நீங்கள் எத்தனை தரம் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும்போது இந்தமாதிரியான தலைப்புகளின் கீழ் கட்டுரை எழுதி இருப்பீர்கள்? சூரியன் உதிப்பதையும், பறவைகள் கீச்சிடுவதையும், கோயில் மணி கேட்கிறது, என்பதையும் கேட்டமோ பார்த்தமோ தெரியாது. ஆனால் தலைப்பு சொன்னவுடன் இந்த வரிகளை போட்டு விடுவோம். அப்போது எதை சொன்னாலும் நம்பிக் கொள்ளும் பருவம். எதிலும் உடனே மனம் தாவிக்கொள்ளும் மனநிலை இருந்தது. அந்தப் பருவத்தை அனுபவித்துத் தான் எல்லோரும் வந்திருப்போம்.
ஆசிரியர் சொன்னவுடன் எழுதவேண்டும் என்று முந்தியடிப்போம். “ரீச்சர்….ரீச்சர் …” என்று கத்தியே ஆசிரியரைக் கொன்று விடுவோம். காலைக்காட்சி என்றவுடன் கடலிலோ அல்லது மலைமுகட்டிலோ சூரியன் தோன்றுவதைத் தான் யோசிப்போம். காலைக் காட்சியைக் கீறச்சொன்னால் கூட அதைத் தான் செய்வோம். அடுத்த கட்ட நகர்வாக பறவைகள் கத்துவதைத் தான் நினைப்போம். கிளி கத்துமா முதல்ல, காகம் கத்துமா என இரண்டு பக்க மூளையாலும் யோசிப்பம். அதையும் எழுதினாப் பிறகு ஒருக்கா பக்கத்தில உள்ளவையின்ர கொப்பியை எட்டிப் பார்ப்பம். ஏனெண்டால் அவன் என்ன விட கூட எழுதீட்டானோ என்று பார்க்க……. ‘கோயில் மணி கேட்டது…. அக்கா பூக்கூடையுடன் கோயில் போகிறாள்….. பள்ளிக்கு மாணவர்கள் செல்கிறார்கள்….’ என்றெல்லாம் ஏதோ எழுதி முடிச்சிடுவம். அதுக்குப் பிறகு என்ன…? “ரீச்சர் …….ரீச்சர்… என்ட கொப்பியைப் பாருங்கோ…” என்று எழும்பி கத்துறது தான்…
ஆனால் இண்டைக்கும் அப்படியா என்றால் என்ன சொல்வது…? அவன் திறந்திருக்கும் எல்லா ரியூசனுக்கும் போட்டு கடைசியா ஓகன் கிளாசுக்கும் போட்டு வந்து படுக்க எட்டு ஒன்பது மணியாகிடும். விடிய வான் காரனுக்காகவாது எழும்ப வேண்டும். ஏழரை பள்ளிக் கூடத்துக்கு ஆறு மணிக்கே வந்திடுவான். அதில ஏறினால் பிள்ள எங்க சூரியனப் பார்க்கிறது சிக்னல் லைட்டையும் traffic யையும் தான் பார்க்கலாம். காகத்தை எங்க பார்க்கிறது……பிறகு எப்படி கோவில் மணி….?

ரீச்சர் காலைக் காட்சி எழுதச் சொன்னால் அவனின் கட்டுரை எப்படித் தொடங்கும். நீங்கள் சிந்தியுங்கள்…………… முடியுமாக இருந்தால் உங்கள் பிள்ளையின் கொப்பியைப் பாருங்கோ……