இலங்கையின் இளம் தலைமுறை பாடகர்களுக்கு முடிசூட்டும் மங்கள விழாவான சக்தி சூப்பர் ஸ்டாரின் இறுதி நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நேற்று மாலை சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் கிண்ணியா நசீர், நீர்கொழும்பு மீனாபிரஷாதினி, மஸ்கெலிய திருச்செல்வம், மாத்தளை சங்கீதா..... ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், மற்றும் பிரபல பாடகர் பென்னி தயாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைநகரில் இடம்பெறும் இவ்வாறான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை, அதுவும் நண்பிக்கு எஸ்.எம்.எஸ் போட்டி மூலம் கிடைத்த இரண்டு இலவச டிக்கட்டுக்களால். நிகழ்வு 6 மணிக்கு ஆரம்பமாகும், 5.30 மணிக்கு அங்கு நிற்கவேண்டும் எனக் கூறப்பட்டதால் சரியாக அந்தநேரத்திற்கே சென்று விட்டோம்.
கூட்டமிருக்;காது என்று நினைத்து கூலாகச் சென்ற எமக்கு அதிர்ச்சி, மூன்று பிரிவுகளாக ஜனங்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். இடித்தடித்து உள்ளே சென்றோம். பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனையின் பின்னே உள்ளே அனுமதித்தார்கள்.
உள்ளக அரங்கின் ஒரு மத்தியில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. நாற்கோண அரங்கின் மேடையின் பின்புறம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் மக்களால் நிரம்பியது. சரியாக ஆறுமணிக்கு எங்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக, இறுதிப் போட்டிக்கு தெரிவான 10 பேர் பற்றிய சிறிய முன்னோட்டம். பின்னர் 6.30 மணியளவில் நடன நிகழ்வுடன் நிகழ்ச்சி ஆரம்பமானாது.
பின் ஆரம்பமே அதிர்ச்சி, நிகழ்ச்சியைத் தொகுக்க மாயா, அல்லது சங்கர் வருவார் என நினைத்திருந்த எமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… கஜமுகன் வந்தார். சக்தியா இப்படி மாறி விட்டது. .! இதற்கு காரணம் இசை இளவரசர்கள் இறுதி நிகழ்ச்சியின் பின் எழுந்த விமர்சனங்களா? அல்லது வேறு உள்வீட்டு விவகாரங்களா? எமக்கு தெரியவில்லை. தேவையும் இல்லை.
பின் இறுதிப் போட்டிக்கு தெரிவானவர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பாடினாhர்கள். அருமையாக இருந்தது. பின்னணி இசை, அரங்க ஒலித்தெளிவு, மேடை ஒளியூட்டம் எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. ஆனால் பாட்டு முடிந்தவுடன் சக்தி ரி.வி விளம்பரங்களை நேரடியாக விடுத்தது நேரில் சென்றவர்களை கடுப்பாக்கியது. அது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது.
முன்பு நாங்கள் ஊரில் இருந்து இப்படியான நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, பொருத்த நேரத்தில் விளம்பரம், அல்லது செய்தி வந்து குறுக்கிட்டு விடும். எங்களால் முக்கியமான விடயங்களை பார்க்காமல் போய்விடும். ஆனால் நேராக சென்று அமர்ந்த எங்களுக்கு கொடுமை தலைகீழானது. ரி.வி ரசிகர்கள் ரசித்துப் பார்த்திருப்பார்கள். நாங்கள் அரங்கிலிருந்தவாறே செய்தியறிக்கைகள், தேர்தல் வாக்கு விளம்பரங்கள், வர்த்தக விளம்பரங்களை பார்க்க வேண்டியதாயிற்று.
அதுவும் வர்த்தக விளம்பரங்கள், அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை 10 – 15 நிமிடம் மட்டும் ஒளிபரப்பானது. ரி.வி யாக இருந்தால் சனல் மாத்தியிருப்போம். அரங்கில் என்ன செய்வது? இனிமேல் இந்த பிழை விடாமல் சக்தி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியானால் வந்திருந்தவர்கள் காசு கொடுத்து வந்திருக்க அவசியமில்லையே! வீட்டிலிருந்தபடி ரி.வியிலேயே பார்த்திருக்கலாம். நேரடி ஒளிபரப்பு தப்பில்லை. அதற்காக வந்திருந்தவர்களை 15 நிமிடத்திற்கு மேலாக அடிக்கடி காக்க வைப்பது எவ்விதத்தில் நியாயம்.
இதனால் நேரம் விரயமாகியது. 10 மணி ஆகியும் பாதியும் முடியவில்லை. எனவே கிளம்பி விட்டோம். வீடு வந்து சேர்ந்து ஒன்ரறை மணித்தியாலத்தின் பின்பே முடிவு கிடைத்தது. சங்கீதா சக்தி சுப்பர் ஸ்டாராக தெரிவானார்.
பென்னி தயாள்… “ஊர்வசி ஊர்வசி…” “டாக்சி டாக்சி…” இரண்டு பாடல்களை 10 மணிக்கு முன்னர் பாடிக்கலக்கினார். தொடர் விளம்பரங்கள், செய்தியறிக்கையால் சலித்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். அரங்கம் நிறைந்த ரசிகர்கள் அவருடன் இணைந்து பாடி நல்ல ஆதரவைக் கொடுத்தார்கள். அவர்களும் இலங்கை ரசிகர்களைப் பற்றி நன்றாக நினைத்திருப்பார்கள். (வழமையாகவும் அவ்வாறே தான்)
சக்தியின் இந்த நிகழ்ச்சி பாராட்டக்கூடியது. நிகழ்ச்சிக்கான ஆதரவை வந்திருந்த மக்களைக் கொண்டு பார்க்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறான நிகழ்ச்சிகளை சக்தி உட்பட மற்றவர்களும் வழங்க வேண்டும். சிறு ஒழுங்கீனங்களை தவிர்த்துக் கொள்ளுதல் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டும். மற்றப்படி குறை கூற எதுவுமில்லை.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
10 comments:
இலங்கையில் இப்படித் தான் வானொலி தொலைக் காட்சிகள் இன்றும் நடந்து கொள்கின்றன என்பதனை நினைக்கும் போது மனவருத்தமாக இருக்கிறது. உலகம் எங்கேயோ போய் விட்டது. ஆனால் நம்மவர்கள் இப்போதும் இலங்கையில் அரைத்த மாவை அதே பாணியிலல்லவா அரைத்துக் கொண்டிடுக்கிறார்கள்.
ஏன் நீங்கள் மாயாவையோ, சங்கா கணேஷையோ எதிர்பார்த்தீர்கள்? எம்மவர் ஒருவர் நிகழ்ச்சியைத் தொகுத்தால் குறைவா என்ன?
எல்லாத்துக்குமே நாங்கள் ஏன் இந்தியாவை நம்பியிருக்கின்றோம்? - யோசியுங்கள்!
நான் வானொலியில் கேட்டேன் அதனால் பெரிதாக தெரியவில்லை.
கமல் said...
இலங்கையில் இப்படித் தான் வானொலி தொலைக் காட்சிகள் இன்றும் நடந்து கொள்கின்றன என்பதனை நினைக்கும் போது மனவருத்தமாக இருக்கிறது. உலகம் எங்கேயோ போய் விட்டது. ஆனால் நம்மவர்கள் இப்போதும் இலங்கையில் அரைத்த மாவை அதே பாணியிலல்லவா அரைத்துக் கொண்டிடுக்கிறார்கள்.//
நான் நிகழ்சி பற்றி மட்டுமே கதைத்தேன். ஏனெனில் நான் அங்கு சென்றிருந்தேன். வானொலி, தொலைக்காட்சி பார்ப்பதில்லை. நிகழ்சி நன்றாக இருந்தது விளம்பரங்கள் செய்தி அறிக்கையில் காக்க வைத்து விட்டார்கள்.
என்.கே.அஷோக்பரன் said...
ஏன் நீங்கள் மாயாவையோ, சங்கா கணேஷையோ எதிர்பார்த்தீர்கள்? எம்மவர் ஒருவர் நிகழ்ச்சியைத் தொகுத்தால் குறைவா என்ன?
எல்லாத்துக்குமே நாங்கள் ஏன் இந்தியாவை நம்பியிருக்கின்றோம்? - யோசியுங்கள்!//
தவறாக விளங்கி விட்டீர்கள்.
அண்மைக்கால சக்தியை நினைத்து அவர்கள் தான் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். கஜமுகனின் வருகை நிகழ்சியை மேலும் மெருகூட்டியது
AKAM said...
நான் வானொலியில் கேட்டேன் அதனால் பெரிதாக தெரியவில்லை.//
வந்திருந்தால் செய்தியுடன் கிளம்பியிருப்பீர்கள்.
நல்லவேளை கஜமுகன் வந்திருக்கிறார், சங்கரோ அல்லது மாயாவோ வந்திருந்தால் பல இலங்கை தமிழ் ரசிகர்கள் நேற்றே தற்கொலை செய்திருப்பர்.
அவர்களின் தமிழ் உச்சரிப்பு அவ்வாறே. நான் சக்தி கேட்டு அல்லது பார்த்து பல நாளாகி விட்டது. காரணம் எனக்கு தாய் மொழியை மறந்துவிடலாம் என்னும் பயம்
யோகா கூறுவது முற்றிலும் உண்மை. எங்கள் மொழியை மட்டுமல்ல எங்கள் தனித்துவமான கலாசார அம்சங்களைக்கூட திரிபுபடுத்திவிட்டார்கள்.
கமல் said...
இலங்கையில் இப்படித் தான் வானொலி தொலைக் காட்சிகள் இன்றும் நடந்து கொள்கின்றன என்பதனை நினைக்கும் போது மனவருத்தமாக இருக்கிறது. உலகம் எங்கேயோ போய் விட்டது. ஆனால் நம்மவர்கள் இப்போதும் இலங்கையில் அரைத்த மாவை அதே பாணியிலல்லவா
ஒட்டுமொத்தமாக உங்கள் குற்றச் சாட்டை ஏற்கமுடியாது. புதியனவும் வந்து கொண்டே இருக்கின்றன என்பதை கணக்கில் கொள்ளுங்கள்.
வணக்கம் தோழி………
இலங்கையிலுள்ள எம்மவர்களின் மொழி ஆளுமை இந்திய தொகுப்பாளர்களை விட சிறந்தது. (இந்திய தொகுப்பாளர்களை பின்பற்றும் அரைக்கிறுக்குகள் பற்றி இங்கு குறிப்பிடவில்லை)
நீங்கள் குறிப்பிடும், ஷங்கர் சிங்கப்பூரில் நிகழ்சிகளை தொகுத்து வழங்கியவர். நிகழ்ச்சியை என்ன விதத்திலாவது பரபரப்பாக்க வேண்டும் என்ற கொள்கையை முற்றிலுமாகக் கடைப்பிடித்தவர். (குறித்த விடயத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளரின் பங்கும் இருந்தது.)
மற்றவரான மாயாவின் தமிழ் உச்சரிப்பு தொடர்பில் நீங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமளவுக்கு என்ன இருக்கிறது. ள, ழ, ல அவருடைய நாவில் ததிங்கிணத்தோம் ஆடுகிறது. அவருடைய மொழி ஆளுமை பெரிய குறைபாடுடையது. ஆனால், நிகழ்ச்சித் தயாரிப்பு மற்றும் நெறியாள்கை சிறப்பாகச் செய்கிறார்.
இலங்கையில் அண்மைக்காலத்தில் நான் கண்ட நல்ல ஒலி, ஒளிபரப்பாளர்களில் கஜமுகன் முக்கியமானவர். அவருடைய தாய்மொழி, மற்றும் சகோதர மொழி ஆளுமை சிறப்பாகவுள்ளது. அத்துடன் அங்கிலத்திலும் புலமையுள்ளவர் என்று அறிகிறேன். ஆனால், என்ன சக்தியில் எல்லா நிகழ்ச்சிகளிலுத் அவரைப் பயன்படுத்தி எரிச்சலூட்டுகிறார்கள் என்பது உண்மை.
அரசியல் நிகழ்ச்சியென்றாலும், இசை நிகழ்ச்சியென்றாலும், ஏதாவது நேர்காணல் என்றாலும் கஜன் வருவது அலுப்பூட்டுகிறது தான். அவற்றை சக்தி நிறுவனம் கருத்திலெடுத்து செயற்பட வேண்டும்.
Post a Comment