இலங்கையின் அரசியல் வியூகங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்ற வேளை தற்போது இலங்கை சீனாவுடனான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த உடன்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் அவருடன் இராணுவ மற்றும் முப்படைத் தளபதிகளும் சீனாவிற்கு கடந்த வாரம் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போதே இராணுவ ஒத்துழைப்புக்களை பரிமாறி வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய இலங்கை நாடுகளின் படைகளுக்கு இடையில் இராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு நடந்து சில நாட்களின் பின்னரே சீனாவுடன் இது போன்ற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது இலங்கை.

தெற்காசியாவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. அது போராக வெடிக்காத நிலையில் பொருளாதாரப் போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது.அதிக முதலீடுகள், ஏட்டிக்குப் போட்டியான உதவிகள் இராணுவ தந்திரங்கள் போன்றன பனிப்போரின் உச்சக்கட்டத்தினை அடைய வைக்கின்றது. இந்த போட்டிக்குள் தான் இலங்கை சரியாக மாட்டியிருக்கின்றது. இலங்கை சீனாவை பகைத்துக் கொள்ளாமலும் இந்தியாவை கை நழுவ விடாமலும் இரண்டு கைகளில் பிடித்த வண்ணம் தனது யுக்திகளை நகர்த்துகின்றது.

இந்தியாவுடன் சுமுகமான உறவை பேணத்தவறினால் கடந்த காலம் படிப்பித்த பாடம் சொல்லும் மீதியை, அதேவேளை சீனாவை உதறித்தள்ளி விட முடியாது. காரணம் கேட்டதை விட கேட்காததையும் வாரிக் கொடுக்கிறது. மேற்குலக நாடுகள் இலங்கையை கைவிட்ட நிலையில் ஜப்பானும் தனது உதவிகளை சரி பாதி நிறுத்திவிட்டது. இவற்றுக்கு எல்லாம் மத்தியில் போர் என்ற சாட்டு முடிவடைந்த நிலையில் இலங்கைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய தேவைப்பாடு உள்ளது. இதில் முக்கியமாக தென் பகுதி அபிவிருத்தி சீனாவின் கையில் இருக்கின்றது.

சீனா தான் கடந்த வருடம் இலங்கைக்கு அதிக நிதி வழங்கிய நாடுகளின் பட்டியலில் முன் நிற்கின்றது. இப்படி வாரி வழங்குவாரை எப்படித்தான் கைவிடும் இலங்கை. இதனால் தான் இந்தியாவை விட ஒரு முழம் கூட்டி இலங்கை சீனாவுக்கு மதிப்பளிக்கின்றது. இவ்வாறான இலங்கையின் விளையாட்டை இந்தியா விரும்பாது. அது இலங்கைக்கு தெரியும். மறுபுறம் இலங்கையின் காய்நகர்த்தல்களை இந்தியாவும் அறியும். இருந்தாலும் நடவடிக்கைகளைப் பார்க்கையில் இலங்கை சீனாவிடம் தான் உண்மையான நண்பனாக இருக்க ஆசைப்படுகின்றது போல். காரணம் புலிகளுடன் போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் சீனா செய்த உதவிகளை என்றுமே மறக்கத் தயாரில்லை இலங்கை.

யுத்தத்தின் போது இலங்கை இந்தியாவிடம் இருந்து நிறைய உதவிகளை எதிர்பார்த்தன. ஆனால் கிடைத்தது திருப்தியளிக்கவில்லை. அதாவது போரின் போது இராணுவ உதவிகளை வழங்கவில்லை என்பது தான் குறை. சீனா விடயத்தில் இறுதி முடிவு இதுதான். ஆயுதங்கள், வெடி பொருட்கள், தொழில்நுட்ப உதவிகள், இராணுவ தந்திரோபாயங்கள் போன்றவற்றில் சீனாவின் பிடியில் தான் இலங்கை. பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்கவுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளால் இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு பலப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

என்ன தான் தலை தெறித்தாலும், இலங்கை அரசு பாதுகாப்பை பலப்படுத்துவதிலும், புதிய இராணுவ யுத்திகளை பெற்றுக் கொள்வதிலும் முனைப்பாக உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. இதற்கான பின்னணி தெரியாத நிலையில் அனைவரினதும் மனதில் எழும் ஒரே கேள்வி, இலங்கையின் இந்த இரட்டைப்போக்கு தன்மை எவ்வளவு காலம் நீடிக்கப் போகின்றது என்பதும், மற்றும் இரட்டை பாசத்தால் இலங்கையை வலுப்படுத்தும் அளவிற்கு ஏதாவது நாடு குதித்து விடுமோ என்ற பயம்.