சூரிய காந்தி பூக்கள்லீவு கிடைச்சாலும் எங்கு போவது என்று தெரியாது எத்தனையோ உள்ளங்கள் நான்கு சுவர்களுக்குள் மண்டையை போட்டு உடைத்துக் கொள்வது எங்களுக்குத் தெரியும் என்ன செய்வது என்று கூட நேரத்தைத் திட்டிக்கொண்டிருப்பார்கள். எத்தனை தரம் தான் ‘மியூசியம், பார்க், சூ’ என்று சுத்துவது. அவற்றை எல்லாம் விட வித்தியாசமான ஒரு இடம், புதிய பார்வைக்கோணங்களை உருவாக்க கூடியதும் புதிய உலகப் பிரவேசம் போல உணரக் கூடியதுமாக உள்ள ஒரு தாவரவியற் கண்காட்சி

அண்மையில் விகாரமகா தேவிப்பூங்காவில் 4 நாட்கள் நடைபெற்றது. கொழும்பு நகரத்தில் இப்படியான ஒரு கண்காட்சி பலரின் வரவேற்பை பெற்றிருந்தது என்பதை அங்கு வருகை தந்தோரின் எண்ணிக்கையை பார்த்தபோதே கணக்கிடக் கூடியதாக இருந்தது. ஒரே மாதிரியான நிகழ்வுகள் இடம் பெறுவதைவிட இவ்வாறான செயற்பாடுகள் நகரமத்தியில் இடம்பெறுவதால் பல பூங்கன்று பிரியர்களுக்கு நன்மையளிப்பதுடன் அந்த இடத்தை இடத்தை ஒரு தடவை சுற்றிப்பார்த்தாலே ஒரு ஆத்ம திருப்தி போல் இருக்கிறது. ஆனால் ஒரு அதிசயம் கொழும்பு நகருக்குள் வசிக்கும் பலருக்கு இவ்வாறு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் வெளியிடங்களில் இருந்து அநேகமானோர் வந்திருந்தார்கள். பல பூங்கன்றுகளை காணும்போது ஏதோ எண்ணங்கள் மனதைச் சூழ்கையில் வலிகள் கூட மெல்ல விலகுவது போன்று ஓர் உள்ளுர உணர்வு.

 பதோக்சாக்க கள்ளி வகைபச்சை நிற வண்டுகள் சாடிக்குள் நிற்பது போல இருந்து பலபேரின் பார்வையைத் தன்பக்கம் உள்வாங்கிக் கொண்டிருந்தது. ‘பதொக் சாக்க’. இது என்ன புதுவிதமான பெயருடன் புதினமாகவும் இருந்ததால் அவ்விடத்தை சுற்றி ஒரே கூட்டமாக இருந்தது. பச்சை நிறத்தண்டை உருண்டை வடிவில் கொண்டதுடன் அதன்மேல் அடர்த்தியான மஞ்சள் உரோமங்களையும் கொண்டு அசல் வண்டுகள் மயிர்கொட்டி போல் காட்சியளித்தது. இத்தாவரமானது களுத்துறையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றது. இது கள்ளி வகைத்தாவரம் இதற்கு நீர் தேவையில்லை. இப்படியான எத்தனையோ தாவரப்புதுமைகளை அறிமுகப்படுத்துகிறது ‘ LANKA MAL’ கண்காட்சி. 15 வருடங்களுக்கு மேலாக சுதர்சி ஹோல், BMICH போன்ற இடங்களில் இடம்பெற்று வந்து 10 வருடங்களாக விகாரமகாதேவிப் பூங்காவில் இடம்பெற்று வருகின்றது. இக்கண்காட்சி கடந்த மாதம் 10,11 மற்றும் 12ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இதற்கான வரவேற்பு பூங்கன்று ரசிகர்கள் மத்தியில் பலமாகத் தான் இருந்தது.

ஆா்வமாக வாங்குவோர்வென்னப்புவ, பூகொட, களுத்துறை, நீர்கொழும்பு, நவரெலியா போன்ற பிரதேசங்களில் இருந்து ஏறக்குறைய 80 விற்பனையாளர்கள் இந்தக்கண்காட்சிக்கு பங்குபற்றி இருந்தார்கள். இவர்களில் 75 சதவீதமானோரின் பிரதான தொழிலாக பூங்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்வதாக இருக்கிறது. கேட்கவே ஆச்சரியமாக இருந்து. இன்று விலைவாசிகளின் ஏற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இருக்கையில் பூங்கன்று வியாபாரம் எப்படி வருமானத்தை ஈட்டப்போகிறது. இது தொடர்பாக கண்காட்சியில் பங்கு பற்றிய விற்பனையாளர் ஜெயபிரதாவை கேட்டபோது “நான் நீண்ட காலமாக இத்தொழிலை செய்து வருகின்றேன். எனது வாழ்வாதார தொழிலாக இருப்பதுடன் ஒழுங்கமைப்பாளரின் இவ்வாறான கண்காட்சி விற்பனை ஊடாக அதிக இலாபத்தை பெற்றுக் கொள்ள முடிகின்றது என்றார். விற்பனை செய்யும் பூங்கன்றுகளுக்கு எந்த விதமான இரசாயனப்பதார்த்தங்களும் பாவிப்பதில்லை, இயற்கையான பசளைகளுடனே வளர்க்கின்றேன்” என திடமாகக் கூறினார்.

இந்த தாவரக் கண்காட்சியை 6 ஒழுங்கமைப்புக் குழுக்கள் சுழற்சி முறையில் நடாத்துகின்றன. ஆறுமாதத்திற்கு ஒருதடவை இக்குழுக்கள் கூடி ஆலோசனை செய்த பின்னர் ஒரு குழு இக்கண்காட்சியை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும். இது தொடர்பாக நடைபெற்று முடிந்த கண்காட்சி ஒருங்கமைப்பாளர் சந்தனவிடம் (வயது 34) கேட்ட போது “ கண்காட்சி நடத்தும் இடமானது மாநகரசபைக்கு சொந்தமானபடியால் அவர்களுக்கு 30000 ரூபா கணக்கில் வைப்பிலிட வேண்டும். இத்தொகை ஆறு மாதத்திற்கு பின்னர் மீளளிக்கப்படும். வாடகையாக 108330 ரூபா கொடுக்க வேண்டும். இந்நிகழ்வானது 4 நாட்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. வியாழன் 10.30 இலிருந்து ஞாயிறு இரவு 12 மணிவரை இடம்பெறும். விளம்பரங்கள் மும்மொழி ஊடகங்கள் மூலமும் சுவரொட்டிகள் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாது 2000 பேருக்கு தபால் மூலம் தனிப்பட்ட அழைப்பும் விடுக்கப்பட்டது.

ஓவ்வொரு விற்பனையாளருக்கும் 10 ஒ 15 அளவில் இடம் வழங்கப்படுகிறது. அதற்கு 4000 ரூபா அறவிடப்படுகின்றது. அவர்களுக்கான கொட்டகை, நீர்வசதி, மின்சார வசதி இலகுவாக வழங்கப்படுகின்றது. இதனால் இவர்கள் 4 நாட்களும் இலகுவாக பூங்கன்றுகளை பராமரிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் இவ்வாறான கண்காட்சி நடாத்தப்படும் போது 700 முதல் 1000 பேர் தான் மொத்தம் 4 நாட்களில் கண்காட்சியை பார்;க்க வருவார்கள். ஆனால் இன்றைய காலப்பகுதியில் ஒரு நாளைக்கே 1000 பேர் வருகிறார்கள். மகிழ்ச்சியாக இருப்பதுடன் பிரயோசனமான நிகழ்வாகவும் இக்கண்காட்சி இருப்பதாகத் தெரிகிறது. செவ்வரத்தை, மல்லிகை, றோசா போன்ற பூச்செடிகளை அதிகம் யாழ்ப்பாணத்தவர்களே விரும்பி வாங்குகின்றனர். அதற்கான கேள்வியும் கூடுதலாக காணப்பட்டது. இந்த வகையான பூங்கன்றுகள் நுவரெலியாவிலிருந்து தான் கொண்டுவரப்படுகின்றன. சமாதான காலங்களில் வடக்கிலிருந்தும் வித்தியாசமான பூங்கன்றுகள் இங்கு கொண்டு வரப்பட்டன” என்றார்.

சந்தன கட்டானவில் வசிக்கின்றார். தன் தாயார் 5 பேர்ச்சில் இந்தத் தொழிலை மேற்கொண்டுவந்த காலத்தில் தனக்கு 24 வயது இருக்கும் பொழுதே இத்தொழிலை பழகி தற்பொழுது 3 பரப்பில் பெரிய பூந்தோட்டத்தை செய்து வருவதாக தன்னைப்பற்றிய சிறிய அறிமுகத்தை செய்தார்.

பலவகையான கொய்யா, தோடை, பாக்கு, நீர்ச்சட்டிகளில் தாமரை மற்றும் அல்லி என்பவையும் பல வர்ணங்களில் பூங்கொத்துக்களும் பூங்கன்றுகளும் விற்பனைக்காக விழித்திருந்தன. அதுமட்டுமல்லாது மரக்கறி விதைகளும் கன்றுகள் நாற்றுக்களும் வைக்கப்பட்டிருந்தன.

பூங்கன்றுகளை வாங்கி வைத்தால் மட்டும் போதாது. அவற்றை பராமரிப்பது அதைவிட முக்கியமானதொன்றாகும். அதற்காகவே கண்காட்சியின் ஒருபகுதியில் இதற்கான உபகரணங்கள், மருந்துவகைகள், கிருமிநாசினிகள் போன்றன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல வகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சாடிகளும் காணப்பட்டன. பல வகைத்தாவரங்களில் மனம் தாவிக்கொண்டிருந்தாலும் ஒரு நாள் நாணியாக உலகை ஆளும் பூக்களை இரசித்ததும் பார்த்ததும் மனதுக்கு சந்தோசமாகத் தான் இருந்தது. பூங்கன்றுகளின் விலைகளும் கைகளில் உள்ள பணத்தை சுரண்டவில்லை. விரலுக்கேத்த வீக்கமாக இருந்தது.

ஒருதுண்டு நிலம் கூட வாங்க முடியாத கொழும்பில் பூங்கன்று வியாபாரம் அமோகமாக நடைபெற்றது என்றால் வரவேற்கக் கூடிய விடயம் தான். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் தொடர்மாடிகளில் வசிப்பவர்கள் கூட பல கட்டுப்பாடுகளையும் மீறி பூங்கன்றுகளை பராமரிக்கிறார்கள். இவ்வாறான வித்தியாசமான நிகழ்வுகளை எதிர்பார்த்து வரவேற்கிறது ரசிகர்களின் உள்ளங்கள்.