Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நாட்டிலுள்ள சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியளவில் உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்து நிறைவேற்றவுள்ளது. மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் வகையில் இந்தத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்.

ஆனால் புதிய முறைப்படி தேர்தல் நடத்தப்போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையையே தேர்தல் திருத்தச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருந்தாலும் புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கு காலம் தேவை. வட்டார எல்லைகளை மீள் நிர்மாணம் செய்யவேண்டும் அத்துடன் அது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளது சில பிரதேச சபைகள். இவற்றைத் தீர்த்து தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆவது வேண்டும்.

மாறாக அரசாங்கமோ எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் அதிகரிப்பதற்கு தயாராக இல்லை. தேர்தலை எப்படியாவது ஏப்ரல் மாத இறுதியிலாவது முடித்துவிடவேண்டும் என அரசு ஒற்றைக்காலில் நிற்கிறது. மார்ச் மாதமளவில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் ஆனது அரச தரப்புக்கும் சரி ஐக்கிய Nதிய கட்சிக்கும் சரி ஒரு பலப்பரீட்சையாகவே அமையப்போகிறது. ஜனாதிபதியைப் பொறுத்தளவில் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்பதே நோக்கு. அதைவிட முக்கிய தேவைப்பாடாகவும் உள்ளது ஏனென்றால் அண்மைய நாட்களில் தெற்கில் உள்ள உள்ளுராட்சிச் சபைகளின் வரவுசெலவுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது. இது தான் முக்கிய பிரச்சினை. இதுவரை ஐந்து உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்ற ஆளும்கட்சி மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. இதுவே ஆளும்கட்சிக்குரிய முதல் வேட்டாக அமைகிறது.

அடுத்தது விலைவாசி உயர்வுக்கு அளவுகணக்கே இல்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுவோம் என்று கூறிக்கொண்டு சரித்திரத்திலே நடந்திராதவாறு தேங்காயை இறக்குமதி செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். முட்டை கூட இறக்குமதி செய்யும் நிலை வந்துவிட்டது. மறுபக்கத்தில் வெங்காயத் தட்டுப்பாடு தலையைப் பிய்க்கிறது. இந்த நிலையில் அரசு திணறிக்கொண்டிருக்கிறது இது எதிர்த்தரப்புக்கு சாதகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் பொதுமக்கள் தான் நசிபடுகிறார்கள்.

இந்தப் போக்கு தொடருமானால் மக்கள் மனதில் அரசுக்கு எதிரான கருத்து உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான தாக்கத்தை தேர்தலில் பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளுரிலேயே இந்த நெருக்கடிகளை அரசு சந்திக்கிறதென்றால் சர்வதேசளவிலும் இதற்கு சமமான நெருக்கடிகள் உள்ளன.

பிரித்தானியாவுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு உரையாற்ற முடியாத நிலையில் நாடு திரும்பியிருந்தார். இது மிகப் பெரிய இராஜதந்திரத் தோல்வியாகும். அத்துடன் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன. எத்தனையோ பிரச்சினைகள் மத்தியில் இதை எப்படி சமாளிக்கப்போகிறதோ தெரியவில்லை. சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு எதையும் செய்யமுடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தன் பிடியில் இருந்து விலகுவதாக இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதே ஐ.நா குழுவினது இலக்கு என்கிறது அரசு. ஆனால் அந்தச் சந்திப்பு உள்நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா என்பது அறிவிக்கப்படவில்லை. உள்நாட்டில் சந்திப்பு இடம்பெற்றால் சரத்பொன்சேகாவை அவர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுகோளாகும். இது ஆபத்து என்பது அரசுக்கு தெரியும். அதேவேளை ஐ.நா நிபுணர் குழு இலங்கைவர அனுமதிப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதோ ஆபத்தானது என்றும் அதை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர்கள் இருவர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆராய்ந்து பார்க்கப் போனால் அரசு எடுத்த முடிவை அரசுக்குள் இருப்போர் எதிர்ப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. எவ்வாறாயினும் பெரிய அரசியல் ஆதாயத்தைப் பெற முடியாது. இதுவும் ஆளும்கட்சிக்கு ஒரு தலையிடியாக அமையலாம். ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி இப்போது புதிய உற்சாகத்தில் உள்ளது. தங்களுக்குள் நிலவிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பதைக் காட்ட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் எந்தளவு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்.

இவ்வாறான போக்கு அரசை ஒரு விதத்தில் மிரளவைக்கிறது. தொடர் ஆட்சி என்று கண்ட கனவு போட்ட கணக்கெல்லாம் மறுஆய்வு செய்யும் நிலைக்கு வந்து விட்டது போல். இதற்கு வழி கோலுவது கடந்த கால நிகழ்வுகள் தான். எவ்வளவு தான் வெற்றி பெற்றாலும் மக்களிடத்தில் ஏற்படக்கூடிய வெறுப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. அது எப்போது சுனாமி போல் மேலெழும் என்பது யாருக்கும் தெரியாது. உள்ளுராட்சித் தேர்தலானது இரு தரப்புக்கும் இடையில் பெரிய சவாலாகவுள்ளது.

மீண்டும் வெற்றியை தன்பக்கம் காட்டுவது அரசின் நிலை. எப்படியாவது தலை நிமிரவேண்டும் என்பது ஐ.தே.கவின் நிலை. விரைவாகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசாங்கம் முனைவதில் இருந்து தெரிகிறது வெற்றி மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கை. துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்பது பழமொழி. கணிப்பு சரியா? பிழையா? என்பதை தேர்தல் வெளிப்படுத்தும் அத்துடன் தேர்தல் முடிவு அரசின் செல்வாக்குப் போக்கையும் தீர்மானிக்கும்.

நாடாளுமன்றத்துக்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் கடந்த மாதம் 26ம் திகதியாகும். அன்றிலிருந்து இன்று வரை (24.03.2010) 147 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


87 பாரிய சம்பவங்களில் 22 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதே வேளை பொதுச்சொத்து துஷ்பிரயோகம் மற்றும் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தமது கவனத்தை திருப்பியுள்ளதாக வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பொதுத் தேர்தலில் எத்தனை வன்முறைகள் நடைபெறப் போகின்றனவோ? எண்ணுக்கணக்குக்கு மிஞ்சிவிடும் போல கிடக்குது. ஜனவரி மாதக் கடைசியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னர் எப்போதும் இல்லாதளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் உயர்ந்திருந்தன. தேர்தல் நெருங்கி இறுதியன்று அண்மித்தபோது 800 இற்கு மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.


வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பெப்ரவரி 26ம் திகதியிலிருந்து மார்ச் 8ம் திகதி வரை 75 (65சதவீதம்) பாரிய வன்முறைச் சம்பவங்கள் உள்ளடங்கலாக 115 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 75இல் 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பானதாகும்.

  • 06 காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 03 பாரிய காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 22 தாக்குதல் சம்பவங்கள்
  • 14 கொலை அச்சுறுத்தல்கள்
  • 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல்
  • 05 தீவைப்புச் சம்பவங்கள்.


  • பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் குருநாகல் மாவட்டத்தில் 6 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
  • தென் மாகாணம்- 05 உட்கட்சி மோதல் சம்பவம்.
  • சப்ரகமுவ மாகாணம்- 12 பாரிய சம்பவங்களுள் 05 துப்பாக்கி பிரயோகம்.
  • கிழக்கு மாகாணம்- 03 சம்பவங்கள்.
  • வடமத்திய மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • மேல் மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • வட மேல் மாகாணம்- 01 சம்பவம்.
  • மத்திய மாகாணம்- 01 சம்பவம்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அவதானிக்கக்கூடிய இன்னுமொரு விடயம் உட்கட்சி மோதல்களுக்கு வழிவகுக்கும் விருப்பு வாக்கிற்கான போட்டியாகும். ஐ.ம.சு முன்னணிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள 91 முறைப்பாடுகளுள் 23 முறைப்பாடுகள் அக்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலில் தமது பக்கம் தாம் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்றுவிட வேண்டும். தாம் ஆசனத்தைப் பெறவேண்டும் என்ற அரசியல் வெறியும் அதிகார மோகமுமே தேர்தல் கால வன்முறைகளுக்கு வித்தாகவும் உரமாகவும் அமைகின்றது.

வாக்குரிமை என்பது ஒவ்வொரு வாக்காளனும் தனது தெரிவுக்கும் விருப்பத்துக்கும் ஏற்றாற் போல அதனைப் பயன்படுத்தல் என்ற சுதந்திரச் செய்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. அந்தக் கோட்பாட்டை தகர்த்து எறியும் விதத்தில் அரசியல்வாதிகள் தமது அடாவடித்தனத்தைக் கட்டவிழ்த்து தாமே வெற்றிபெற வேண்டும் என்று செயற்படுவது இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாகச் சாதாரணமாகி விட்டது.

தேர்தல் என்பது வன்செயல்களோடு சேர்ந்தது என்ற நிலை இங்கு வழமையாகிவிட்டது.

அனேகமாக தேர்தல் கால மோதல்களும் வன்முறைகளும் போட்டியிடும் எதிரணி கட்சிகளுக்கு இடையே நடைபெறுவது தான் வழக்கமாக இதுவரை இருந்து வந்தது. இம்முறை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வது தான் கவலைக்குரிய விடயமாகும்.

மக்களாட்சி என்ற ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிந்து துவம்சம் செய்துவிடவல்ல தேர்தல் வன்செயல்களை தடுப்பதும் அவற்றில் ஈடுபடுவோரை பாகுபாடின்றி தண்டிப்பதும் பக்கசார்பின்றி நடவடிக்கைகளை எடுப்பதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பெரும் பொறுப்பு பொலீஸாரையும் நீதிமன்றங்களையும் சார்ந்தவை.

நஞ்சு மரம் முளையிலேயே கிள்ளி எறியத்தவறினால் மக்கள் ஆட்சி மல்லாக்காப் படுக்க நேரிடும். வன்முறைகள் தெளிவுபடுத்துவது ஜனநாயகம் கேலிக்குரிய பொருளாக மாறிவிட்டது என்பதைத்தான்.
நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் இவற்றை வருங்காலத்திலாவது தடுக்க அக்கறை காட்டுவார்களா?

இல்லை இனி இது தேர்தல் கால கலாச்சாரமாகுமா???

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 8ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் வந்தாலே சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது. இன்று உள்நாட்டு , வெளிநாட்டு ஊடகங்களின் முக்கிய செய்திகளில் ஒன்று "ஜெயசூரியாவின் தேர்தல் அறிவிப்பு"

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இம்முறை பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்துள்ளது. அதில் ஒருவர் ஜனாதிபதியின் புத்திர சிகாமணி நாமல் ராஜபக்ஷ. இன்னொருவர் எங்கள் தலை, அது தாங்க சனத். கிரிக்கெட்டில் ஆடியது போதவில்லை போலும், சனத் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது தெரிந்த விடயமே! இந்நிலையில் ஜெயசூர்யாவை தேர்தலில் போட்டியிட வருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்ட ஜெயசூர்யா, மாத்தறை மாவட்டத்தில் அவர் போட்டியிடுவார் என்றும், விருப்ப மனுவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் விரைவில் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயசூர்யா கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒப்பந்தம் போட்டுள்ளது. . எனவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கிரிக்கெட் சபையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுபற்றி ஜெயசூர்யாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, 'தேர்தலில் போட்டியிட என்னை அழைத்துள்ளனர். கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது' எனக் கூறிவிட்டார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றாக ஓய்வு பெற்ற பின்னர் சனத் இந்த முடிவை அறிவித்திருக்கலாம், ரசிகர்கள் பெரும்பகுதியினர் சனத்தை கொஞ்சமாவது வெறுப்பார்கள். பெரும்பாலும் சனத்தின் வெற்றி உறுதி. அதில் சந்தேகம் வேண்டாம்.

இதற்கு முந்தைய இந்தியப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து பெரும் சாதனைப் படைத்துள்ளது ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் திரைப்படம். இந்திப் படங்களுக்கு பெரிய சந்தை வாய்ப்புக்கள் இல்லாத தமிழகத்தில்கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போடுகிறதாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாடினால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே, ஷாருக்கானை தேசத் துரோகி என்று குற்றம்சாட்டி, பெரும் கலவரத்தைத் தூண்டப் பார்த்தது பால்தாக்கரேயின் சிவசேனை கட்சி.

கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசான போது மும்பை நகரம் முழுவதும் சிவசேனா கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல தியேட்டர் அதிபர்கள் பயந்து போய் படத்தை நிறுத்தினார்கள். ஆனால் மராட்டிய அரசும், ரசிகர்களும் ஷாருக்கானுக்கு ஆதரவாக களம் இறங்கியதும் மறுநாள் பல தியேட்டர்களில் படம் ரிலீசானது. தற்போது அங்கு 80-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ஓடுகிறதாம். இந்தி திரையுலகில் சமீபத்திய படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் மை நேம் இஸ் கான் படம் முறியடிக்கும் என்கின்றனர். தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் ஒரு டிக்கெட் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகின்றது. பெர்லின் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு ஒரு டிக்கெட் ரூ.60 ஆயிரம் என விற்கப்பட்டு சில நிமிடங்களிலேயே முடிந்ததாம்.

அமெரிக்காவிலும் இந்தப் படம் சக்கைபோடு போடுகிறது. அந்த படம் ரிலீசான 3 நாட்களில் 1.86 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. சென்னையில் 5 தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. இப்படம் இலங்கை, எகிப்து , நியுசிலாந்து,அமேரிக்கா உட்பட 45 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூல் மட்டும் 250 மில்லியன் இந்திய ரூபாய்களாம்.

வழமையான தேர்தல்களை விட இம்முறை சற்று வித்தியாசம். தமிழ்க்கூட்டமைப்பின் நேரடி ஆதரவுடன் தமிழர்கள் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் தரப்பாகவுள்ளனர். எனவே இருபெரும் வேட்பாளர்களின் வாக்குத் திரட்டும் நடவடிக்கைகளும் தமிழர் பிரதேசங்கள் நோக்கி நகர்ந்திருக்கின்றது. தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கையுடன் ஆங்காங்கே சூட்டுச்சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதுவரை மூவர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். 26ம் திகதி வாக்களிக்க முடியுமா என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் பார்வையாளர்களா? பங்காளிகளா?


கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இது வரை மூன்று பாரிய அளவிலான வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பிரதேச சபை முன்னாள் தலைவரின் கடை 18.01.2010 நள்ளிரவு எரிக்கப்பட்டது, பிரச்சாரம் சென்று விட்டு வீடு திரும்பியோர் மீது துப்பாக்கிச் சூடு)

இதைவிட எத்தனையோ குழறுபடிகள் நடந்துள்ளது, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் கண்காணிப்பு அவதானிப்பாளரிடம் இருந்து பெற்றவை சில……

• சில இடங்களில் பதிவு செய்யப்படாத கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரம் போஸ்டர்கள் கட்அவுட்களை அகற்றுமாறு கோரியும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

• கட்சிக் கூட்டங்கள்;; இடம் பெறும் போது தாக்குதல்கள் இடம் பெறுவதுண்டு. நேற்று அட்டாளைச்சேனையில் 500 மீற்றருக்குள் இரண்டு கட்சிகளின் கூட்டம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பொலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே பிரச்சாரங்கள் இடம் பெறுகின்றன. மக்களுடைய ஆர்வத்தைக் கண்டு கொள்ள முடியவில்லை.

• நாடு முழுவதும் இன்றுவரை 501 முறைபாடுகள் பதிவாகியுள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நீதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துமாறு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நீதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துமாறு ஆயர் மன்றமும் கோரிக்கை விடுத்துள்ளது.

• நேற்று(20.01.2010) முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தேர்தல் முறைப்பாடு பதிவாகியுள்ளது. தேர்தல் கூட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

• தேர்தலை இடையூறு இல்லாமல் நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என பஃவ்ரல் (PAFFRAL)அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

• இது வரை 124 வாகனங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது இடம் பெற்ற தாக்குதலில் சேதமாக்கப்பட்டுள்ளது. 83பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 4 நாட்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றன. அட்டகாசமா? அடக்கமா? பொறுத்திருப்போம்.

Followers

About this blog

Labels