ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி 25ம் திகதி வரை படிப்பினைகளில் இருந்து பாடம் கற்பதற்கான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது தொடக்கம் 2009 மே 18ம் திகதி போர் முடிவுக்கு வந்தது வரையான காலப் பகுதியில் இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து இந்த விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்து வருகிறது.

இலங்கை இறுதிப்போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் ,போர்க்குற்றங்கள் தொடர்பாகச் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்ட போதே அதை சமாளிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸ இந்த விசாரணைக் குழுவை நியமித்திருக்கிறார்.இந்தக் குழுவே இறுதிப் போரின் போது போர்க் குற்றங்கள் நடந்துள்ளனவா என்பதை விசாரிக்கும் என இலங்கை அரசு கூறுகிறது.இருந்தாலும் சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் இந்த விசாரணைக்குழுவின் மீது ஒரு துளி நம்பிக்கை கூட இல்லை. பல நாடுகள் இந்தக் குழு நியமனத்தை வரவேற்றாலும் எந்த ஒரு நாடும் குழுவை நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆணைக்குழு இறுதிப்போரின் போது இடம் பெற்ற போர்க் குற்றங்கள் பற்றி ஆராய தகுதி இருக்கிறதா என்பது தான் சர்வதேசத்தின் கருத்து.

நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. சுதந்திரமான – பக்க சார்பற்ற விசாரணை குழுவாகச் செயற்பட்டு சரியான முறையில் சாட்சியங்களை பதிவு செய்யுமா என்பது முதலாவது சந்தேகம்.

குழுவின் முதலாவது அமர்வின் போது அழைக்கப்பட்ட சாட்சியாக அரச சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேர்னாட் குணதிலக்க சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் அரச தரப்பு அதிகாரிகளும் சாட்சியம் அளித்துள்ளனர். மற்றைய தரப்பான புலிகள் தரப்பிலோ தமிழர் தரப்பிலோ சாட்சியமளிக்க யாராவது தெரிவு செய்யப்பட்டுள்ளனரா அல்லது அவர்களை அழைக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

உண்மையான கருத்தை ஆணைக்குழு வெளியிட விரும்பினால் கட்டாயம் இரண்டு தரப்பினதும், கருத்தைக் கேட்க வேண்டும். ஆனால் புலிகள் தரப்பில் சாட்சியமளிக்க எவரும் இல்லை. அரச தரப்பில் சாட்சியமளிக்க அதிக வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது. புலிகள் தரப்பில் சாட்சியமளிக்க கூடியவர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு எங்கென்று தெரியாமல் போய் விட்டனர். அவ்வாறு இருக்கையில் சாட்சியங்கள் அனைத்தும் உண்மைத் தன்மையானவை என எவ்வளவு தூரத்திற்கு நம்புவது? இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதாவது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் சாட்சியம் சொல்ல வந்தால் அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாக நிர்ப்பந்த நிலை உருவாகுகையில் சிந்திக்க வேண்டியிருக்கும்.

சமாதானம் முறிந்து போனதற்கான காரணங்களை இந்த விசாரணை ஆணைக்குழு பக்க சார்பின்றி கண்டு பிடிக்க வேண்மாயின் அனைத்து தரப்புக்களினதும் சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

புலிகள் தரப்பாக சாட்சியமளிக்க கூடியவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் நடைபெறும் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக இந்த ஆணைக்குழுவின் அமர்வை வெளிநாடுகளில் நடத்த அரசு தயாராக உள்ளதா? இவ்வாறு செயற்படுவதன் மூலமே இவ் ஆணைக்குழுவின் நம்பகத் தன்மையை முக்கியமாக தமிழ் மக்கள் முன்னிலையில் கட்டியெழுப்ப முடியும்.

ஆணைக்குழுவின் விசாரணை ஒரு தலைப்பட்சமாக இடம்பெற வாய்ப்பு உருவாகின்றது. இதனால் முடிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படாதவையாகவே காணப்படும். பேர்னாட் குணதிலகவை எப்படி ஆணைக்குழு சாட்சியாக அழைத்ததோ… அது போல புலிகள் தரப்பில், தமிழர் தரப்பில் சாட்சியங்களை அழைக்க வேண்டும். அவர்கள் அச்சுறுத்தப்படும் வேளை உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஏற்பாடுகளுடன் அரசு செயற்பட்டால் பல வெளிவராத உண்மைகளை வெளிக் கொண்டுவர முடியும். பாதகமான உண்மைகள் வெளிவந்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவே அரசு இவற்றை கவனத்தில் கொள்ளவில்லைப் போல்.

இலங்கை அரசு ஒரு பக்கத்தில் இருந்து திரட்டிய சாட்சியங்களைக் கொண்டு தயாரிக்கப் போகும் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே அமையப் போகின்றது. சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமானால் இந்த விசாரணை ஆணைக்குழுவை பக்க சார்பற்ற முறையில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு இல்லாத எத்தனை சாட்சிகளை அழைத்தாலும் சரி! எத்தனை ஆணைக்குழுவை அமைத்தாலும் சரி! நடுநிலையாகச் செயற்படாது விட்டால் சர்வதேசம் ஒரு போதும் அரசு வெளியிடும் அறிக்கையை ஒரு காலமும் நம்பப் போவதில்லை.