கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்து வருகின்றது. இந்த விசாரணை முன் ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், முக்கிய நபர்கள், பிரஜைகள் என பல தரப்புக்கள் சாட்சியம் அளித்துவருகின்றன. இருந்தாலும் இந்த ஆணைக்குழு தொடர்பாக உள்ளுரிலும் சர்வதேசத்திலும் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றது. இருந்தாலும் சாட்சியம் அளிப்போர் சொல்லும் கருத்துக்கள், முன்வைக்கும் சாட்சியங்கள் வித்தியாசமாக இருப்பதுடன் சிந்தனைகளின் கோணத்தை தூண்டி விடுகின்றது.

பல ஆண்டுகளாக இலங்கையை ஆட்டிவித்து புரையோடிய இனப்பிரச்சினைக்கு காரணம் என்ன? இவ்வாறானதோர் பிளவு நிலை ஏன் ஏற்பட்டது? தொடர்பான கருத்துக்கள், ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சமதான ஒப்பந்தங்கள் வெற்றியளிக்காமை, புலிகள் தோற்கடிக்கப்பட்டும் இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படாமை, இனப்பிரச்சினைக்கு தீர்வுகளை காலம் தாழ்த்துவது போன்ற பல உண்மைகள் முன்வைக்கப்படுகின்றது.

ஆணைக்குழுவின் முன் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் மிகவும் முக்கியமானது பயங்கரவாதம் இலங்கையில் எவ்வாறு தலைதூக்கியது என்பது தான்.இந்த நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கியவர்கள் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள் தான் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியாவுக்கான தூதுவராக பணியாற்றியவருமான மங்கள முனசிங்க தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் அமைதிவழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய போது சில சிங்கள பௌத்த செயற்பாட்டாளர்கள் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். 1956ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தின் காரணமாகத் தமிழ் மக்களின் எதிர்காலம் பொருளாதாரம் கலாச்சாரம் போன்றன சிதைவடையத் தொடங்கியன. அன்றிலிருந்து இன்று வரை சிதைவடைந்த நிலையில் தடயங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்கா செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால் இதற்கெதிராக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கண்டிக்கு பாதயாத்திரை சென்றார்.
இந்த எதிர்ப்புக்கள தான் அரசியலை சிதறடித்தன காலப்போக்கில்.2002ம் ஆண்டில் கையெழுத்திட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் அதில் ஒன்றும் நடைமுறைப்படுத்தவில்லை. 1983ம் ஆண்டு நடைபெற்றது ஒரு இனவன்முறை அல்ல.அது அரசியலின் பின்புலத்தில் நிகழ்ந்த வன்முறை. அதற்குப் பின்னர் தான் தமிழ் இளைஞர்கள் சிந்தித்தார்கள் இனப்பிரச்சினையை அடியோடு தகர்க்க சரியான வழி வன்முறை என்று.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் இந் நாட்டில் தமிழ் மக்களுக்கு அனுபவித்து வந்த சலுகைகள் உரிமைகள் இல்லாமல் ஆக்கப்பட்டது சுதந்திரத்துக்குப் பின்னர் தான். அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகவும் சர்வதேசத்திற்கு காட்ட முயற்சித்தும் இருக்கிறார்கள்.யுத்தம் முடிவடைந்து 15 மாதங்கள் கடந்தும் இன்று வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.தமிழ் மக்கள் மீதான இனப்பாகுபாடு அடக்குமுறைகள் இவற்றோடு விட்டுவிடாமல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளும் அபகரிக்கப்படுகிறது.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்படாமல் முன்னைய ஒப்பந்தங்கள், அறிக்கைகள் போலவே கிடங்கில் போடப்படுமானால் இலங்கை பல விதமான விமர்சனத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும்.இப்பொழுதும் இந்த நிலைதான் காணப்படுகிறது.

ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்துத் தான் இலங்கையின் எதிர்காலத் திட்டமிடல்கள் அமையுமானால் தமிழருக்கான ஒதுக்கீடுகள்,சலுகைகள்,உரிமைகள் எல்லாமே கேள்விக்குறி தான்.

கேள்விக் குறியிலேயே பிறந்து கேள்விக் குறியிலேயே குடிசை போட்டு இறப்பும் கேட்பார் அற்றுப் போனால்…….வெளிசமூகங்களும் சட்டங்களும் ஏன்?நாங்கள் சிந்திய இரத்தம் , உழைப்பு , இழந்த உயிர்கள் வீணே…வீண்!!!!

பொதுவாகப் பெண்களுக்கு தங்கள் சார்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும் வாங்கவே துடிப்பார்கள். மனதுக்குப் பிடித்து விட்டால் விலையை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள். இது எனக்கு நல்ல அனுபவம்.

பெண்களில் பல ரகமானவர்கள் இருக்கின்றார்கள். சிலருக்கு நாளுக்கு நாள் உடுப்புக்கேற்றவாறு விதம் விதமான பாதணிகள் போடுவது விருப்பம். சிலர் உடுப்பின் கலருக்கு ஏற்றவாறு நகப்பூச்சுக்கள் மாற்றிக் கொள்வார்கள். அதனைவிட காப்பு, தோடு, மணி மாலைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களையும் விதம் விதமாக வாங்கிச் சேகரித்துக் கொள்வார்கள். நாளுக்கு நாள் வித்தியாசமாக தலையலங்காரம் செய்வார்கள். சாறிகளை டசின் கணக்காக எல்லா நிறங்களிலும் வாங்கி அடுக்கிக் கொள்வார்கள். இவ்வாறு ஒவ்வொரு பெண்களின் ரசனையும் அவரவர்கள் விருப்பப்படி மாறிக் கொள்ளும்.

இதனால் கஷ்டப் படப்போவது பெண்களுடன் கூடவே பயணிக்கும் தந்தை, பின் சகோதரன், பின் காதலன், பின் கணவன். அவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான்.

நான் இங்கு குறிப்பிடுவது பெண்களின் வித்தியாசமான ஒரு ரசனை. சிறு வயது முதலே இதனையும் பெண்களையும் பிரிக்க முடியாது. இளம் பெண்களின் நடமாடும் பியூட்டி பார்ளல் அதற்குள் தான் உண்டு. அது தான் கைப்பைகள் (HAND BAGS).










இது பெண்களின் முக்கிய குறியீட்டுப் பொருளாகின்றது. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பொருட்களையும் போலவே சில பெண்கள் விதம் விதமாக இந்த கைப்பைகளைச் சேகரித்துக் கொள்வார்கள்.

மேலே உள்ள படங்களில் காணப்படும் கைப்பைகள் வித்தியாசமான மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இவை பலவர்ணங்களில் கவர்ச்சிகரமாக காணப்படுவதால் பெண்களை இலகுவாக கவர்ந்து விடுகின்றது. இன்று ஒரு நல்ல கைப்பையை வாங்க வேண்டுமெனில் குறைந்தது 500 ரூபாவிற்கு மேல் தேவை. அந்தளவு பணத்தை செலவழித்து வாங்காவிட்டால் கைப்பை எங்களிடம் ஒட்டாது என பலர் நினைத்துக் கொள்வது. முடிவு விற்பனையாளன் வருமானம் எகிறும்.

ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி 25ம் திகதி வரை படிப்பினைகளில் இருந்து பாடம் கற்பதற்கான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது தொடக்கம் 2009 மே 18ம் திகதி போர் முடிவுக்கு வந்தது வரையான காலப் பகுதியில் இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து இந்த விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்து வருகிறது.

இலங்கை இறுதிப்போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் ,போர்க்குற்றங்கள் தொடர்பாகச் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்ட போதே அதை சமாளிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸ இந்த விசாரணைக் குழுவை நியமித்திருக்கிறார்.இந்தக் குழுவே இறுதிப் போரின் போது போர்க் குற்றங்கள் நடந்துள்ளனவா என்பதை விசாரிக்கும் என இலங்கை அரசு கூறுகிறது.இருந்தாலும் சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் இந்த விசாரணைக்குழுவின் மீது ஒரு துளி நம்பிக்கை கூட இல்லை. பல நாடுகள் இந்தக் குழு நியமனத்தை வரவேற்றாலும் எந்த ஒரு நாடும் குழுவை நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆணைக்குழு இறுதிப்போரின் போது இடம் பெற்ற போர்க் குற்றங்கள் பற்றி ஆராய தகுதி இருக்கிறதா என்பது தான் சர்வதேசத்தின் கருத்து.

நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. சுதந்திரமான – பக்க சார்பற்ற விசாரணை குழுவாகச் செயற்பட்டு சரியான முறையில் சாட்சியங்களை பதிவு செய்யுமா என்பது முதலாவது சந்தேகம்.

குழுவின் முதலாவது அமர்வின் போது அழைக்கப்பட்ட சாட்சியாக அரச சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேர்னாட் குணதிலக்க சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் அரச தரப்பு அதிகாரிகளும் சாட்சியம் அளித்துள்ளனர். மற்றைய தரப்பான புலிகள் தரப்பிலோ தமிழர் தரப்பிலோ சாட்சியமளிக்க யாராவது தெரிவு செய்யப்பட்டுள்ளனரா அல்லது அவர்களை அழைக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

உண்மையான கருத்தை ஆணைக்குழு வெளியிட விரும்பினால் கட்டாயம் இரண்டு தரப்பினதும், கருத்தைக் கேட்க வேண்டும். ஆனால் புலிகள் தரப்பில் சாட்சியமளிக்க எவரும் இல்லை. அரச தரப்பில் சாட்சியமளிக்க அதிக வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது. புலிகள் தரப்பில் சாட்சியமளிக்க கூடியவர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு எங்கென்று தெரியாமல் போய் விட்டனர். அவ்வாறு இருக்கையில் சாட்சியங்கள் அனைத்தும் உண்மைத் தன்மையானவை என எவ்வளவு தூரத்திற்கு நம்புவது? இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதாவது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் சாட்சியம் சொல்ல வந்தால் அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாக நிர்ப்பந்த நிலை உருவாகுகையில் சிந்திக்க வேண்டியிருக்கும்.

சமாதானம் முறிந்து போனதற்கான காரணங்களை இந்த விசாரணை ஆணைக்குழு பக்க சார்பின்றி கண்டு பிடிக்க வேண்மாயின் அனைத்து தரப்புக்களினதும் சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

புலிகள் தரப்பாக சாட்சியமளிக்க கூடியவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் நடைபெறும் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக இந்த ஆணைக்குழுவின் அமர்வை வெளிநாடுகளில் நடத்த அரசு தயாராக உள்ளதா? இவ்வாறு செயற்படுவதன் மூலமே இவ் ஆணைக்குழுவின் நம்பகத் தன்மையை முக்கியமாக தமிழ் மக்கள் முன்னிலையில் கட்டியெழுப்ப முடியும்.

ஆணைக்குழுவின் விசாரணை ஒரு தலைப்பட்சமாக இடம்பெற வாய்ப்பு உருவாகின்றது. இதனால் முடிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படாதவையாகவே காணப்படும். பேர்னாட் குணதிலகவை எப்படி ஆணைக்குழு சாட்சியாக அழைத்ததோ… அது போல புலிகள் தரப்பில், தமிழர் தரப்பில் சாட்சியங்களை அழைக்க வேண்டும். அவர்கள் அச்சுறுத்தப்படும் வேளை உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஏற்பாடுகளுடன் அரசு செயற்பட்டால் பல வெளிவராத உண்மைகளை வெளிக் கொண்டுவர முடியும். பாதகமான உண்மைகள் வெளிவந்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவே அரசு இவற்றை கவனத்தில் கொள்ளவில்லைப் போல்.

இலங்கை அரசு ஒரு பக்கத்தில் இருந்து திரட்டிய சாட்சியங்களைக் கொண்டு தயாரிக்கப் போகும் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே அமையப் போகின்றது. சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமானால் இந்த விசாரணை ஆணைக்குழுவை பக்க சார்பற்ற முறையில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு இல்லாத எத்தனை சாட்சிகளை அழைத்தாலும் சரி! எத்தனை ஆணைக்குழுவை அமைத்தாலும் சரி! நடுநிலையாகச் செயற்படாது விட்டால் சர்வதேசம் ஒரு போதும் அரசு வெளியிடும் அறிக்கையை ஒரு காலமும் நம்பப் போவதில்லை.

இன்றைய காலப்பகுதிகளில் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியல்வாதிகள் சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் என்ற போக்கே தொடர்கிறது. இந்த சூழ்நிலைகளில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு குறைவடைந்து கேள்விக் குறியாகும் வேளை, மறுபுறம் மக்கள் மத்தியில் அரசியல் என்பது பொம்மலாட்டமாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஓவ்வொரு அரசியல் கட்சியும் நிலைமைகளை தமக்கு ஏற்ற மாதிரி சாதகமாக தங்கள் பக்கம் திருப்பி அதில் நன்மையடைய முயற்சிக்கிறார்கள். இதற்கு சரியான மூல காரணம் இலங்கை அரசியல் வாதிகளும் சரியான தலைமைத்துவமும் இல்லை என்பதே ஆகும். எந்த விதத்திலும் விதிவிலக்கில்லை என்ற போக்கே தொடர்கிறது.

அரசியல் விவகாரங்கள் இலங்கையில் திடீர் திடீரென மாற்றம் பெறுவதும் அதற்கேற்ப அரசியல்வாதிகளும் சாதுரியமாக காய் நகர்த்தல்களில் ஈடுபடுவதும் தான் மக்களுக்கு வியப்பாகக் காணப்படுகிறது. ஆளுந்தரப்பும் எதிர்தரப்பும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருப்பதும் மறுகணம் பூதம் வெளிக்கிட்டது போல இரு தலைவர்களும் ஒன்று கூடி பொது இணக்கப்பாட்டுக்கு இணங்குவது போல மக்கள் மத்தியில் தோன்றுவது, இவ்வாறான பின் புலத்தில் அவர்கள் இணக்கப்பாட்டை நம்புவதா? மறுப்பதா என மக்கள் மத்தியில் திடீர் கேள்விகள் முளைத்துள்ளன.

ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக கடந்த மாதம் முதல் பேச்சுக்கள் ஆமை வேகத்தில் சென்ற கொண்டிருக்கிறது. முயல் வேகத்தில் ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவருக்குமிடையேயான பேச்சுக்கள் காரணமாக கட்சித் தாவல்கள் தற்றும் கட்சிகளின் உட்பூசல்கள் வெளிவருகின்றன.

எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்த ஆளுந்தரப்பு முயற்சிப்பதாகவும் இதனால் அரசுடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ரணில் தெரிவித்துள்ளார். இவ்வாறான போக்குகள் தொடர்வதால் இரண்டு தரப்புகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுக்கு இடமே இல்லை என்று எதிர்பார்த்திருக்க திடீர் திருப்பமாக கடந்த கிழமை இரு தரப்பின் தலைவர்களும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தடைப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் பேச்சு வார்த்தையினை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

எதுவாக இருந்தாலும் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணக்கமானதோர் முடிவை எட்ட வேண்டும் என்பது தான் எல்லோர் எதிர்பார்ப்பும். ஆனாலும் ஆளுந்தரப்பு தங்கள் ஆட்சிக் காலத்தை நீடிப்பதற்கான வியூகங்களைத் தீட்டி வருகின்றது. இதை இன்றைய நடவடிக்கைகள் காட்டிக் கொடுக்கின்றன.
அதே நேரம் எதிர் தரப்பு தர்ம சங்கட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உள்வீட்டு பிரச்சியையை விட அடுத்த தலையிடி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைப்பது எப்படி? அதற்கான இறுதி நாள் நாளை ஆகஸ்ட் 15ம் திகதி. பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் இப்பொழுதும் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ம் திகதிக்குப் பின்னரும் பேச்சுவார்த்தையை தொடர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆகா எவ்வளவு அதிஷ்டம் கிடைத்தும் யானை தன் கையால் தன் தலையில் மண்ணையள்ளிப் போட்டால் யார் தான் என்ன செய்றது?

இருந்தாலும் வர்த்தக சலுகைகளை நீடிக்க வேண்டுமானால் தங்கள் 15 நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழு கோரியதை அடுத்து இலங்கை அரசு ஒன்றியத்துடன் நடத்தி வந்த சகல பேச்சுக்களை கடந்த யூலையில் நிறுத்தியது.

ஓட்டு மொத்தத்தில் இலங்கை அரசியலே ஒரு குழப்பமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தீர்வு யார் வல்லவன் யார் அரசியலமைப்பை மாற்றுவது என்ற போட்டி இல்லை. இப் பொழுது தேவை நாட்டின் பொருளாதாரத்தையும் எதிர்கால திட்டமிடல்களையும் சரியான பாதைக்கு திருப்புவது தான்.தரப்புக்கள் இணங்கி செயற்பட வேண்டிய கட்டாய தேவைப்பாடு உருவாகியுள்ளது.

இணக்கங்கள் கருத்தொன்றிப்பு மூலம் தான் தீர்வை எட்ட முடியும். இல்லா விட்டால் எதுவுமே யாருக்கும் எட்டாக் கனியாகி விடும்.

Followers

About this blog

Labels