குற்றத்தின் முடிவிடமாகவும் புதுவாழ்வின் ஆரம்ப நிலையமாகவும் , நிலையங்கள் வர்ணிக்கப்படுகின்றன. சட்டத்தை மீறுபவனும், தடுத்து , தண்டிக்கப்படுபவர்களும் ஒரே பார்வையில் கொண்டு நடாத்தப்படும் நிலையமாக சிறைச்சாலைகள் விளங்குகின்றன.ஒரு நாட்டில் நூலகம் ஒன்று திறக்கப்படும் போது சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என ஒரு கூற்றும் உள்ளது.அது எந்தளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்பது கேள்விக்குறி தான்.ஏனென்றால் நாட்டில் சிறைச்சாலைகளைக் கட்டுவதற்கே புதிய பதிய திட்டங்களை முன்வைக்கிறார்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.குற்றம் செய்த நபர் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவதன் நோக்கம் அவன் திருந்தி இனிவரும் காலங்களில் குற்றங்களை செய்யாதிருப்பதற்காகவே.ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதே வருத்தத்திற்குரியது.

சிறு குற்றம் செய்ததற்காக உள் சென்றவன் அங்குள்ள பெரிய குற்றவாளிகளுடன் சேர்ந்து குற்றம் புரிந்தும் பிடிபடாத முறையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய புதிய தொழில்நுட்ப முறைகளைக் கற்று மிகப்பெரிய குற்றவாளியாக வெளிவருகின்றான்.இதுவே யதார்த்த உண்மையாகிறது.இதற்கு காரணம் தண்டனைகளுக்கேற்றமாதிரி சிறைச்சாலைகள் வடிவமைக்கப்படவில்லை.

சிறைச்சாலை என்றாலே எல்லோருக்கும் வித்தியாசமான எண்ணங்கள் தோன்றுவதுடன்ஒரு விதமான பய உணர்வும் காணப்படும்.அதை ஒதுக்கி விடப்பட்ட இடமாகவே கருதுகிறார்கள்.யாருக்கும் அங்கு செல்வதற்கு விருப்பமிருக்காது ஆனாலும் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தால் போகத் தான் வேண்டும்.

ஓவ்வொருத்தரும் பல இடங்களைப் பற்றித் தினம் தினம் சிந்திக்கிறார்கள்.பல பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார்கள்.ஆனால் சிறைச்சாலைகள் பற்றி யோசிப்பதில்லை உண்மையில் அங்கு தான் சமூகப்பார்வைகளைத் திருப்ப வேண்டியள்ளது.ஏனென்றால் மனிதம் சீரழிக்கப்படுகின்றது.குற்றவாளிகளை சமூகம் தண்டிக்க முன் சட்டம் தண்டிக்கிறது.அவ்வாறிருக்கையில் திருந்தி வரும் குற்றவாளிகளை சமூகம் தண்டிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

ஆரம்ப காலங்களில் அரசியல் கைதிகளையும் போர்க்கைதிகளையும் தேசத்துரோகிகளையும் பத்திரிகையாளர்களையும் அடைத்து வைக்கும் இடமாகவே சிறைச்சாலைகள் இருந்தன.1935ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஜேர்மனியில் டேச்சு எனும் இடத்தில் “டேச்சு கைதிகள் சிறைச்சாலைகள்”முதன் முதலாக நிறுவப்பட்டது.ஹிட்லரின் ஆட்சியின் போது இச் சிறையில் கொடுமைகள் நடந்ததாக கூறப்படுகிறது.20லட்சம் கைதிகள் இறந்துள்ளதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.நகரத்துக்கு வெளியே அமைந்துள்ளதால் இந்த சிறைபற்றி ஜேர்மனியர்கள் அதிகளவு அறியவில்லை.இவ்விடத்தைப் அணுகவோ படம் எடுக்கவோ விமர்சிக்கவோ அனுமதியளிக்கவில்லை. பணி புரிபவர்கள் கூட எச்சரிக்கையுடன் தான் செயற்பட்டார்கள்.ஜேர்மனியை 1939ல் 2ம் உலக போரில் நேச நாடுகள் அணியினரால் வீழ்த்திய போது ஐக்கிய அமெரிக்கா இராணுவத்தினர் அவ்விடத்து கைதிகளை விடுவித்தனர்.ஹிட்லரின் மனித உரிமை மீறலுக்கு சான்றாக இச் சிறைச்சாலை விளங்குகின்றது.

இவ்வாறே சிறைச்சாலை முறை அனைத்து நாடுகளிலும் மெல்ல மெல்ல பரவத்தொடங்கியது.இதே காலப்பகுதியில் ஆங்கிலேயர் காலணித்துவ ஆட்சிக்குட்பட்ட இலங்கையிலும் சிறைச்சாலைகள் நிறுவப்பட்டன.இலங்கையில் முதன் முறையாக வெலிகடையில் 1841ம் ஆண்டு சாதாரண விசாரணை நிலையமாக இருந்து காலப் போக்கில் உயர் பாதுகாப்பான சிறைச்சாலையாக நிறுவப்பட்டது.அடுத்து மஹரவில் 1875ம் ஆண்டு நிறுவப்பட்டது.முக்கியமானதில் இறுதியானது கண்டியில் போகம்பார எனும் இடத்தில் 1876ம்ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கையில் சிறைச்சாலை என்பது முக்கியமான தொன்றாகிறது.காரணம் அனைவருக்கும் தெரிந்ததே…… இலங்கையில் மொத்தமாக 31653கைதிகள் உள்ளனர்.ஆனால் நாட்டில் உள்ள அனைத்;துச் சிறைச்சாலைகளிலும் 10ஆயிரம் கைதிகளையே தங்கவைக்கும் வசதி உள்ளது.தற்போது மூன்று மடங்கு கைதிகளைப் பராமரிக்கிறார்கள்.இதனால் இயல்பாகவே பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.போதைப் பொருள் மது உள்ளிட்ட குற்றச்சாட்டு உடையவர்கள் 37% போதைப்பொருள் பாவனை காரணமாக இடம் பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் 60% அதாவது , கொள்ளை இவ்வகையான குற்றங்களாலே சிறையில் அடைக்கப்படுகின்றனர்.அதை விட 15000ற்கு மேற்பட்டோர் விளக்கமறியலில் உள்ளனர்.

அவர்களை விட இராணுவத்தில் இருந்து தப்பி இராணுவ நீதிமன்றம் ஊடாக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர்கள் 1506 கைதிகள்.இவர்களுக்காக நான்கு சிறைச்சாலைகள் உள்ளது.அதாவது பல்லேகல , கொழும்பு மற்றும் தெற்கிலும் நிறுவப்பட்டுள்ளது.தற்போது பல்லேகல மற்றும் வாரியபொல பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்றன.


இந்தச் சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கு அரசு தினமும் ஒருவருக்கு 250 ரூபா செலவிடுகின்றது. ஆத்துடன் குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்களும் கைதிகளாக உள்ளனர். ஒரு சிறைச்சாலைக்கு ஐவர் வீதம் குழந்தைகளுடன் உள்ளனர். அவர்களுக்காக விசேட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் அபிவிருத்தி பாதிக்கப்படுவதுடன் குற்றச்செயல்களும் அதிகரிக்கின்றது. காரணம் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரிக்கும். வழக்குகளும் துரிதமாக மேற்கொள்ளாமல் தேங்கியே கிடக்கிறது. இதனால் மனித வளங்களும் வீணடிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஒருபுறம் இருக்க மறுபுறம் சிறைக்கு போனவர்கள் சடலங்களாக வெளிவருகின்றார்கள். இந்த மரணங்கள் நிகழ்வது அனைவரையும் திகைப்படையச் செய்கின்றது. 2000 ஆண்டிலிருந்து 2009 ஜுலை 13ஆம் திகதி வரை 1213 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர். என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.30 கைதிகள் உட்பட 2009ம் ஆண்டு 8 பேர் தப்பி ஓடும் போது மரணமடைந்துள்ளனர்.
2000ம் ஆண்டு 75 பேர்
2001ம் ஆண்டு 83 பேர்
2002ம் ஆண்டு 122 பேர்
2003ம் ஆண்டு 95 பேர்
2004ம் ஆண்டு 139 பேர்
2005ம் ஆண்டு 145 பேர்
2006ம் ஆண்டு 141 பேர்
2007ம் ஆண்டு 157 பேர்
2009ம் ஆண்டு 85 பேர்

குற்றங்களுக்காக அடைத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் வேறு காரணங்களுக்காக மரணமடைவது சரியான செயற்பாடு அல்ல இதற்காக சட்டமானது தன்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமே தவிர குற்றம் செய்தவர்களை புனர்வாழ்வு அழிக்கும் இடத்தை மரணங்கள் மலிந்த இடமாக மாற்றக்கூடாது. இவற்றை தவிர்க்க சரியான முறையில் சிறைச்சாலைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இல்லையேல் குற்றவாளிகள் கூட சிறைச்சாலைகளை பொருட்படுத்த மாட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகளாளேயே சிறைச்சாலைகளின் எண்ணக்கரு சிதைவடைந்து விமர்சனத்திற்கு உள்ளாகின்றது.