பதிவர்களை, குறிப்பாக இலங்கைப் பதிவர்களை ஊக்குவித்து வரும் யாழ்தேவி திரட்டியில் கடந்த வாரத்திற்கு முதல் வார நட்சத்திரமாக என்னை அறிவித்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றை தினக்குரல் ஞாயிறு பத்திரிகையில் ‘இணையத்தில் எம்மவர்கள்’ என்ற பகுதியிலும் என்னை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.


அந்தவகையில் யாழ்தேவி திரட்டியினருக்கு என் நன்றிகளை மீண்டும் ஒரு தடவை தெரிவித்துக் கொள்கின்றேன். நட்சத்திரம் என்ற அந்தஸ்து பதிவர்களை பொறுத்தவரையில் மணி மகுடம் தான். வலைப்பூவில் வாழ்த்தியவர்களை விட நேற்று பத்திரிகை பார்த்து வாழ்த்தியவர்கள் பலர். எல்லோருக்கும் நன்றிகள்.

நட்சத்திர வாரத்தில் தொடர்ச்சியாக பதிவு எழுதவேண்டும் என்ற, சிறு கட்டளையும் யாழ்தேவியால் வழங்கப்பட்டது. என்னால் நான்கு பதிவுகள் மட்டுமே எழுத முடிந்தது. அதுவும் இறுதி நாளில் இரண்டு பதிவுகள். எழுதிய நான்கு பதிவுகளும் வழமையான என் கட்டுரைப் பாணியிலான பதிவுகளாகவும் இல்லை. காரணம் நட்சத்திர வாரத்தில் எழுதியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் எழுதியது. அவ்வாறன பதிவுகளில் எனக்கு விருப்பமும் இல்லை. இனி தொடரவும் மாட்டேன். அதிக வேலைப்பளு நட்சத்திர வாரத்தில் வந்தது என் துரதிஷ்டமே!

காலை வாரிவிட்ட ‘ஜி.எஸ்.பி’ பிளஸ் கட்டுரை நேற்றைய தினக்குரலில் வந்தால் நல்லதென எதிர்பார்த்தேன். என் எண்ணமும் காலை வாரிவிட்டது. பரவாயில்லை. ஆனால் ‘நல்ல மனிதர்களை இழக்க முடியுமா?’ கட்டுரை 01.07.2010 இருக்கிறம் இதழில் வெளிவந்திருக்கின்றது. யாழ்தேவி நண்பர்கள் அதனைக் கவனமெடுத்திருக்கலாம். (பதிவுகளை தெரிவு செய்வது அவர்களைப் பொறுத்தது. எனவே இது பற்றி நான் எதுவும் குறைப்படவில்லை. என் பதிவுக்கு இரு அங்கீகாரங்கள்)