கல்கத்தா டெஸ்டில் இந்திய பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது போல் படுகின்றது. ஹஷிம் ஆம்லா, அல்விரோ பீட்டர்சன் சதம் அடிக்க, ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த தென் ஆப்ரிக்க அணி, பின் ஷாகிர், ஹர்பஜன் பந்துவீச்சில் சரிந்தது. முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்து திணறியது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. மிக முக்கியமான இரண்டாவது டெஸ்ட் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் அரங்கில் முதலாவது இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது.

இந்திய அணியில் பெரிதாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. விரிதிமன் சஹா நீக்கப்பட்ட நிலையில், அனுபவ லக்ஸ்மன் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில், முதுகுப் பிடிப்பால் அவதிப்பட்ட விக்கெட் காப்பாளர் பவுச்சருக்கு பதிலாக அறிமுக வீரராக அல்விரோ பீட்டர்சன் வாய்ப்பு பெற்றார். விக்கெட் காப்பாளராக டிவிலியர்ஸ் கடமையாட்டினார். நானயசுலட்சியில் வென்ற தென் ஆப்ரிக்க அணித்தலைவர் ஸ்மித், துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

விரல் காயத்தை பொருட்படுத்தாது களமிறங்கிய ஸ்மித்(4), ஷாகிர் பந்தில் பரிதாபமாக போல்டானார். இதற்கு பின் ஹஷிம் ஆம்லா, அல்விரோ பீட்டர்சன் இணைந்து கலக்கினர். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், இரண்டாவது விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் சேர்த்தனர். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த ஆம்லா, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் 60 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஹர்பஜன் சுழலில் அவுட்டாக தெரிந்தார். ஆனால், முதல் "ஸ்லிப்பில்' நின்ற லக்ஸ்மன் கைநழுவினார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஆம்லா, டெஸ்ட் அரங்கில் தனது 9வது சதம் கடந்தார். மறுபக்கம் அறிமுக டெஸ்டில் விளையாடிய பீட்டர்சன் முதல் சதம் எட்டினார். இவர் 100 ஓட்டங்களுக்கு ஷாகிர் வேகத்தில் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் ஆம்லாவும் (114), ஷாகிர் பந்தில் வெளியேற, தென் ஆப்ரிக்காவுக்கு சிக்கல் ஆரம்பமானது. தேநீர் இடைவேளைக்கு பின் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

போட்டியின் 68வது ஓவரை வீசிய ஹர்பஜன் முதல் பந்தில் பிரின்ஸ்(1) எல்.பி.டபிள்யு., முறையில் பெவிலியன் திரும்பினார். இரண்டாவது பந்தில் டுமினி(0) வெளியேற, "ஹாட்ரிக்' வாய்ப்பு காத்திருந்தது. ஆனால், மூன்றாவது பந்தை ஸ்டைன் தடுத்து ஆட, வாய்ப்பு பறிபோனது. போதிய வெளிச்சம் இல்லாததால் 9 ஓவர்கள் முன்னதாகவே முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் ஷாகிர், ஹர்பஜன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

நேற்று அபாரமாக ஆடிய 29 வயதான அல்விரோ பீட்டர்சன், 100 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆன்ட்ரூ ஹட்சன்(167, எதிர், வெ.இண்டீஸ், 1992), ஜாக்ஸ் ருடால்ப்(222 ரன், எதிர், வங்கதேசம், 2003) ஆகியோருக்கு பின் அறிமுக டெஸ்டில் சதம் அடிக்கும் மூன்றாவது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். சர்வதேச அளவில் 87வது வீரரானார்.

ஹர்பஜன், தனது ராசியான ஈடன் கார்டனில் மீண்டும் கலக்கினார். நேற்று டுமினியை வெளியேற்றிய போது, டெஸ்ட் அரங்கில் 350வது விக்கெட்டை பெற்றார். கும்ளே(619), கபில்தேவுக்கு(434) பின் இம்மைல்கல்லை எட்டும் மூன்றாவது இந்திய வீரரானார். டெஸ்ட் வரலாற்றில் 350 விக்கெட் வீழ்த்தும் 18வது வீரரானார்.