வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் என்னைச்சேரும்… என்னங்க உல்டா பாட்டெண்டு நினைக்கிறீங்களா? உண்மையைச் சொன்னன்… காதலர் தினத்தை முன்னிட்டு ‘த ஐலண்ட்’ ஆங்கில நாளிதழ் நடத்திய போட்டியொன்றில் அதிர்ஷ்டசாலி வாசகர்களில் ஒருவராகத் தெரிவானேன். அவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ‘ஹோல்பேஸ் ஹொட்டலில்’ வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ‘டன்கொட்டுவ’ நிறுவனத்தினர் வழங்கிய ரூபாய் _ _, 000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் எனக்குக் கிடைத்தது. (காணொளிகளில் கடைசி)




சரி! விடயம் முழுமையாக…

தொழில் நிமித்தம் எனது வேலைகளில் ஒன்று, மும்மொழி பத்திரிகை செய்திகளையும் வாசித்து செய்தி சேகரித்தல். பொதுவாகவே எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்கின்றது. இவ்வாறு பத்திரிகைகளில் வெளிவரும் பரிசுப்போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுப்பது. பரிசு கிடைப்பது, கிடைக்காதது பற்றியெல்லாம் கவலையில்லை. இவ்வாறிருக்கையில் ‘த ஐலண்ட்’ பத்திரிகையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு போட்டி வைத்தார்கள். அதற்கும் அனுப்பினேன். என்னுடன் இணைத்து என் நண்பர்கள் மூவருக்கும் அனுப்பினேன். என் அதிர்ஷ்டமோ, அவர்கள் துரதிஷ்டமோ தெரியவில்லை. பரிசுத்தொகை எனக்கே விழுந்தது. (என் நல்ல மனசுக்காக்கும்…)

என்னால் நம்பவே முடியவில்லை. அந்த வேகத்தில் தான் ஒரு பதிவெழுதியிருந்தேன் எனது நண்பியைச் சாட்டாக வைத்து ‘’. ஐந்நூறு ரூபா கூட விழாத எனக்கு இத்தனையாயிரமா?.... பரிசளிப்பு வைபவம் 12.03.2010 அன்று ஹோல்பேஸ் ஹொட்டலில்… பரிசா, காசா, வவுச்சரா… ???? குழம்பியவாறே… எதுவானாலும் பறவாயில்லை.

றோமியொ, ஜூலியட் படங்களுடன், சிவப்பு – வெள்ளை பலூன் அலங்காரத்துடன் ஹோல்பேஸ் ஹொட்டல் ‘ஜூப்லி’ ஹோல் பளபளத்தது. வர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபம். சுமார் 200 பேரளவில் அமர்ந்திருக்கக் கூடிய மேசை அணிவகுப்புக்கள். ஒரு பக்கத்தில் மேற்கத்தேய இசைக்குழு… மாலை ஆறுமணிக்கு ஆரம்பமாகும் எனக்கூறிய நிகழ்வு 7 மணியளவில் தான் ஆரம்பமாகியது.

அதிஷ்டசாலி நேயர்கள் 20 பேரில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நான் (பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் போட்டிக்கான தபாலட்டையை அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டார்கள்) எனக்கு கிடைத்த கடிதத்தை கொடுத்து வாசலில் பதிந்து விட்டு உட்கார்ந்தேன். மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த போட்டி நிகழ்ச்சிக்கு (பரிசுகளிற்கான) பல விளம்பரதாரர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்கள். குறிப்பாக ‘யூனியன் அசுரன்ஸ்’, ‘ஹட்ச்’, ‘நோலிமிட்’, ‘ஹமீடியா’, ‘டன்கொட்டுவ’, ‘பிறீமா நூடில்ஸ்’ என்பவற்றைக் கூறலாம்.

அதிஸ்டசாலியாக 20 பேரைத் தெரிவு செய்தார்கள். அதிலும் ஒரு போட்டி வைத்தார்கள். குழுக்கள் அடிப்படையில் முதல் இரண்டு இடத்தைப் பொறுபவர்களுக்கும் ‘மிகின் லங்கா’ வழங்கும் சிங்கப்பூருக்கான விமானப் பயணச்சீட்டு. மண்டபத்தில் நிகழ்ந்துவிட்ட இந்த சோதனையால் பதட்டத்துடனேயே நிகழ்ச்சி முடியும் வரை இருக்க வேண்டியதாயிற்று. தலைகீழாக 20ஆவது அதிஸ்டசாலியிலிருந்து குழுக்கல் முறையில் ஆரம்பித்தார்கள். 20 – 16 வரை பல ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொதிகளைக் கொடுத்தார்கள். அதில் நான் அடங்கவில்லை. சின்ன இடைவேளை விட்டு நடனங்களை அரங்கேற்றினார்கள். பின் மீண்டும் 15 – 11 வரையானவர்களை அழைத்தார்கள். அதிலும் நான் அடங்கவில்லை. அவர்களுக்கும் பரிசுப்பொதிகளே! எனக்கு படபடக்க தொடங்கிவிட்டது.

மீண்டும் ஒரு சிறிய இடைவேளை, புகழ்பெற்ற பாடகி (எனக்கு ஆளைத் தெரியவில்லை) பாடலிசைத்தார். பின்னர் உணவு இடைவேளை விட்டார்கள். ஐஸ் கோப்பியுடன் சிற்றூண்டிகள். கொத்துறொட்டியைக் கூட ‘ஒன் த ஸ்பொட்’ இல் சுடச்சுட போட்டார்கள். எனக்கு மனம் ஒன்றிலுமே லயிக்கவில்லை. மீண்டும் நிகழ்வு ஆரம்பமானது. நடனங்கள் மேடையை அலங்கரித்தன. 10 – 6 வரையான அதிஷ்டசாலிகளை தெரிவு செய்தார்கள். பரிசுப்பொதிகளைக் குறைத்து கிப்ட் வவுச்சர்கள் கொடுத்தார்கள். அதிலும் நான் அடங்கவில்லை.

‘அதிர்ஷ்டசாலியிலும் அதிஷ்டசாலி நான், எனக்கு மிகின் லங்கா எயார் டிக்கட் கிடைக்கப்போகுது’ எண்டு நினைச்சு நான் சந்தோசப்படுறதா, ‘ஐயோ! எனக்கு ஏதாவது கிப்ட்டை தந்து அனுப்புங்களேன்டா, சிங்கப்பூர் எல்லாம் வேண்டாம்’ என அழுகிறதா எண்டு தெரியாத நினைப்பு. இதுக்கிடையில வீட்டுக்கும், நண்பர்களுக்கும் அடிக்கடி தொலைபேசி அழைப்பெடுத்து ‘எனக்கு இன்னும் கிடைக்கல… கிடைக்கல’ எண்டு ரன்னிங் கொமன்றி வேற! என்ன செய்ய பதட்டம் தான். இடையில் ‘மிஸ்டர் பீன்’ போல உருவமுடைய ஒருவரது நடனம் இடம்பெற்றது. சகோதர மொழிக்காரர்களுக்கு தெரிந்திருக்கும். சத்தியமா எனக்குத் தெரியாதுங்க. இன்னுமொரு காமெடி பாடகரின் பாடல்… 5அவது ஆள் அழக்கப்பட்டார். அது நானில்லை. இதயம் 100 மேல் துடித்திருக்கும்… 4ஆவது ஆளுடைய சீட்டை எடுக்கிறார்கள். அறிவிப்பாளர் வாசிக்கின்றார்.. எஸ்.றொஷானி…. பிறகென்ன இரண்டு பரிசுப்பொதிகள் மட்டுமே (ஆரம்பத்தில் 10 பரிசுப்பொதிகள்) ஆனால் பெரிய ஒரு தொகையில் ‘வவுச்சர்’…. ‘டன்கொட்டுவ’ மாபிள் வீட்டு உபகரணங்கள் காட்சியறையில் போய் நான் வாங்குவதற்காக… தொடர்ந்து முதலிரண்டு அதிஸ்டசாலிகளைத் தெரிவுசெய்து விமானப் பயணச்சீட்டை வழங்கினார்கள். விழா இனிதே நிறைவு பெற்றது.. நேரமோ இரவு 10.00 மணி…

கடும்பானப் பிரியர்களுக்காக தாராளமாக ‘ஹாட் ட்ரிங்ஸ்’ வைக்கப்பட்டிருந்தது. ஒரு சிலரைத்தவிர யாருமே அதைத்திரும்பிப் பார்க்கவில்லை. காரணம் நேரமோ நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. நேரம் கடந்ததால் அம்மா அண்ணாவை அனுப்பியிருந்தார். பரிசுகளுடன், சந்தோசமாக வீடு சென்றேன்.

அட! பொறாமைப்படாதீங்க… அதிஸ்டம் யார் வீட்டு கதவை தட்டுமெண்டு தெரியுமா? நாளை உங்களுக்கும் கிடைக்கும்.

பி.கு : ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகும் ‘மை நேம் இஸ் கான்’ கேள்விக்காக பதிலளித்து 6 இலவச டிக்கட்டுக்களை ‘லிபேர்ட்டி’ திரையரங்கில் பெற்றுவிட்டேன். ஹி ஹி….