கடந்த ஜனவரி 6, 7, 8, 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்க மண்டபம், வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிஸன் (இறுதி நாள்) ஆகியவற்றில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது அனைவரும் அறிந்த விடயம் ஒன்று தான். ஒவ்வொரு நாளும் பல்வேறு அரங்குகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. அதில் 7ஆம் திகதியன்று வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் மங்கள நாயகியம்மாள் அரங்கில் பெண் எழுத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
முதலாவதாக பெண் எழுத்து எனப் பார்க்கும் போது அது சிந்தனையின் அடிப்படையிலேயே உருவானது என உற்று நோக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதாவது ஆண், பெண் என்ற பால் அடிப்படையிலேயே உருவானது எனலாம். பெண் எழுத்துக்கு தனி பண்பு
உண்டு. பெண் எழுத்தை ஏன் தேடுகிறோம் என்றால் பெண்ணின் மொழி வித்தியாசம்.
அடுத்ததாக ஈழத்தில் பெண்களின் இலக்கியம் என தனித்து இனம்காணக்கூடிய இலக்கியம் உள்ளது. நாட்டார் இலக்கியம், பெண்களின் கதைகள் தொகுப்பு, எழுத்து இலக்கியம், வாய்மொழி இலக்கியம் என பலவகை உள்ளது. பெண் எழுத்து, பெண் எழுத்தின் பண்பு, ஈழத்தில் பெண்களின் இலக்கியம் போன்ற இம் மூன்றின் அடிப்படையிலேயே பெண் எழுத்து அமைகிறது.
அடுத்ததாக பெண்களின் சஞ்சிகைகள் தலைப்பில் தேவகௌரி சுரேந்திரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெண்களின் எழுத்தை அனைவருக்குமாக கொண்டு வரும் சஞ்சிகையின் தேவைப்பாட்டை வலியுறுத்தினார். மங்கள நாயகியம்மாள் - நாம்யார்க்கும் குடியல்லோம் என்ற சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். அந்த சஞ்சிகையானது சீதனக் கொடுமை, தீண்டாமை, போன்றனவுடன் ஸ்திரி பக்கம் பெண்கள் பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் தேவைகளை உள்ளடக்கிய சஞ்சிகைகள் வெளிவரவில்லை. இந்தியாவில் வெளிவரும் அவள், விகடன் அமோக விற்பனையாகிறது. இலங்கையில் பிரதேச ரீதியாக பெண்கள் சஞ்சிகைகள் வெளிவருகின்றன.
ஈரானிய பத்திரிகையாளர் ஒருவர் பெண்கள் சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். பெண் நிலைவாதி தனக்கான சுதந்திரத்தை முன்னிலைப்படுத்துவதற்காக இல்லை. அவர்கள் தனக்கான நிலையில் உள்ளதை வெளிப்படுத்த முனைகிறார்கள் என தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
1928ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஸ்திரிகள் பக்கம், பெண்கள் பக்கம் என வெளிவந்தன. ஏன் இப்போது அவ்வாறான பக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை என கேள்வி எழுப்பினார். தற்போதைய சஞ்சிகைகளில் ஆடை, அழகு, சமையல் போன்றவையை வெளிவருகின்றன. முதலாளித்துவ அடிப்படையிலேயே விற்பனை நடைபெறுகிறது. அதாவது புத்தக விற்பனைக்காக பெண்களின் படங்களை அட்டைகளில் பயன்படுத்துகிறார்கள். இந்த நடைமுறை சரியா?
இணையத்தில் பெண்களின் எழுத்துக்களை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது.
பெண்களின் சஞ்சிகைகள்
நிவேதினி – கொழும்பு – 1994
பெண் - மட்டக்களப்பு – 1995
பெண்குரல் - கொழும்பு – 1980
நங்கை – யாழ் - 1990
சொல் - கொழும்பு
ப+ங்காவனம் - கொழும்பு
இவ்வாறான சஞ்சிகைகள் பெண்களின் எழுத்துக்கு களம் அமைத்தன. பெண்ணியம் தொடர்பான பிரச்சினைகளை சமூகத்திற்கு சொல்லவே சஞ்சிகைகள் வெளிவருகின்றன. ஆனால் அவை எந்தளவுக்கு வெற்றியீட்டியுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.
பெண்கள் தங்களுடைய எழுத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நிச்சயம் ஒரு சஞ்சிகை வேண்டும். காரணம் பொது ஊடகங்கள் பெண்கள் எழுத்தைப் புறக்கணிக்குமாக இருப்பின் தங்களை நிலை நிறுத்த பெண்கள் சஞ்சிகைகள் கட்டாய தேவையாகும் என கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.