1977இற்குப் பின்னர் முதற்தடவையாக 2009இல் நடைமுறைக்கணக்கு மிகையொன்றினைப் பதிவு செய்யவிருக்கின்றது.



ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 2.8சதவீதத்தால் அதிகரித்த போதிலும் 2009 நவம்பர் இறுதியளவில் பதிவு செய்யப்பட்ட ஏறத்தாழ 4 சதவீதமான ஆண்டுச் சராசரிப் பண வீக்கத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு பண வீக்க அழுத்தங்கள் தொடர்ந்தும் மடடுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.பண வீக்கத் தோற்றப்பாடு தொடர்ந்தும் சாதகமானதாகவுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்து வரும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய அபிவிருத்தி நாட்டின் ஏனைய பகுதிகளுடன் அவை ஒருங்கிணைவதனை அதிகரித்து நாட்டில் பொருட்கள் மற்றும் பணிகளின் நிரம்பலை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.உள்நாட்டுப் பொருளாதாரத்தில் இடம் பெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற சாதகமான நிரம்பல் பக்க அபிவிருத்திகள் பண வீக்கத்தில் சாதகமான தாக்கத்தினை முன்னெடுத்துச் செல்லும்.
ஏற்றுமதி வருவாய்களிலான வீழ்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து இறக்குமதிச் செலவீனங்களிலான உயர்ந்த வீழ்ச்சி 2009இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையினைக் கணிசமான அளவிற்கு சுருக்கமடையச் செய்வதற்கு வழிவகுத்தது.


வர்த்தக மற்றும் வருவாய் கணக்குகளின் திரண்ட பற்றாக்குறைகள் நடைமுறை மாற்றங்கள் மற்றும் பணிகள் கணக்குகளிற்கான உயர்ந்த உட்பாய்ச்சல்களினால் ஈடுசெய்யப்பட்டு 2009 இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் நடைமுறைக் கணக்கு 393 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மிகையொன்றினைப் பதிவு செய்வதற்கு வழிவகுத்தது. இந்தச் செயலாற்றுகை நான்காம் காலாண்டிலும் தொடரும் எனவும் 1977இற்குப் பின்னர் முதற்தடவையாக 2009 இல் நடைமுறைக்கணக்கு மிகையொன்றினைப் பதிவு செய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது நிலவுகின்ற மிகவும் சாதகமான முதலீட்டுச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்தில் படிப்படியான மீட்சி மற்றும் மத்திய வங்கியின் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைமை என்பனவற்றின் உதவியுடன் உள்நாட்டு பொருளாதாரச் செயற்பாட்டிற்கான வாய்புக்கள் மேம்பாடடைந்துள்ளன.எனவே சந்தை வட்டி வீதங்களிலான வீழ்ச்சி மற்றும் நிதியியல் சந்தைகளின் மிகவும் ஸ்திரமான நிலைப்பாடுகள் போன்றவற்றிலான மிகவும் சாதகமான கொடுகடன் நிலைப்பாடுகள் என்பனவற்றின் காரணமாக கொடுகடன் பாய்ச்சல் படிப்படியாக உயர்வடையுமென எதிர்பாக்கப்படுகின்றது.நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்களிலான அதிகரிப்பு மற்றும் தொடர்ந்துவரும் காலப்பகுதியில் தனியார் துறைக்கான கொடுகடன் பாய்ச்சல்களின் சாத்தியமான உயர்வு போன்றவற்றினால் விரிந்த பண நிரம்பல் மேலும் விரிவடைவதற்கான சாத்தியமுள்ள போதிலும் இவ்வாண்டிற்கானதும் அடுத்த ஆண்டிற்கானதுமான நாணய இலக்குகளினைக் குறித்துரைக்கும் போது இந்த விரிவாக்கம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.



அபிவிருத்திகளை கருத்திற் கொண்டு நாணயச்சபை 2009 டிசம்பர் 11ம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் தொடர்ந்தும் பேணிக் கொள்வதற்கு முடிவு செய்துள்ளது.இதன் படி மீள் கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள் கொள்வனவு வீதம் முறையே 7.50சத வீதமாகவும் 9.75சத வீதமாகவும் இருக்கும்.


நாணயக் கொள்கை மீதான அடுத்த அறிக்கை 2010 ஜனவரி 19ம் திகதி வெளியிடப்படும்.