“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு”, “ ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்திற்காக சொல்லப்படும் விளைவுகளின் வழக்குகள் ஆகும். உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும் போது தன்னை அடக்குபவன். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உணர்ச்சி பூர்வமாக சுற்றுப்புறச் சூழல் சார்ந்த பல விடயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

நாம் சொல்வதை மற்றவர்கள் மதிக்காத போது, நம்முடைய பிரச்சினைகளை உரியவர்கள் உடனே சரி செய்யாத போது, நாம் சொல்வது தவறு என மற்றவர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது, எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது இப்படி கோபத்திற்கான பல காரணங்களை நீட்டிக் கொண்டே போகலாம்.

மனிதத்துவம் என்பது சமூகத்தின் ஒரு அங்கம். அத்துடன் மட்டுமல்லாமல் அது சமூகத்துடன் ஒன்றியிருப்பதாகும். ஒருவருக் கொருவர் அனுசரித்து, பாராட்டி, உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும். மனிதனின் வாழ்க்கையில் வெற்றிக்குத் தடையாகக் கூட கோபம் இருக்கலாம்.

கோபப்படுவதனால் எங்கள் சிந்தனை, கவனம், செயல் போன்றன ஒரு கணத்திலேயே சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நாள் திட்டங்கள், இலக்குகள் கூட சிதைந்து போகக் கூடும். இனிமையான உறவுகளை இழக்கவேண்டிய நிலை வரும்.
இவ்வாறு எத்தனையோ நாசக்கார வேலைகளை செய்து விடுகிறது கோபம். கோபம் போன பிறகு விளைவுகளை நாம் தான் அனுபவிக்க வேண்டும். அடிக்கடி கோபப்படுவதனால் ஆரோக்கியம் குறைவடையலாம். இருதய நோய்க்கு ஆளாகவேண்டி வரும். விரைவில் முதுமை வந்து சேர்ந்து விடும். அதிகமாக கோபப்படுவதனால் மூளையைத் தாக்கும் பக்கவாத நோயாலும் பாதிப்படையக் கூடும்.
கோபம் வரும் போது குறித்த மனிதன் தன்னிலையை இழக்கின்றான். இதனால் இருதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் கூடுகிறது. படபடப்பு தன்மை வருகிறது. எரிச்சல், தலைவலி போன்ற பிரச்சினைகளும் தோன்றுகிறது. வாழ்நாளில் ஒரு நாளாவது கோபப்படாமலே இருக்க முடியாது. கோபம் என்பது மனித உணர்வுகளில் ஒன்று தான். அதை குறைப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

கோபத்திற்கான முக்கிய காரணி வெறுப்பு. அதைக்கைவிட வேண்டும். கோபப்படும் போதெல்லாம் மற்றவரின் சூழ்நிலைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். கோபம் ஏற்படும் வேளை மனதை வேறு திசையில் திருப்ப வேண்டும். நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சுய கட்டுப்பாட்டை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். கோபம் வருகின்ற வேளை அதிகம் பேசாதீர். எவ்வளவு முடியுமோ அமைதியாக இருங்கள். (அதற்காக எல்லா விடயத்திலும் மௌனமாக இருக்க சொல்லவில்லை)

இவ்வாறு நடந்தால் கோபத்தைக் குறைக்க முடியும். நாங்கள் காலையிலேயே கோபப்பட்டு மனதைக் குழப்பினோமானால் அன்று முழுவதுமே வீண்பொழுது போல் ஆகிவிடும். கோபத்துக்கு ஆளாகும் எங்களுக்குத்தான் நட்டம். எப்போதும் விளைவுகள் எங்கள் பக்கமே! இன்றே புரிந்து கொள்ளுங்கள் கோபம் எங்கள் விரோதி.