நவநாகரீக உலகில் காதல் என்ற போர்வையில் வணிகம் செய்யாதீர் வாலிபத்தை....
காதல்….காதல்….என எங்கே எப்போது பார்த்தாலும் காதல் இருந்து கொண்டே இருக்கிறது. காதலின் துடிப்பு தான் பூமிப்பந்தை இயங்க வைக்கிறது. சினிமா, தொலைக்காட்சி, நாவல், பத்திரிகை என்று அனைத்து ஊடகங்களையும் இயங்க வைக்கும் அடிப்படைக்காரணியாக இது அமைகிறது. காதல் என்பது இன்றைய நவீனயுகத்திலும் இளைஞர்களை இயக்கும் தாரக மந்திரம் என்பது மறுப்பதற்கில்லை.

சரி காதல் என்றால் என்ன?
விஞ்ஞான ரீதியாக நோக்கினால் உடலில் ஏற்படும் ஹோமோன் மாற்றங்களின் செயல்பாடுகள் தான். இது ஈசியான பதில் கூட….வேறு சிலரோ “ வேறு வேலையில்லாத் தொழில்”என்பார்கள். உண்மையில் காதல் என்பது நம்பிக்கை, அன்பு, நட்பு, பொறுப்பு, புரிந்துணர்வு என்ற ஐந்து தூண்களின் மீது அமைக்கப்பட்ட அழகிய பளிங்குமாளிகை. காதலில் பொறாமை, நம்பிக்கையீனம், சுயநலம் போன்ற வியாதிகள் இருக்காது.

காதல் என்பது உங்கள் இதயத்தை அப்படியே மற்றவரிடம் எவ்வித நிபந்தனையும் இல்லாது தூக்கிக்கொடுப்பதாகும். இதயம் அங்கே பத்திரப்படுத்தப்படும் என உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். காதலில் இருப்பவர்கள் சந்தோஷமாக ஆணித்தரமான நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் காமத்தில் விழுந்தவர்கள் தங்களைப் பார்ப்பதற்குக்கூட அருவருப்பார்கள். இதுவே யதார்த்தம். காதல் எதையும் கேட்காது கேட்காமலே எதையும் கொடுக்கத்துணியும்.

முதல்பார்வையில் காதல் என்பது பெரும்பாலும் டீன்ஏஜ் வயதில் ஏற்படும். இது முக்கியப்படுத்துவது முக அழகையும் எதிர்பாலாரின் செயற்பாடுகளையும் தான். பருவமடைந்த காலங்களில் மனதிலும் உள்ளத்திலும் புது அழகு தேங்கிக்கிடந்து எதை எதையோ எல்லாம் தேடிக்கொண்டிருக்கும். அப்போது கண்ணுக்கு தெரிவதெல்லாம் அழகாகவும் வர்ணிப்பதற்குரியனவாகவும் தோன்றும். அனைத்தும் உங்களுக்கே உரித்தானது நான் அதை செய்தாலோ எடுத்தாலோ என்ன? என்ற எண்ணம் கூட உள்ளத்தில் உருளும். மிகவும் உற்சாகமானதும் அதே வேளை இக்கட்டான சூழ்நிலையிலும் மாட்டிவிடும் காலகட்டப்பருவம். என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் காதலில் மிகவம் அவதானம் தேவை.

ஸ்கூல், கம்பஸ், அலுவலகங்களில் ஆண்கள், பெண்கள் இருவரும் நட்புக்கொள்வார்கள். இந்த நட்பில் நல்ல நம்பிக்கை வேரூன்றியிருக்கும். இதில் எல்லோரும் காமத்துடன் இருப்பார்கள் எனக் கூறமுடியாது. இங்கு அன்பும் பொறுப்பும் இருக்கும். ஆனால் இது உண்மைக் காதல் இல்லை எனலாம். மற்றொரு புறம்….
அதிதீவிரமாகக் காதலில் இறங்குபவர்களும் உண்டு. இவர்களுக்கு சமூகம் பற்றிய அக்கறை இல்லை. முழு நேரத்தையும் காதலுக்காகவே செலவிடுவார்கள். இங்கு காமமும் இல்லை. எதிர்கால நோக்கம் இல்லை. அப்போது இது உண்மைக் காதலாகவும் இருக்காது. சிலர் பொழுதுபோக்கிற்காகவே காதலிப்பவர்கள். காரணம் தன்னைப் பற்றி சுற்றத்தில் உள்ளவர்கள் பெருமையாக கதைப்பார்கள் என நினைத்து போலி முகமூடி அணிவார்கள். காதலுக்காக இங்கு பொறுப்பு என்ற சொல்லுக்கு இடமே இல்லை. உண்மைக் காதல் துளிர்விட சாத்தியமும் இல்லை.

முட்டாள் தனமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள். அதாவது எவ்விதத்திலும் பொருந்தாக்காதல். அதாவது பெரிய ஸ்டார்களை விளையாட்டு வீரர்களை சுப்பர்மான்களை அதிதீவிரமாகக் காதலிப்பார்கள். பலர் தமது காதலை சொல்லாமலே மனதில் பூட்டிக்கொள்கிறார்கள். இது ஒரு வகையான குருட்டுத்தனமான காதல் தான். என்றுமே நிஜமாகாது என்றும் இது நினைவிலிருக்கட்டும். இங்கு உண்மைக்காதலுக்கு இடமில்லை.

உறவுகளுக்குள் சிலர் மீது காதல் இருக்கும். இங்கே சேர்ந்தே பொறுப்பும் இருக்கும். விசுவாசம் இருக்கும். அத்துடன் நம்பிக்கையின் உச்சக்கட்டத்தைப் பார்க்கமுடியும். ஆனால் காமத்தின் வாசல் நிரந்தரமாகவே அடைக்கப்பட்டிருக்கும். இதனை அன்பு என்றுதான் வரையறுக்கலாம். காதல் எனப்பொருள்படமுடியாது.

இயைபான காதல்முதலில் நம்பிக்கையுடன் தான் தொடங்கும். பொறுப்ர்ணர்வு தான் அச்சாணியாக இருக்கும். அதன் பின்னரே காமத்திற்கான சாரல் தூறத் தொடங்கும். இக்குணங்கள் சம விகிதத்தில் கலக்கப்படுமானால் இங்கு நிச்சயமாக உண்மைக்காதலுக்கான கரு உருவாகிறது. காதலுக்கும் காமத்திற்கும் பெரிய அளவில் தொடர்பில்லை. நட்பும் காதலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். எங்கு வேறுபடுகிறதென்றால் எந்தப்புள்ளியில் பொறுப்பு அதிகமாகிறதோ அந்தப்புள்ளி காதல் எனும் தொடர்கதையை வரைகிறது. ஆனால் இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் மயிரிழை தான்.

முதல் பார்வையில் காதல் வரவேண்டும் என்பது விதியல்ல. ஆரம்பத்தில் பிடிக்காதவர்கள் கூட பழகும் சூழ்நிலைகளினால் காதலர்களாகக்கூடும். அழகான இருவருக்குத் தான் காதல் வரும் என்றில்லை. இது எவருக்குள்ளும் நுழையக் கூடும். ஏதோ ஒரு வழியாக வந்த பின்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அது வரை உயிரைப்படாத பாடு படுத்தும். முதல் பிரசவத்தை விட வலியானது ஆனால் அதை விட சந்தோஷமானது. அடிக்கடி சந்திக்காதவர்களிடம் காதல் தோன்றுவதற்கு சாத்தியம் குறைவாகவே உள்ளது. எப்போதும் ஏதோ விதத்தில் சந்தித்துக் கொள்பவரிடம் ஏதோ விதத்தில் காதல் உள்ளிறங்கத் தொடங்குவதற்கான சாயல் காணப்படுகிறது. ஆனால் இன்றைய அவசர உலகத்தில் இருந்து சாப்பிடக்கூட நேரமில்லாத போது காதலும் அந்த நிலையில் தானே இருக்கும். கண்டதும் காதல் …… என்ற போக்கில் பொழுது போக்கற்காகவே போகிறது. இது இறுதியில் உண்மையாகா விடில் உயிரைத் திருடி விடுகிறது.

இது மிகவும் நகரங்களில் தனது வித்தையை இளைஞர் உள்ளங்களில் விதைத்த வண்ணம் இருக்கிறது. அதற்கேற்ற படி சிந்திக்காத இளைஞர்களும் சிந்தனைகளைத் தொலைத்து தம்மை அதற்கே அதற்கே அடிமையாக்குகிறார்கள். இப்படியான காதல் மெல்ல மெல்ல கிராமங்களையும் தனக்கேற்றபடி கிள்ளிப்பார்க்க நினைக்கிறது. இதுவே நிதர்சன உண்மை.

இப்போது சொல்லுங்கள் உங்கள் காதலின் நிலை எனது எந்த வரிகளில் வந்து சேர்கிறது???....?