(டிசம்பர் 10ம் திகதி 61வது மனித உரிமைகள் தினம்)
இன்றைக்காவது நினைவு கோருவோம்…
மனிதன் இப்பூமியில் பிறந்த கணத்திலிருந்து அவனுக்கும் அவன்சார் சமூகத்திற்கும் பொதுவான சில அடிப்படை உரிமைகள் உரித்தானவை என்ற மேலோட்ட எண்ணங்களே இன்றைய மனித உரிமைக்கான சிந்தனைகளை பல விதமாக விளைவித்தது. மனித உரிமைகளின் வளர்ச்சி நிலைமைகள் மனித சமூதாய வளர்ச்சியின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது.
ஆரம்பநிலையில் மனிதன் கூட்டாகவே வாழ்ந்து வந்தான். இதனால் இயன்றவரை பிறர் நலன்களுக்கு ஊறுவிளைவிக்காது இசைந்து வாழும் இயல்புகளைக் கற்றுக்கொண்டான். இவ்வாறு சமுதாய அமைப்பு கட்டியெழுப்பப்பட கடமைகளும் உரிமைகளும் அவனுக்கு உரித்தாகத்தொடங்கியது. இவை காலப்போக்கில் சமூக நடத்தைக்கோட்பாடுகளாக உருவாக்கப்பட்டு மதிக்கப்பட்ட நிலையில் அந்தந்த சமுதாயங்களின் உரிமைகளாக பரிணாமத்தைப் பெறத்தொடங்கியது.
இயல்பான சுதந்திரத்தோடு வாழவும் தான் இசைந்துவாழும் சமுதாயத்திற்கான கடமைகளை முழுமையாக ஆற்றவும் மனிதன் முற்படும் வேளைகளில் உரிமைகள் மறுக்கப்படும்போதோ அல்லது அளிக்கப்பட்டு வந்த உரிமைகள் தடைசெய்யப்பட்டு வந்தாலோ மனித சமுதாயம் அப்படிப்பட்ட நிலைமைகளைப் பொறுத்துக்கொள்வதில்லை. இதனால் தனது சமுதாயத்தின் மேல் கேள்விக்கணைகளைத் தொடுத்தான். இவையே தனிமனித உரிமைகளின் மூல விதைகளாகும். தனிமனிதன் மேல் எழுப்பும் கேள்விகளை சமுதாயம் அங்கீகரித்து இடமளிக்கும் போது தான் அவனது உரிமைகள் உறுதியளிக்கப்படுகின்றது.அத்தகைய உரிமைகள் “மனித உரிமைகள்”எனும் தொகுப்பில் வந்து சேர்கிறது.
உரிமைகள் வழங்கப்படுவதில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் கூட மனித உரிமைகள் குறித்த சிந்தனைகள் பழங்காலம் முதலே அவ்வப்போது வெளிப்பட்டு வந்துள்ளன.சங்ககால இலக்கியங்களில், பழைய கிரேக்க ரோமானிய இலக்கியங்களில், கிறிஸ்தவ மதபோதனைகளில், மில்ட்டன், ஜான்லாக் ஆகியோரது படைப்புக்களில் ஆங்கில சட்டவியல் நூல்களில், இன்று பன்னாட்டடுச் சட்டத்தின் பிதாமகன் எனப் போற்றப்படும் டச்சு நாட்டைச்சேர்ந்த “ஹியூகோ குரோட்டிஸ்” என்பவரது நூல்களில் உரிமைக் கோட்பாடுகளின் சிற்றொளிக் கீற்றுக்கள் ஆங்காங்கு சிதறிக்கிடப்பதைக் காணமுடிகிறது.
கால ஓட்டத்தில் மனித உரிமைகளுக்காக போராட்டம் தலைதூக்கிய வேளையில் மனித உரிமைப் பாதையில் தோன்றிய சில முக்கிய மைல்கற்களை இன்று ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.
• 1215ம்ஆண்டு -இங்கிலாந்தில் மாக்னா கார்ட்டா சாசனம் பிரகடனம். (மனித உரிமைப் பயணத்தில் வைகறைக்கீதம்!)
• 1222ம் ஆண்டு-ஹங்கேரி நீதிமன்ற விசாரணைகளின்றி குற்ற நிரூபணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கக்கூடாது.
• 1689ம் ஆண்டு-இங்கிலாந்து-உரிமைகள் சட்டம்.
• 1789ம் ஆண்டு-பிரான்ஸ்-பிரெஞ்சுப் புரட்சி-மனித உரிமைகள் பிரகடனம்.
• 1791ம்ஆண்டு-அமெரிக்கா –உரிமைக் சட்டம்
• 1971ம்ஆண்டு-ரஷ்யா-ரஷ்யப் புரட்சி
• 1922ம்ஆண்டு-பிரான்ஸ்-மனித உரிமைப் பன்னாட்டு கூட்டமைப்பு.
• 1945ம்ஆண்டு-ஐ.நா அமைப்புச்சாசனம்-நாடற்றோர் நிலை குறித்த ஒப்பந்தம்.
• 1948ம்ஆண்டு-ஐ.நா உலக மனித உரிமைகள் பிரகடனம்.
• 1953ம்ஆண்டு-ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் அமைப்பு.
• 1959ம்ஆண்டு-ஐ.நா குழந்தைகள் உரிமைப் பிரகடனம்.
• 1976ம்ஆண்டு-ஐ.நா குடியுரிமை அரசியல் உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்பாடு ஐ.நா பொருளாதார சமூக பன்னாட்டுரிமைகள் குறித்த உடன்பாடு
• 1993ம்ஆண்டு-உலகளவில் பயங்கரவாதத்தைத் தடுக்க நடவடிக்கைகள் குறித்து ஐ.நா தீர்மானம் -மனித உரிமைகளும் பயங்கரவாதமும்
இவ்வாறான எழுச்சிகளும் பிரகடனங்களும் சமுதாய மனித உரிமை விடுதலைக்கான உந்து சக்தியை வழங்குவனவாக அமைந்தது.இவ்வாறு இருக்கையில் சர்வதேச முயற்சிகள் தளராது செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. மனித உரிமை மீறலை சர்வதேச அரங்கு ஒரு போதும் சும்மா பார்த்துக்கொண்டிருப்பதில்லை.போர்க் கைதிகள் என்றால் அவர்கள் மனிதர்கள் இல்லையா? இது குறித்துக் கூட சர்வதேச முயற்சிகள் இன்னொரு மனித உரிமைக்கான களத்தை உருவாக்கியது. 2ம் உலகப் போரில் புதையுண்டு உயிரற்ற தறுவாயில் உள்ள மனிதத்தைப் பாதுகாக்க கைதிகளுக்கான வன்முறையின் உச்சக் கட்டத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க 1864ம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த முயற்சியின் மூலம் தான் உலகளாவிய செஞ்சிலுவைச் சங்கமும் உருவாக்கப்பட்டது. இதுவும் மனித உரிமையின் ஒரு வெற்றித் தூண் தான்.
மனித உரிமைகளின் பாதுகாப்பில் ஐக்கிய நாடுகளின் பங்களிப்பை எடுத்து நோக்குவோமானால் அமெரிக்காவில் சான்பிரஸ்கோ நகரில் 25ம் திகதி ஏப்ரல் 1945ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் 50 நாடுகளின் பங்கேற்பில் ஐக்கிய நாடுகளின் அமைப்புச்சாசனம் கையெழுத்திடப்பட்டது. ஐ.நா அமைப்புத்தான் “மனித உரிமைகளின் காவலராக” விளங்குகிறது என்பதில் ஐயம் இல்லை. மனித உரிமைகள் கமிஷனால் 10ம் திகதி டிசம்பர் மாதம் 1948ல் உலக மனித உரிமைகள் சாசனம் மட்டும் வெளியிடப்பட்டது. அதன் பின் இரு பகுதிகளாக 16ம்திகதி டிசம்பர் 1966ல் ஐ.நா பொதுச்சபையால் நிறைவேற்றப்பட்டு 3ம்திகதி ஜனவரி 1976 முதல் அமுலுக்கு வந்த குடியுரிமைகள் அரசியல் உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்பாடு மற்றும் பொருளாதாரச் சமூகப் பன்னாட்டுரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்பாடு ஆகியவற்றை வெளியிட்டன. 1976முதல் இவை அமுலுக்கு வந்தன. உலக மனித உரிமைகள் பிரகடனம,; குடியுரிமை அரசியல் உரிமைக் கோட்பாடுகள், இனப்படுகொலை , அடிமை ஒழிப்பு, கட்டாயப்படுத்தி வேலைவாங்குதல், பாகுபாடு ஒழிப்பு, கல்விப்பாகுபாடு அகற்றல், அகதிகள் நாடற்றோர் நிலைமைகள் இவ்வாறான இடர்களுக்கு ஐ.நா உரிமைக்குரல் கொடுத்தது.
1978ம் ஆண்டு 2ம்குடியரசு யாப்பில் உத்தரவாதப்படுத்தப்படும் உரிமைகளும் சுதந்திரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 1978இன் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் UDHR இலும் இடம்பெறும். 18 மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் உள்ளடக்கி உள்ளன. இவற்றுள் அனேகமானவை சிவில் உரிமைகளாகும். இலங்கையில் மனித உரிமைகளைப்;பாதுகாக்கும் ஒம்புட்ஸ்மன், மனித உரிமைகள் ஆணைக்குழு,இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் நிரந்தர ஆணைக்குழு, அரச கரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பெண்கள் விவகாரம் பற்றிய தேசிய குழு, பொலீஸ் மற்றும் பொலீஸ் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, HRTF (மனித உரிமைகள் நடவடிக்கைப் படை) , ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் போன்றனவும் இடம்பெறுகின்றன.
இவ்வாறு போராடிப்பெற்ற உரிமைகள் இதனைப் பாதுகாக்க அமைப்புக்கள் ஆணைக்குழுக்கள் போன்றன நிறுவப்பட்டும் எந்த விதமான பயனும் அற்ற நிலையிலேயே கிடக்கிறது.இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்திலும் மனித உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.மனிதத் துடிப்பின் அலறல்கள் எங்கும் ஒலிக்க மனிதம் சாலை ஓரச் சருகாகிறது.சமவாயங்கள் பிரகடனங்கள் அந்தந்த மாநாட்டில் மட்டுமே உயிர் பெற்றவை.பின் இருந்த இடமில்லாமல் போய்விட்டது.
உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் மனித கௌரவத்தையும் நீதியையும் உறுதிப்படுத்த இயலாதிருக்கும் சூழ்நிலையில் இன்றைய தினத்துக்கான தொனிப் பொருள் “மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாத்து மேம்படுத்த அணிதிரளுமாறு சமுதாயத்தின் சகல பிரிவினர்க்கும் விடுக்கின்ற ஓர் அழைப்பாக இருக்கிறது”.மோதல்கள் இடம்பெறுகின்ற நேரங்களிலோ அல்லது சமூகங்கள் அடக்கு முறைக்குள்ளாகும் வேளைகளிலோ மாத்திரம் கருத்தில் எடுக்க வேண்டிய ஆவணம் அல்ல.மனித உரிமைகள் என்ற பதம் இன்று உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்படுவது மாத்திரமல்ல துஷ்பிரயோகமும் செய்யப்படுகிறது.இப்பதம் அரசியல் ஆதாயத்துக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.மனித சுதந்திரங்களை பாதுகாப்பதற்காக பாடுபடுபவர்கள் மாத்திரமல்ல நிர்மூலஞ் செய்பவர்களும் மனித உரிமைகள் என்ற பதத்தை தங்களின் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இன்றைய தினத்தில் நாம் சொல்லிக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது.உரிமைகளை பிரகடனம் செய்வதனால் விடுதலையைப் பெறமுடியாது.செயற்பாடுகளை மாற்றியமைப்பதன் மூலமே அவற்றை நடைமுறைப்படுத்த முடியும்.
இலங்கை வரலாற்றில் என்றுமே இடம் பெற்றிராத அளவுக்கு ஜனநாயக மரபுகளை குழிதோண்டி புதைப்பதற்கு அவசரகால வழிமுறைகளும் பயங்கரவாத தடைச்சட்டமும் வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன.அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகளுக்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டிருந்த போதும் 1979அம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இச் சட்டமூலங்கள் அடிப்படை உரிமைகளின் பயன்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.இன்று அரசு எதிர் நோக்கும் G SP+ வரிச்சலுகை பிரச்சினை கூட மனித உரிமைகள் சரியான முறையில் பேணப்படாமையே காரணம் காட்டப்படுகிறது.வரிச்சலுகை நிபந்தனையில் முக்கியமானது சலுகை பெறும் நாடுகள் தமது நாட்டில் மனித உரிமைகளைச் சரியான முறையில் பேணப்பட வேண்டும் என்பதாகும்.மனித உரிமையாலேயே எமது நாட்டின் பொருளாதாரம் சீர்குலையப் போகிறது என்றால் அதன் சக்தியை சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் கோருகிற ஒவ்வொரு உரிமையையும் மற்றவருக்கும் கொடுங்கள்.