எல்லா நாடுகளும் எதிர்நோக்கும் பிரச்சினையாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினை தான். சில நாடுகள் வறுமையிலும் சிக்கித் தவிக்கின்றன.
சர்வதேச பொருளாதார நெருக்கடி வறுமை ஒழிப்பில் ஆசிய நாடுகள் அண்மைக்காலமாக கண்டு வந்த முன்னேற்றங்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் பிராந்தியத்தில் மேலும் 2 கோடியே 10 இலட்சம் மக்களை வறுமைக்குள் தள்ளியிருக்கிறது என்ற அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டதாகும்.

“உலகளாவிய நிச்சயமற்ற நிலை யுகத்தில் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைதல்” என்ற தலைப்பிலான அறிக்கை சர்வதேச பொருளாதார மந்த நிலை ஆசிய பிராந்திய நாடுகளில் வாத்தகத்தை தளர்வடையச் செய்திருக்கின்றது. ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை மூலமான வருமானங்களைக் குறைத்திருப்பதுடன் வேலையில்லாத் திண்டாட்ட மட்டங்களையும் கடுமையாக அதிகரித்திருக்கின்றது.

உலகில் கடுமையான வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைப்பது தொடக்கம் எச்.ஐ.வி பரவலைத் தடுத்தல் மற்றும் சகலருக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவது வரை பல இலக்குகளை 2015 ஆம் ஆண்டளவில் எட்டுவதே இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐ.நாவினால் வகுக்கப்பட்ட மிலேனியம் அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும்.

ஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலையின் தாக்கங்கள் முதலில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் ஏற்படுகின்ற கடுமையான அதிகரிப்பினால் உணரக் கூடியதாக இருக்கின்றது. ஆசிய பசுபிக் பொருளாதாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. இதன் விளைவாக வேலைவாய்ப்புக்களும் தொழில் உருவாக்கங்களும் குறைவடையப் போவதுடன் அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான குறைப்புக்களை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. வறுமை அதிகரிப்பதுடன் சுகாதாரம் மற்றும் கல்வியின் தரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டு மிலேனியம் அபிவிருத்தி இலக்கு பின்னடைவை எதிர் நோக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

பொதுப்படையாக ஆசிய மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் சில நாடுகளில் அந்த முன்னேற்றம் மெதுவானதாகவே இருக்கின்றது. இந்தப் பிராந்தியம் உலகின் வறியவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்களையும் கொண்டதாக இருக்கின்றது.
இந்தியாவில் மாத்திரம் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். 1990-2005 கால கட்டத்தில் 150 கோடியில் இருந்து 97 கோடி 90 இலட்சமாகக் குறைத்துள்ளது. வறுமை மட்டத்தை 60 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைத்து சீனா அபாரமான முன்னேற்றத்தை காட்டியது.

ஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாகப் பெருமளவில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டதன் விளைவாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் “புதிய வறியவர்கள்” உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆசியாவில் வேலையில்லாமல் தவிப்பவர்கள் 2009ஆம் ஆண்டு 9 கோடி 80 இலட்சம் வரை அதிகரித்திருக்கின்றது.தொடர்ச்சியான வேலை இழப்பு போதிய சமூகப் பாதுகாப்பின்மையை மேலும் கூடுதல் எண்ணிக்கையான மக்களை வறுமையில் தள்ளிவிடக் கூடிய ஆபத்தான சூழ்நிலையை ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் எதிர்நோக்குகின்றன.