கு அதிகரித்த முறையில் தொடர்மாடி வீடுகள் காணப்படுகின்றன. அவர்கள் எவ்வளவோ சிக்;கல்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தும் தமது வீடுகளைப் பராமரிப்பதிலும் அதில் வாழ்வதிலும் மிகவும் அவதானமாக இருக்கிறார்கள். அங்கு சிறிய சத்தம் அல்லது அயல் வீட்டுக்காரரினால் பிரச்சினை வந்தால் உடனே அந்த வீட்டுக்காரர்கள் பொலிஸிற்கு அறிவித்து விடுவார்கள். அங்கு அப்படியான சூழ்நிலையிலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதை இங்கே ஒப்பிட முடியாது. இருந்தாலும் தொடர் மாடி எனும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகளைக் கவனித்துத் தான் ஆகவேண்டும்.

தொடர்மாடிகள் எனும் போது இரண்டு வகையானதாகக் காணப்படுகின்றது. ஆடம்பர வசதிகளைக் கொண்டது மற்றது சாதாரணமானது. ஒவ்வொரு மாடிவீடுகளும் தமக்கென சில கட்டுப்பாட்டு விதி முறைகளைக் கொண்டுள்ளது.

இந்த விதிமுறைகளை ஒவ்வொருத்தரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. அயலவர்களின் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடாது பார்த்துக்கொள்கிறது. அந்தந்தக் குடியிருப்புக்களில் உள்ளவர்கள் அங்கத்தவர்களாக இணைந்து அந்த விதிமுறைகள் தொடர்பாக மேற்பார்வை செய்கின்றனர். எவ்வாறான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதென்றால் வீட்டுக்கு வெளியே எந்தவிதமான பொருட்களையோ அல்லது பூச்சாடிகளையோ வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் வீடுகளில் வசிப்பதால் செல்லப்பிராணிகளை வளர்க்க முடியாது. இது தொடர்பாக 5 வயதுப் பிள்ளையின் தாயான சுகன்யா இவ்வாறு கூறுகிறார். “ஊரில ஓடித்திரிந்து விளையாடின பிள்ளைகள் இங்க ஆசைக்கு சைக்கிள் கூட ஓட முடியவில்லை”. சில மாடிகளில் சிறுவர்கள் வாகனத் தரிப்பிடத்திலோ அல்லது வேறு இடத்திலோ விளையாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இது மற்றையவருக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக போடப்பட்ட விதி. பள்ளிக் கூடத்தால் வந்தால் அம்மா வெளியே போகவே விடுறா இல்ல” என்று பிஞ்சுக் குழந்தையான துஸ்மிகா (வயது 5) ஏங்குகிறது. இவ்வாறு தொடர் மாடிகளில் பிரச்சினை காணப்படும் போது அதற்கான மாற்று வழிகளை அவர்களே தான் கண்டுபிடிக்க வேண்டும். சிறுவர்கள் விளையாடுவது தவிர்க்க முடியாத ஒன்று இந்தப் பிரச்சினையை சிறுவர் பக்கமிருந்து சிந்திக்க வேண்டும். எமக்கு பிரச்சினையானது அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

“மாதம் மாதம் ‘பைப்’ எல்லாவற்றையும் ‘கிளீன்’ பண்ண வேண்டியிருக்குது. மேல் வீட்டில் உள்ளவை கண்டபடி எல்லாத்தையும் எங்கெங்க போடுறது என்று தெரியாமல் பாவிக்கிறதால் பெரிய பிரச்சினை. திடீர் திடீரென எல்லாம் அடைத்து விடுகின்றது” வேதனையுடன் சொன்னார் அந்தத் தொடர் மாடிக்குடியிருப்பின் மேற்பார்வையாளர் சுப்பிரமணியம். எல்லோரும் நேரத்தை கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியுள்ளது. ஆகவே அவசரத்தில் எல்லாக் கழிவுகளையும் உதாரணமாக தலைமயிரை கழிவுநீர் குழாயில் போடுவது. ஏற்கனவே அதற்காக குளியலறை குழாய் மட்டும் இதற்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர் மாடிகளில் வசிப்பவர்கள் பலருக்கு இது பற்றித் தெரியாது. சமையலில் மீதி உணவை எடுத்துவிட்டு பாத்திரங்களைக் கழுவாமல் அப்படியே கொட்டி விட்டு கழுவுவதனால் அவை சென்று குழாய்களில் தங்கி அடைத்து விடுகிறது. அதிகம் தொடர் மாடிகளில் இந்தப்பிரச்சினை காணக்கூடியதாக உள்ளது.

மாதம் மாதம் சாமான் விலையேர்றதை விட ‘பிளட்ஸ்’ பராமரிப்பு செலவிற்கு காசு கூடிக் கொண்டே போகுது” என்று புலம்புகிறார் நடுத்தரவ வர்க்கத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி. இதற்கு காரணம் என்னவென்றால் ‘பல்கனி’ சுவர்களில் பூங்கன்றுகளை வைத்துப் பராமரிப்பதால் அதிலிருந்து வடியும் நீர், கசியும் மண்காரணமாக வெளிப்புற சுவர்களில் காவி படிகிறது. இதற்கு ஒவ்வொரு குடியிருப்பாளரும் பொறுப்பாளிகளாகின்றனர். ஊரில் பூக்கன்றுக்கு நீர் ஊற்றுவது போல் அல்ல. அவர்கள் அதற்காக வேறு இடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அல்லது நீர் வெளியே கசியாதபடி சாடிகளை பாதுகாப்பாக பேண வேண்டும்.

தமக்கான பிரச்சினைகளையும் செலவீனங்களையும் தாமே உருவாக்கிக் கொள்கின்றனர். இவர்களின் பிரச்சினை அயலவர்களுக்க பெரும் பிரச்சினையை தோற்றுவிக்கிறது. இவற்றிற்கான அடித்தள காரணம் இயல்பாக ஒன்றிப் போன பழக்க வழக்கங்கள் தான். நாங்கள் தான் நிலைமைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளவேண்டும்.

எல்லோரும் தொடர்மாடிகளின் பிரச்சினை பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் வசிப்பவர்கள் கொண்டுள்ள ஒழுங்கு முறை தெரியாதபடியால் தான் தொடர் மாடி வீடுகளில் வசிப்பது கஸ்டம் அல்லது சிக்கலாக உள்ளது என தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால் வெளிநாடுகளில் 95 வீதமானவர்கள் தொடர் மாடிகளில் தான். அவர்கள் அப்படிச் சொன்னார்களா? இல்லை. நாம் தொடர் மாடிகளில் வாழ்கின்றோம் ஆனால் ஊரில் வசிப்பது போல் செயற்படுகின்றோம். எமக்கானது ஒழுங்கு விதிகள் அவை எம்மைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. எமக்கு சிக்கல் வராமல் தடுப்பதற்காகவே இந்த விதிகள் விதிக்கப்படுகிறது. கட்டாயம் இவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

பிரச்சினையை நாம் தான் விலை கொடுத்து வாங்குகின்றோம். விதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டால் நாங்கள் நாளடைவில் அதற்குட்பட்டு பழக்கப்படுவோம். பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளதை பிரச்சினையாகக் கொள்ளாமல் எமக்கானது எனக் கொண்டோமானால் தொடர் மாடி வீடுகளில் வாழ்வது சுலபமானது ஒன்றாகக் கூட பழக்கமாகிவிடும். பழக்கங்களில் தான் உள்ளது பிரச்சினைகளும் தீர்வுகளும்.