இதயம், காதலுக்கு மரியாதை, லவ் டுடே என பார்த்த காதல் படங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு காதல் பயணம்.
படங்களையும், ட்ரெயிலரையும் பார்த்த போது, ஏதோ இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய கதையாக்கும் என நினைத்தேன். போராட்டக் காரர்கள் என்ற பெயரில், படத்துக்கு இடையூறு இல்லாமல் சில கோஸங்கள் மட்டுமே. மற்றப்படி நாயகன் - நாயகியைச் சுற்றித் தான் படம் செல்கிறது.
ஆரம்பத்தில் வரும் வெள்ளைக்கார வயதான பெண்மணி, அவருடன் பேத்தி உறவு பெண், வட்டத் தொப்பியுடன் திரியும் நாயகி, வெள்ளைக்காரர்களின் நடனம், ஆற்றில் படகிலிருந்து அடித்துத் தள்ளிவிடல் போன்ற காட்சிகளில் எம்மையறியாமல் டைட்டானிக் பற்றி சிந்திக்க வைப்பதை தவிர்க்க முடியாது.
படத்தில் நிச்சயம் பாராட்ட வேண்டியவர் கலை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஸா. சலவைத் தொழிலாளர்களின் இருப்பிடம், கவர்னர் மாளிகை, ரெயில்வே ஸ்ரேசன், மணிக்கூட்டுக் கோபுரம், பயன்படுத்தும் வாகனங்கள் என எல்லாமே புதுசு. எங்களை 1947 இற்கே கூட்டிச் செல்கிறது. ஆடையலங்காரங்களும் பாராட்டப் படவேண்டியவை.
இயக்குனர் விஜய். இன்றைய காலத்தில் வரலாற்று சம்பவங்களை ஏற்றுக் கொள்வார்களா? படம் வியாபார ரீதியில் வெற்றி பெறுமா என பெரிதாக யோசிக்காமல், வித்தியாசமன கதைக்களத்துடன் எடுத்தது மட்டுமல்லாமல், ரசிகர்களை கட்டிப் போடும் உத்திகளை படங்களில் நிறையவே தெளித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, ஆக்ஸன் என அளந்தெடுத்து படைப்பை உருவாக்கியிருக்கிறார்.
ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்' ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமான கதைக்களங்களுக்கு பழக்கப்பட்டு விட்டார். அதுவும் நான் கடவுளுக்கு பிறகு சொல்லவே தேவையில்லை. படத்திற்காக பிரத்தியேக உழைப்பு நன்றாகவே தெரிகின்றது. குஸ்தியில் ஒரு பயில்வானாக, காதலிக்காக ஆங்கிலம் கற்பது ஆகட்டும், வெள்ளைக்காரர் வெளியேறுகிறார்கள் என குதூகலிக்காமல் கவலைப்படுவது போன்ற பல காட்சிகளில் மனதில் நிற்கிறார்.
எமி ஜாக்ஸான், தெலுங்கு, ஹிந்தியென பல இறக்குமதிகளைப் பார்த்ததால், மாறு பட்ட சிந்தையுடன் அவரை உற்று நோக்கவில்லை. இவ்வாறான ஒருவரை விஜய் எங்கிருந்து தான் தேடி எடுத்தாரோ? நடிப்பில் நம்மவர்களையெல்லாம் விஞ்சி விடுகின்றார்.
ஹனீபா, அட! நல்லதொரு நடிகரை இழந்து விட்டோமே, என யோசிக்க வைக்கிறார். வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் இயல்பான நகைச்சுவையை தெளித்துச் செல்கிறார். மொழிபெயர்ப்பாளராக 'ஆர்யாவை பிடித்திருக்கு' என நாயகி சொல்வதை, 'உன் கழுதையையும் பிடித்திருக்காம்' என சொல்வது நகைச்சுவையின் உச்சம்.
இவர்களைத் தவிர, வெள்ளைக்கார தளபதி, நாஸர், எம்.எஸ்.பாஸ்கர், வாத்தியார், நித்திரை கொள்பவன், ஆர்யாவின் நண்பர்கள், தற்கால கதையில் வரும் லொல்லு சபா ஜீவா, வழிகாட்டுபவன், டாக்ஸி ட்ரைவர், வயதான அம்மணி என அனைவரும் காட்சிகளில் கவர்கிறார்கள்.
பாராட்டப்படவேண்டிய இன்னொருவர், இசையமைப்பாளர் ஜீ.பி.பிரகாஸ். வெயில் முதல் தொடர்ச்சியாக சவாலான படங்களுக்கு இசையமைக்கின்றார். 1947ஆம் கால காட்சியமைப்புக்களில் பின்னணி இசையும், பாடல்களும் இனிமை.
மொத்தத்தில் 'காதல்' என்ற மூன்றெழுத்து வார்த்தையை சரியான விதத்தில் படைப்பாக்கி சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய்.
பி.கு : நட்சத்திர வாரத்தில் தொடர்ச்சியாகப் பதிவெழுத முடியாமல் போனதற்கு யாழ்தேவி நண்பர்களிடமும், பதிவுலக வாசகர்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.