பெற்றோர்கள் தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு, இந்த எல்லையைத் தாண்டி பறக்கச் சிறகுகள் தருபவர்கள் தான் இந்த நண்பர்கள். அவர்கள் தான் நம் உயரத்தை அளக்கும் அளவு கோலாக உள்ளனர். உள்ளங்களைப் புரிந்து கொள்ள எம்மை உவகையுடன் ஊக்குவிக்கிறார்கள். வாழ்வின் வெற்றி என்பது, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதிலேயே தங்கியுள்ளது. வாழ்வின் வெற்றி கூட அதுவாக இருக்கலாம். இந்தத் தேடல் எல்லோருக்கும் வெற்றி அளிப்பதில்லை. எமது ஒவ்வொரு ஏற்றங்களுக்கும் தாமே ஏணியாகத் தம்மை அர்ப்பணிப்பவர்கள் தடம் மாறி விழும் போது கூட மண்ணில் விழ விடாது தமது கரங்களில் ஏந்திக் கொள்கிறார்கள். மீண்டும் தடம் பதிக்கத் தட்டிக் கொடுக்கிறார்கள். பூமியின் மீது புன்னனைப் பூக்களைப் படரவிட்ட அனைவருமே நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தார்கள். தவறான நண்பர்கள் கிடைத்தால் அந்த நிலைமையைச் சொல்ல என் பேனா முனை தயங்குகின்றது.

எல்லா உறவுகளும் நட்பில் முடிவதே, உறவுகளின் கடைசி அத்தியாயம். நாம் நல்ல உள்ளங்களைத் தேர்ந்தெத்து இதயத்தின் பள்ளங்களை இனிமையாக நிரப்ப முற்பட வேண்டும். தங்களைத் தாங்களே நேசிப்பவர்கள் தங்கள் நண்பர்களைக் கண்ணாடியாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம் தங்களே விம்பமாக பிரதிபலிக்கக் கண்டு மகிழ்கிறார்கள். அதாவது உங்கள் நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணாடியைப் போல் வெளிப்படையாகவும் தூய்மையான அன்புடனும் இருக்க வேண்டும். உயர்ந்தவற்றை நேசிக்க வேண்டும்.

இவ்வாறு நேசிப்பவர்கள் தங்கள் நண்பர்களை ஓவியமாக நேசிக்கிறார்கள். அவர்களிடம் தம்மை அனுசரிப்பதற்காக சிற்பங்களைச் செதுக்குகிறார்கள். வைராக்கியத்தைக் கற்றுத்தரும் நட்பு வாய்க்கப்பெற்றவர்கள் விடா முயற்சியுடன் வீரமாய் வாழ்க்கையில் போராடுகிறார்கள். நாம் பழகுபவர்கள் எல்லோரும் தோழர்களாக முடியாது. வசதியைப் பார்த்து நட்பு வரக்கூடாது. பொருளுக்காக உண்டாகும் போகம் அல்ல நட்பு. அன்பின் அத்திவாரமாய் எழுப்பப்படும் கோபுரம் தான் நட்பு. உண்மையான நண்பர்களானால் நாம் பூவாகும் போது மெல்ல வருடும் தென்றலாக வேண்டும். அவர்கள் தீயாகும் போது நாம் குளிர் ஓடையாக வேண்டும். இவ்வாறான பண்புகளே மீண்டும் நட்பை உயிர் பெறச்செய்து வாழவைக்கிறது இப்பூமியிலே….

நண்பர்கள் நம் உலகத்தை வித்தியாசப்படுத்தி புது வரவாக எம்மை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் ஒன்று அவர்களே உலகமாகக் கூடாது. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம். பகிர்தலும், பரிமாறுதலும், பரவசங்களும் பழக்கங்களாகட்டும்.

எனது நட்பை கடற்கரையில் எழுதினேன். அலை அடித்துச் செல்லவில்லை, படித்துச் சென்றது. நான் தயார் நண்பர்களே! நீங்கள் எப்படி….?