Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

இலங்கையின் அரசியல் வியூகங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்ற வேளை தற்போது இலங்கை சீனாவுடனான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த உடன்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் அவருடன் இராணுவ மற்றும் முப்படைத் தளபதிகளும் சீனாவிற்கு கடந்த வாரம் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போதே இராணுவ ஒத்துழைப்புக்களை பரிமாறி வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய இலங்கை நாடுகளின் படைகளுக்கு இடையில் இராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு நடந்து சில நாட்களின் பின்னரே சீனாவுடன் இது போன்ற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது இலங்கை.

தெற்காசியாவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. அது போராக வெடிக்காத நிலையில் பொருளாதாரப் போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது.அதிக முதலீடுகள், ஏட்டிக்குப் போட்டியான உதவிகள் இராணுவ தந்திரங்கள் போன்றன பனிப்போரின் உச்சக்கட்டத்தினை அடைய வைக்கின்றது. இந்த போட்டிக்குள் தான் இலங்கை சரியாக மாட்டியிருக்கின்றது. இலங்கை சீனாவை பகைத்துக் கொள்ளாமலும் இந்தியாவை கை நழுவ விடாமலும் இரண்டு கைகளில் பிடித்த வண்ணம் தனது யுக்திகளை நகர்த்துகின்றது.

இந்தியாவுடன் சுமுகமான உறவை பேணத்தவறினால் கடந்த காலம் படிப்பித்த பாடம் சொல்லும் மீதியை, அதேவேளை சீனாவை உதறித்தள்ளி விட முடியாது. காரணம் கேட்டதை விட கேட்காததையும் வாரிக் கொடுக்கிறது. மேற்குலக நாடுகள் இலங்கையை கைவிட்ட நிலையில் ஜப்பானும் தனது உதவிகளை சரி பாதி நிறுத்திவிட்டது. இவற்றுக்கு எல்லாம் மத்தியில் போர் என்ற சாட்டு முடிவடைந்த நிலையில் இலங்கைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய தேவைப்பாடு உள்ளது. இதில் முக்கியமாக தென் பகுதி அபிவிருத்தி சீனாவின் கையில் இருக்கின்றது.

சீனா தான் கடந்த வருடம் இலங்கைக்கு அதிக நிதி வழங்கிய நாடுகளின் பட்டியலில் முன் நிற்கின்றது. இப்படி வாரி வழங்குவாரை எப்படித்தான் கைவிடும் இலங்கை. இதனால் தான் இந்தியாவை விட ஒரு முழம் கூட்டி இலங்கை சீனாவுக்கு மதிப்பளிக்கின்றது. இவ்வாறான இலங்கையின் விளையாட்டை இந்தியா விரும்பாது. அது இலங்கைக்கு தெரியும். மறுபுறம் இலங்கையின் காய்நகர்த்தல்களை இந்தியாவும் அறியும். இருந்தாலும் நடவடிக்கைகளைப் பார்க்கையில் இலங்கை சீனாவிடம் தான் உண்மையான நண்பனாக இருக்க ஆசைப்படுகின்றது போல். காரணம் புலிகளுடன் போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் சீனா செய்த உதவிகளை என்றுமே மறக்கத் தயாரில்லை இலங்கை.

யுத்தத்தின் போது இலங்கை இந்தியாவிடம் இருந்து நிறைய உதவிகளை எதிர்பார்த்தன. ஆனால் கிடைத்தது திருப்தியளிக்கவில்லை. அதாவது போரின் போது இராணுவ உதவிகளை வழங்கவில்லை என்பது தான் குறை. சீனா விடயத்தில் இறுதி முடிவு இதுதான். ஆயுதங்கள், வெடி பொருட்கள், தொழில்நுட்ப உதவிகள், இராணுவ தந்திரோபாயங்கள் போன்றவற்றில் சீனாவின் பிடியில் தான் இலங்கை. பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்கவுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளால் இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு பலப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

என்ன தான் தலை தெறித்தாலும், இலங்கை அரசு பாதுகாப்பை பலப்படுத்துவதிலும், புதிய இராணுவ யுத்திகளை பெற்றுக் கொள்வதிலும் முனைப்பாக உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. இதற்கான பின்னணி தெரியாத நிலையில் அனைவரினதும் மனதில் எழும் ஒரே கேள்வி, இலங்கையின் இந்த இரட்டைப்போக்கு தன்மை எவ்வளவு காலம் நீடிக்கப் போகின்றது என்பதும், மற்றும் இரட்டை பாசத்தால் இலங்கையை வலுப்படுத்தும் அளவிற்கு ஏதாவது நாடு குதித்து விடுமோ என்ற பயம்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் சர்சையை உருவாக்கியுள்ளது. அவரின் விஜயத்தின் பூகோள அரசியலை தொடர்ந்து ஆசியப் பிராந்திய வல்லரசுகள் இரண்டினதும் பிடிக்குள் இலங்கை தனது எதிர்காலத்தை தொலைத்து விடப்போகிறது என்ற கவலை அதிகமாக தென்னிலங்கை மக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.

சீனாவுக்கு இணையாக வர்த்தக பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த முனைவது சீனாவின் தொழிலாளர்களை போல இந்தியாவின் தொழிலாளர்களையும் இலங்கைக்குள் திறந்துவிடும் வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அச்சம் உருவெடுக்கிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா சிந்தித்து செயல்படும் என எதிர்பார்த்தோம் ஆனால் நடந்தது தலைமாறு தான். ஆனால் சீனாவுக்கு இணையாக பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையை தன் பக்கம் இழுக்க இந்தியாவினுடைய கடைசி முயற்சி தான் ஜனாதிபதியின் விஜயம் போல் தென்படுகிறது.

இந்த வலைக்குள் இலங்கை சென்றுவிடக்கூடாது என்ற அவதானிப்பில் சீனா இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஸ இலங்கைக்கு திரும்பிய போது சீனா அரச சபையில் துணைப்பிரதமர் சாங் டிஜிங் அதிக கடன் உதவிகளுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சீனாவின் உதவிகள் தென்னிலங்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் அது தற்போது வடக்கிலும் தனது நிலையை விரிவுபடுத்தி வருகின்றது.இந்த நிலையில் இந்தியா தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றது.இந்தியாவின் உதவிகள் வடக்கையே பிரதான குறியாகக் கொண்டுள்ளது.அதிலும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டவை புகையிரத அபிவிருத்திஇ தொழிற்சாலை நிறுவுதல், விவசாய ஆராய்சி நிலையம் நிறுவுதல் போன்ற பல திட்டங்கள்.

அம்பாந்தோட்டையில் நடைபெறும் சீனாவின் துறைமுகப் பணிகளை அவதானிக்கும் நோக்கத்துடன் அங்கு ஒரு தூதரகத்தை அமைக்கும் நோக்கத்தை இந்தியா கொண்டுள்ளது. ஜனாதிபதி இந்தியா செல்ல அமெரிக்கத் தூதுவர் இரு நாள் வி;ஜயத்தை யாழ்ப்பாணம் மேற்கொண்டுள்ளார். இந்த மூன்று நிகழ்வுகளும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கை ஆகும்.

அதாவது இந்து சமுத்திரத்தைக் கைப்பற்றப் போகும் பலம் யாருடைய கைகளில் உள்ளது என்பது தான் போட்டியாகிறது.இந்து சமுத்திர அதிகாரத்தில் வெற்றிடம் இருப்பதாகவும் அதை நிரப்ப சீனா முயற்சிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சீனாவுடன் இந்தியா தாக்குப்பிடிக்கும் பலம் உள்ளதா என்பது தான் கேள்வி? சீனாவின் கடற்படை பலம் ஆயுதபலம் மித மிச்சமாகவே இருக்கிறது யாவருக்கும் தெரிந்ததே.


இந்த நாடுகளின் பாதுகாப்பு ஒதுக்கீட்டைப் பார்த்தால் சீனா 61 பில்லியன் டொலர் இந்தியா 25 பில்லியன் டொலர் அமெரிக்கா 607 பில்லியன் டொலர் இந்தத் தரவுகள் வெளிப்படுத்துவது புரிந்திருக்கும். ஆசியப் பிராந்தியத்தில் உள்ள வறிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அதனை மேற்கொள்ள பிராந்திய வல்லரசுகள் தமக்குள் பனிப்போரை ஆரம்பித்துள்ளன.இதிலும் சீனா முந்தி விட்டது.சார்க் நாடுகளுடன் பர்மாவுடன் சீனா தன்கான சுற்றுவளையத்தை உருவாக்கி விட்டது.இந்த நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.

ஆனாலும் தலைமன்னார் பகுதி ஊடாக இந்தியா வரக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது. அமெரிக்கா ஈரான் மீது கடுமையான தடைகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத்திரட்டிக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை ரஸ்யாவும் சீனாவும் எதிர்க்கின்றன.

ரஸ்யாவின் இந்த நகர்வுக்குப் பின்னாலும் கொரியாவின் வளைகுடாவில் தோற்றம் பெற்றுள்ள நடவடிக்கைகளுக்கு பின்னால் சீனா உள்ளதாக நம்பப்படுகிறது. சீனாவை முடக்கவே அமெரிக்கா தனது காய்களை நகர்த்தி வருகிறது.

இவ்வாறான ஒரு சிக்கலுக்குள் தான் இலங்கை தன்னைத் தொலைத்து விட்டு திகைக்கப் போகிறது என வெளிப்படையாகவே தெரியவருகிறது.ஏனென்றால் இறுதியாக நடைபெற்ற 14வது மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் மேற் சொல்லப்பட்டவைக்கு சார்பாகவே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதிக ஆட்டம் காணப்போவது தென்னிலங்கை தான்.

எனக்கு தமிழ் தந்த பாடம், “உப்புத் திண்டவன் தண்ணி குடிக்கத்தான் வேணும்”.


வியாபாரம் என்று ஆரம்பித்ததோ அன்றிலிருந்து தொடங்கிய உறவு.. முத்தையும் யானைத் தந்தத்தையும் கொடுத்து மட்பாண்டமும் பட்டுத் துணியும் வாங்கினோம்.

7ம் ஆண்டு 8ம்ஆண்டில் கட்டாயம் நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். நினைவிருக்கின்றதா?…
இலங்கையிலிருந்து சீனாவிற்கான ஏற்றுமதி கடந்த மூன்று வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு 37 மில்லியன் டொலராக இருந்த ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டு 70 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்ட காலப்பகுதியில் கூட சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது. ஆனால் 2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 2007-2009 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சீனாவுக்கான ஏற்றுமதி கட்டமைப்பில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் ஏற்றுமதிக்கான பட்டியலில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டது.

சீனாவின் நுகர்வுச் சந்தையை இலக்காகக் கொண்டு புதிய ஏற்றுமதிப் பொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட விளம்பர நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டது.முன்னர் சீனாவிற்கு மூலப் பொருட்களே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

மொத்த ஏற்றுமதியில் 40 வீதமானவை மூலப் பொருட்களாகவே காணப்பட்டன. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விளம்பர நடவடிக்கைகள் மூலம் தேயிலை இறப்பர் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆபரணக் கற்கள்இமீன் உற்பத்திகள் நகைகள் போன்றவற்றை நோக்கி சீனாவுக்கான ஏற்றுமதி திரும்பியுள்ளது.



தமது உற்பத்திப் பொருட்களை சீனாவில் விளம்பரப்படுத்துவதற்காக இலங்கை வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கான கொள்கை வகுப்பாளர்கள் பீஜிங்கில் உள்ள தூதரகத்துடன் சேர்ந்து சீனா முழுவதும் தெரிவு செய்த முக்கிய இடங்களில் வர்த்தக கண்காட்சிகளை நடத்தினர்;. சீனா வர்த்தக ஆதரவு அமைப்புக்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய இலங்கைத் தூதரகம் அவர்களுடன் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டது.அவற்றின் மூலம் சீன வர்த்தகக் கண்காட்சிகளில் இலங்கைப் பொருட்களுக்கு இலவசமான காட்சி அறையை மிகக் குறைந்த கட்டணத்தில் பெற முடிந்தது.

இத்தகைய நடவடிக்கைகளை அடுத்து கடந்த மூன்று வருட காலத்தில் சீனாவில் நடைபெற்ற ஆகக் கூடுதலாக 52 வர்த்தகக் கண்காட்சிகளில் இலங்கையின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில் 25 கண்காட்சிகள் கடந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்டன. தமது வருடாந்த குன்மிங் வர்த்தகக் கண்காட்சியுடன் இணைந்து இந்த வர்த்தகக் கண்காட்சியையும் நடத்தலாம் என்று சீனா வர்த்தகத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.



நடுத்தர வருமானம் கொண்ட சீன மக்களின் வருவாய் அதிகரித்திருக்கும் நிலையில் இலங்கைத் தூதரகம் ஆபரணக்கற்களின் விற்பனையை அங்கு முன்னகர்த்தி இருப்பது பெரும் பயனைத் தந்துள்ளது. இதன் மூலம் 2006 ஆம் ஆண்டில் 32ஆவது இடத்தில் இருந்த சீனாவிற்கான இலங்கையின் ஆபரணக் கல் ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 19 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஆகக் கூடுதலாக 20 இலங்கையின் ஆபரணக் கல் நிறுவனங்கள் பீஜிங் கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தன. அதே சமயம் சீனப் பொருட்களுக்கான இறக்குமதித் தேவையும் காணப்படுகிறது. அதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக சமநிலை காணப்படவில்லை. சீன இறக்குமதியானது பெருமளவு முதலீட்டுப் பொருட்களாகவே காணப்படுகிறது. உழவு இயந்திரங்கள் வாகன உதிரிப் பாகங்கள் இயந்திங்கள் வேதியல் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் சீனப் பொருட்களுக்கு சந்தையில் அதிகளவு கிராக்கி; காணப்படுகிறது. இதன் மூலம் மறைமுகமான நன்மையை இலங்கை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Followers

About this blog

Labels