எத்தனை பேர் எத்தனையோ விதமாக எல்லாம் ட்ரைய் பண்ணியிருப்பாங்க. தோற்றது தான் கூடவா இருக்கும், ஜெயிப்பது ஒரு சிலரே! எதுக்கெண்டு கேக்கிறீங்களா… அது தான் தினம் ஏதாவது பேப்பர்ல போடுவாங்களே போட்டி நிகழ்ச்சிகள்.. அதை நிரப்பி போட்டா பரிசு, பணம் அது இதெண்டு ஏதாவது கிடைக்கும். குறைஞ்சது அழாமல் இருக்கிறதுக்கு ஆறுதல் பரிசு எண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒண்டு வந்து கொண்டு தான் இருக்கும்.
இதுகளுக்கு நிரப்பி அனுப்புறதுக்கே கொஞ்ச ஆக்களும் இருக்கிறாங்கள் தானே. அதுல என் நண்பியும் ஒருத்தி….

எனக்கு இதைக் கண்ணிலையும் காட்டக் கூடாது.


அவளுக்கு(நண்பி) வேலையே இது தான். எந்தப் பேப்பர்ல என்ன போட்டியோ அல்லது ஏதாவது அப்லிகேஷன் போடுறெண்டா காணும். படிப்பு விசயத்திலயும் தான், இப்படி போட்டி நிகழ்ச்சிகளிலும் தான். உடனே எழுதி அனுப்பி விடுவாள்.
நாங்கள் நக்கலடிக்கிறது உனக்கு ஏன்டி தேவையில்லாத ஆசை, நீ காப்பரேசனுக்கு ஆட்களை விண்ணப்பம் மூலம் தெரிவு செய்தால் அதுக்கும் போடுவாயடி எண்டு. நடக்காததைக் கூட கற்பனை பண்ணுவாள். இந்த விசயத்தில வைரமுத்துவை மிஞ்சிவிடுவாள். அப்படி ஒரு கற்பனா சக்தி அவளுக்கு.

அவள் எப்போதும் போஸ்ட் கார்ட் உடன் தான் திரிவாள். கண்ட உடனே வெட்டி ஒட்டிப் போட்டுவாள். அவளுமோ விர்றேல எண்டு எல்லாத்துக்கும் போட அதுவுமோ ஒவ்வொரு முறையும் கைநழுவிப் போய்விடும். பிறகென்ன ஓஓ… வெண்டு அழுறது தான் வேலை.
நெடுகலும் இதைக் கேட்டுக் கேட்டே எங்கட காது புளிச்சுப் போச்சு. அவள் தனக்கு கிடைக்கேல எண்டவுடன் தன்ர பாதையை மாற்றினாள். எவ்வாறெண்டு யோசிக்கிறீங்களா? தனக்கு கிடைக்காடிலும் பறவாயில்ல தன்னோட பரண்ட்ஸ்சிற்;கு கிடைக்கவேணும் எண்டு ட்ரைய் பண்ணினாள்.

ஒருமுறை அலறியடிச்சுக் கொண்டு போன் பண்ணினாள். என்ன எண்டன்? எடியே!. நான் போட்ட குறுக்கெழுத்துப் போட்டியில் அவளுக்கு (என் இன்னொரு ப்ரண்ட்) கிடைச்சிட்டுது எண்டு. நான் நினைச்சன் இப்பவாவது அவள் கொஞ்சம் சந்தோசப்பட்டும் என்று… இப்படியே அவளும் தனக்குப் போடுறதும் வேற யாருக்கும் போடுறதுமாக இருந்தாள். தனக்கு மட்டும் அதிஸ்டம் இல்லை எண்டு தேவாரம் பாடுவாள். அதைக் கேட்டு உண்மையான தேவாரம் கூட மறந்து போச்சு. நிலைமை பரிதாபம் தான்.
எள்ளோட சேர்ந்து எலிப்புழுக்கையும் காயுது. அது தான் கூட இருக்கிற எங்களின்ர நிலைமை அப்பிடித் தான்.
நீங்கள் யாராவது இப்படி கஸ்டப்பட்டிருக்கிறீங்களா.?...

கொஞ்ச நாளைக்கு அவள் ஒண்டுமே அனுப்பாமல் இருந்தாள்…
பாடின வாயும் ஆடின காலும் சும்மா இராது தானே!… திரும்பத் தொடங்கிட்டாள். பாவி தான் அனுப்பிப் போட்டு எங்கட கழுத்தையெல்லோ அறுக்கிறாள். விழுங்கவும் முடியாமல் மெல்லவும் முடியாத நிலை தான் எங்களுக்கு. நாசமாப் போன கடவுளும் நாங்கள் படுகிற கஸ்டத்தைப் பார்த்திட்டாவது அவளுக்கு ஒண்டையும் குடுக்கிறான் இல்லை.
அவள் தன்ட சோகத்தை சொல்லும் போது ரம்ளர்ல தண்ணி நிரப்பி குதிச்சு சாகணும் போல இருக்கும்.
அப்படிக் கொடுமை….

என்றாவது ஒரு நாள் கிடைக்காமலா போகும் என்ற நம்பிக்கையுடன் அவளைத் திட்டிக் கொண்டிருந்தோம்.
முந்தின மாதிரி ஒரு நாள் கோல் பண்ணினாள். நானும் அறக்கப் பறந்து கொண்டு ரெலிபோனை எடுத்து ஹலோ! எண்டன். அவளே தான்! ஏன்டா இந்த விடிய முந்தி எடுத்தாள். முழுவியளம் அந்த மாதிரித்தான் என்று நினைக்கிறதுக்குள்ள அவள் விஷயத்தை சொல்லி முடிச்சிட்டாள்.

திரும்பக் கேட்டன். இவள் ராத்திரி கனவு கினவு கண்டிட்டு அலம்புறாளோ எண்டு நினைச்சன். உண்மைதான்.. அவளுக்கு நினைச்சதை விட பெரிய தொகை பரிசா விழுந்திருக்குது. கேட்ட எனக்கே நம்ப முடியாமல் இருந்தது… இண்டைக்காவது வீஸாப் பிள்ளையார் ஒரு மாதிரி கண் திறந்திட்டார் போல… அவ்வளவுக்கு அவருக்கு கொடுமை கொடுத்திருக்கிறாள் எண்டு தெரியுது.

பிறகென்ன எங்கட வரட்டு கௌரவத்தை பாக்காமல் அவளைக் கெஞ்சிக் கேட்டு அழுது புரண்டு அவளுக்கு கிடைச்ச பெருந்தொகையிலை நாங்க போய் சாப்பிட்டது தான்.