என்ன நடக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாத நிலை தொடர்கிறது அது தான் ஆச்சரியமாகவும் இருக்கிறது. காரணம் தெரியாத நிலையில் தத்தளிப்பதால் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மைகள் ஆகுறோம். ஐம்புலன்கள் இருந்தும் காந்தி சொன்ன குரங்குகளாய் உருவெடுத்துள்ளோம்.



யாழ் நகரின் மையத்தில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பங்காவான பழைய பூங்காவான ( old park ) திட்டமிடப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்றது.தற்போது அங்கு நூற்றாண்;டு வயதைக் கொண்டாடிய பெருமளவிலான மரங்கள் வெட்டீ அகற்றப்பட் டுவிட்டன.எஞ்சியவற்றையும் சூறையாட முனைப்புக்காட்டப்ப டுவதாக ஊகிக்கப்படுகிறது.ஆங்கிலேயர்களது ஆட்சியின் கீழ் யாழ்குடா நாடு இருந்த காலப்பகுதியில் சுண்டுக்குழியில் உருவாக்கப்பட்டதே பழைய பூங்கா காவாகும். யாழ் மாவட்டத்தில் முதலாவது அரச அதிபரான பேர்சிவல் அட்லன் டையிட் பழைய பூங்காகாவின் இயற்கையை தொடர்ந்து பேணும் வகையில் அரச அதிபருக்கான விடுதி தவிர வேறு எந்தவொரு நிரந்தர கட்டடங்களையும் அங்கு அமைக்கத் தடை விதித்திருந்தார்.

1829 ஆம் ஆண்டில் ஒக்டோபர் முதலாம் திகதி ஆங்கிலேயரான இவர் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.பழைய பூங்காவின் இயற்கையினை இறுதிவரை நேசித்து வந்திருந்த அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதனை திறந்தும் விட்டிருந்தார்.ஆட்சி மாற்றங்கள் காரணமாக பழைய பூங்காவின் நிலை சர்சைக்குள்ளாகியது. அது கேந்திர நிலையமாக இருந்ததால் ஆட்சியாளர்கள் தங்கள் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தனர்.ஏன் இப்பவும் அந்த நிலை தான் தொடர்கிறது. எனினும் 1996 ஆம் ஆண்டு யாழ்குடா படையினர் கைப்பற்றியதிலிருந்து (சாட்டு போக்கு எங்களுக்கு கைவந்தது தானே?) கண்ணிவெடியைக் காரணம் காட்டி பொதுமக்கள் பாவனைக்குத் தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் முன்னைய அரசாங்க அதிபரினால் ஆடம்பர விடுதி ஒன்று கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கிருந்த விடுதி குண்டுத்தாக்குதலில் சேதமைந்து விட்டது என்ற காரணத்தை முன்வைத்துள்ளார்கள்.

அடுத்து தற்போது வடமாகாண ஆளுநருக்காக சுமார் 100 மில்லியன் செலவில் மாளிகை ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த நிர்மாணப் பணிகளுக்காக நூறு வயதைத் தாண்டிய மரங்கள் எல்லாத்தையும் வெட்டிச்சரித்து விட்டார்கள். இது அரசாங்க சொத்து என்ற வகையினாலும் , கண்டி வீதியோரமாக அமைந்துள்ளதாலும் அனைவரது கண்களிலும் படும்படியாக இருக்கிறதால் தானோ அதற்கு இந்த நிலை ஏற்பட்டது.

சர்ச்சையில் சங்கிலியன்………….


1620 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாண இராஐயத்தின் மீது படையெடுத்தனர். அந்தப் படையெடுப்பை அன்று யாழ்ப்பாண இராஐயத்தை ஆண்டு வந்த சங்கிலிய மன்னன் எதிர் கொண்டான் என்பது வரலாறு.
கி.பி 1519 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராஐயத்தின் அரசனாக முடி சூட்டிக்கொண்டான் சங்கிலியன். என்ன தான் சங்கிலியன் கொடுங்கோல் ஆட்சி செய்தாலும் போர்த்துக்கேயரை கடைசி வரை எதிர்த்து நின்றவன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே போர்த்துக்கேயருக்கு எதிர்ப்புத் தெரிவித்தான் அவர்களோடு தொடர்புடையவர்களைத் தண்டித்தான்.உண்மையா கவே சங்கிலியன் ஆளுமை மிக்கவன் அத்தோடு நாட்டுப்பற்றுக் கொண்ட வன்.போர்த்துக்கேயர் 1505 ஆம்ஆண்டே கோட்டை இராசதானிக்கு வந்திருந்த போதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அதற்கான முழுக் காரணமும் சங்கிலியன் தானாம்.அந்த வகையில் அவன் பாராட்டுக்குரியவன் தான் உண்மையிலே………

யாழ் முத்திரைச் சந்தியில் அமைந்திருக்கும் சிலையானது முதலாவது சங்கிலியனுடையது. ஆனால் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் இவன் அல்ல இவருக்குப் பின்னால் இன்னொரு சங்கிலியன் வருகிறான் அவன் சங்கிலி குமாரன் என்று அறியப்படுகிறார். 1972 ஆம் ஆண்டே முதன் முதலாக சங்கிலியன் சிலை நல்ல}ரில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல முறை சங்கிலியன் சிலை சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இந்திய சிற்பியினால் புதிதாக வடிவமைக்கப்பட்ட சங்கிலியன் என்ற சிலை பொன்னிறத்தில் திறந்து வைக்கப்பட்டது.

  • முன்னர் இருந்த சிலை எங்கே?
  • புதிய சிலையை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
  • இந்தச் சிலை எத்தனையாம் சங்கிலியன்?(உருவ அமைப்பு)
  • பழைய சிலையயைப் பாதுகாக்க நூதனசாலையில் வைக்கப்படாமைக்கான காரணம் என்ன?
மீண்டும் சங்கிலியன் சர்ச்சையில் சிக்கினால் தமிழ் மக்கள் சங்கிலியனுக்காக போராடுவார்களா?இல்லை வாழ்நாள் மௌனிகளாக இருந்து விடுவார்களா? எனது ஆதங்கமும் அது தான்!!

நல்லூர் மந்திரிமனையின் நிலை……?


நல்லூரின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் கம்பீரமான முகப்புத் தோற்றத்துடன் அமைந்திருக்கும் இந்த வரலாற்றுச் சின்னம் “மந்திரி மனை என்றழைக்கப்படுகிறது. பருத்தித்துறை வீதியில் சட்ட நாதர் கோயிலுக்குச் சற்றுத் தெற்காக அமையப்பெற்றுள்ளது.இதன் கட்டட அமைப்பும் மரத்தினாலான சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலைமரபை பிரதிபலிக்கின்றன.இதன் வெளித் தோற்ற அமைப்பு ஒல்லாந்தரின் கலை அம்சத்தைக் குறிப்பிடுகின்றதாம். இந்த மனையில் பெரிய கிணறு உள்ளது. அந்தக் கிணற்றின் ஒரு பகுதி வெளியேயும் மற்றைய பகுதி மனைக்கு உள்ளேயும் கட்டப்பட்டுள்ளதாம். கருங்கல்லினால் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கிணற்றுக்கு இன்னொரு முக்கியத்துவம் இருக்கிறது. இக்கிணற்றுக்கும் யாழ்ப்பாண மன்னர்கால யமுனா ஏரிக்கும் இடையே சுரங்கப்பாதையி ருந்ததாகவும் சில காலங்களில் இக்கிணற்றறில் நீர்பெருக்கு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது இவை மூடுபட்டும் இடிந்த நிலையிலும் தோற்றமளிக்கிறது. பொக்கிஷமாக பேணப்படவேண்டியவை கவனிப்பாரற்று அழிந்தே போகிறது. பாதுகாப்பதற்கு பல வழிகள் இருந்தும் யாரும் முன்வருவதாக இல்லை. உலகில் உள்ள புராதனங்களைப் பாதுகாப்பதற்காகவே UNESCO அமைப்பு முன்வருகிறது. ஆனால் இது தமிழரின் பண்பாட்டு இடம் தானே!அது தானோ இந்த நிலை?

இனிவரும் எங்கள் பரம்பரைக்கு வரலாற்றைச் சொல்ல என்னத்தை ஊதாரணமாக காட்டப்போகிறோமோ தெரியவில்லை. எந்த ஒரு கலைஞராலும் இப்படி ஒரு கட்டடத்தை கட்ட முடியுமா?தெரியவில்லை.படிப்படியாக தன்னிலையை இழக்கிறது யாழ்ப்பாணம்.


சங்கிலியன் தோப்பு கல்தோரண வாசல் கரைகிறது……….

நீண்ட காலமாக கவனிப்பாரற்று கிடக்கிறது இக்கட்டடத்தொகுதி. முத்திரைச்சந்தைக்கு வடக்கே கொஞ்சத் தூரத்தில் இத்தோரண வாசல் அமைந்துள்ளது. இதனைச் சிலர் சங்கிலிய மன்னனின் அரச மாளிகை வாசல் எனவும் வேறு சிலர் யாழ்ப்பாண மக்களின் அடிமைவாழ்வுச் சின்னம் என்று கூறுகின்றனர். இக்கட்டடமும் அதன் கலை அம்சமும் ஒல்லாந்தர் காலத்துக்குரியவை. இதன் நிலையும் அதோ கதி தான்.


யாரும் தேடா யமுனா ஏரி…..

யமுனா ஏரி நல்லூர் இராசதானி காலத்து மிகமுக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். சிங்கை பரராசசேகரன் என்பவன் தனது சமய ஆர்வத்தினால் தானும் குடிமக்களும் நன்மை பெற வேண்;டுமென்று எண்ணி 1478 ஆம் ஆண்டளவில் யமுனா ஆற்றில் இருந்து காவடிகளில் புனித நீரைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததால் இது இப் பெயரைப் பெற்றுள்ளது. “ப "னா வடிவில் அமைக்கப்பட்டுள்ள யமுனா ஏரி தமிழரின் தொழில்நுட்ப திறனை எடுத்துக்காட்டுகிறது.

இப்படியான பல கட்டடங்கள் யாழ் இராசதானியின் வரலாற்றைப்பறை சாற்றுகின்ற வேளை அவை வெகுவிரைவில் காணாமல்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். வரலாறுகளைச் சொல்லத்தான் தடயங்களைப் பாதுகாக்கவேண்டும். இங்கு நிலை தலை கீழ் ஆமை தான் வந்த வழியை அழிப்பது போல நாங்கள் மாறிவிட்டோமா?சரித்திரம் படைத்த எங்கள் செயல் புகழ் இன்று சரியத்தொடங்கி விட்டன. எங்கள் பண்பாடு பழைமையானது பாதுகாப்பது எங்கள் கடமை.


அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் திகதியன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாக்கப்பட்டுள்ளது.


பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி 1909இல் அமெரிக்க சோஷலிச கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர்.மார்ச் 25,1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140ற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.இந் நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது.தொடர்ந்து அனைத்துலக மகளிர் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.


1913-1914 களில் முதல் உலகப்போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினர்.இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

ஐ.நாவின் பேரறிவிப்பின் பின் வந்த நாட்களில் ஐ.நா.பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

இதன் அடிப்படையில் எத்தனையோ பெண்கள் ஏதோ ஒரு வகையில் சாதனைப் பெண்களாக வர்ணிக்கப்படுகிறார்கள்.உதாரணமாக அன்னை திரேசா, இளவரசி டயானா,முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ,விண்வெளி வீராங்களை கல்பனாசாவுலா ,முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா ,அருந்ததி றோய் போன்ற இன்னும் பல பேரை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இன்றும் எமது நாட்டுப் பெண்கள் வேலை தேடிச் சென்று ஆணியோடு நாட்டுக்குத் திரும்புகிறார்கள். தேயிலைத் தோட்டத்துப் பெண்கள்; ஊர் குடிக்க தேயிலை பறிக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையை கங்காணி , பெரிய துரைமார் குடிக்கிறார்கள்.தினம் ஒரு கற்பழிப்பு , மனைவி கணவனால் தூக்கிட்டுக் கொலை ,பெற்ற மகளையே மாறுபட்டு நோக்கும் தந்தை இவ்வாறு பல வழிகளில் துவண்டு போகிறது எம் இனம். மாநாடுகளில் மேசை போட்டு கதைத்தால் மாத்திரம் போதாது.அதைத் துளியேனும் நிறைவேற்ற முற்படவேண்டும்.


பூபோல பெண்ணாம்.. பூமிக்கு உவமை பெண்ணாம்….போலி உவமைகள் வேண்டாம்.

நீலிக் கண்ணீரும் வேண்டாம். பெண்ணைப் பெண்ணாக வாழ அனுமதியுங்கள்.

என் சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!

கடந்த ஜனவரி 6, 7, 8, 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்க மண்டபம், வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிஸன் (இறுதி நாள்) ஆகியவற்றில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது அனைவரும் அறிந்த விடயம் ஒன்று தான். ஒவ்வொரு நாளும் பல்வேறு அரங்குகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. அதில் 7ஆம் திகதியன்று வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் மங்கள நாயகியம்மாள் அரங்கில் பெண் எழுத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

முதலாவதாக பெண் எழுத்து எனப் பார்க்கும் போது அது சிந்தனையின் அடிப்படையிலேயே உருவானது என உற்று நோக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதாவது ஆண், பெண் என்ற பால் அடிப்படையிலேயே உருவானது எனலாம். பெண் எழுத்துக்கு தனி பண்பு
உண்டு. பெண் எழுத்தை ஏன் தேடுகிறோம் என்றால் பெண்ணின் மொழி வித்தியாசம்.

அடுத்ததாக ஈழத்தில் பெண்களின் இலக்கியம் என தனித்து இனம்காணக்கூடிய இலக்கியம் உள்ளது. நாட்டார் இலக்கியம், பெண்களின் கதைகள் தொகுப்பு, எழுத்து இலக்கியம், வாய்மொழி இலக்கியம் என பலவகை உள்ளது. பெண் எழுத்து, பெண் எழுத்தின் பண்பு, ஈழத்தில் பெண்களின் இலக்கியம் போன்ற இம் மூன்றின் அடிப்படையிலேயே பெண் எழுத்து அமைகிறது.

அடுத்ததாக பெண்களின் சஞ்சிகைகள் தலைப்பில் தேவகௌரி சுரேந்திரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெண்களின் எழுத்தை அனைவருக்குமாக கொண்டு வரும் சஞ்சிகையின் தேவைப்பாட்டை வலியுறுத்தினார். மங்கள நாயகியம்மாள் - நாம்யார்க்கும் குடியல்லோம் என்ற சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். அந்த சஞ்சிகையானது சீதனக் கொடுமை, தீண்டாமை, போன்றனவுடன் ஸ்திரி பக்கம் பெண்கள் பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் தேவைகளை உள்ளடக்கிய சஞ்சிகைகள் வெளிவரவில்லை. இந்தியாவில் வெளிவரும் அவள், விகடன் அமோக விற்பனையாகிறது. இலங்கையில் பிரதேச ரீதியாக பெண்கள் சஞ்சிகைகள் வெளிவருகின்றன.

ஈரானிய பத்திரிகையாளர் ஒருவர் பெண்கள் சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். பெண் நிலைவாதி தனக்கான சுதந்திரத்தை முன்னிலைப்படுத்துவதற்காக இல்லை. அவர்கள் தனக்கான நிலையில் உள்ளதை வெளிப்படுத்த முனைகிறார்கள் என தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

1928ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஸ்திரிகள் பக்கம், பெண்கள் பக்கம் என வெளிவந்தன. ஏன் இப்போது அவ்வாறான பக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை என கேள்வி எழுப்பினார். தற்போதைய சஞ்சிகைகளில் ஆடை, அழகு, சமையல் போன்றவையை வெளிவருகின்றன. முதலாளித்துவ அடிப்படையிலேயே விற்பனை நடைபெறுகிறது. அதாவது புத்தக விற்பனைக்காக பெண்களின் படங்களை அட்டைகளில் பயன்படுத்துகிறார்கள். இந்த நடைமுறை சரியா?

இணையத்தில் பெண்களின் எழுத்துக்களை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது.

பெண்களின் சஞ்சிகைகள்

நிவேதினி – கொழும்பு – 1994
பெண் - மட்டக்களப்பு – 1995
பெண்குரல் - கொழும்பு – 1980
நங்கை – யாழ் - 1990
சொல் - கொழும்பு
ப+ங்காவனம் - கொழும்பு

இவ்வாறான சஞ்சிகைகள் பெண்களின் எழுத்துக்கு களம் அமைத்தன. பெண்ணியம் தொடர்பான பிரச்சினைகளை சமூகத்திற்கு சொல்லவே சஞ்சிகைகள் வெளிவருகின்றன. ஆனால் அவை எந்தளவுக்கு வெற்றியீட்டியுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.

பெண்கள் தங்களுடைய எழுத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நிச்சயம் ஒரு சஞ்சிகை வேண்டும். காரணம் பொது ஊடகங்கள் பெண்கள் எழுத்தைப் புறக்கணிக்குமாக இருப்பின் தங்களை நிலை நிறுத்த பெண்கள் சஞ்சிகைகள் கட்டாய தேவையாகும் என கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

Followers

About this blog

Labels