கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறையில் பார்த்தால் எல்லாமே தலைகீழ்தான்.

தேவையில்லாத கதை ஏன் முதலில் பிரச்சினையின் வேரைத்தேடுவோம்.முதலில் காதல் திருமணத்தைப்பற்றி கதைப்பதற்கு முன் பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணம் பற்றிப் பார்போம். இந்துசமய முறைப்படி திருமணம் செய்வதென்றால் முதலில் ஜாதகத்தைத்தான் முன்வைப்பார்கள்.அதில் காணப்படும் அனைத்துப் பொருத்தங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பார்ப்பார்கள். சின்னப் பிழை இருந்தாலோ அல்லது பொருத்தம் 75வீதத்துக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலோ உடனே அந்த சம்மந்தத்தை மறுத்துவிடுவார்கள். ஏன் என்று காரணம் கேட்டால் அது பிறகு குடும்பத்தில பிரச்சினையை கொண்டு வரும் அப்படி இப்படி என்றெல்லாம் பல காரணங்களைப் போட்டு சில நல்ல விடயங்களை இழந்து விடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் ஜாதகங்கள் எதையும் தீர்மானித்ததாக தெரியவில்லை அவர்களுடைய நடத்தைகள் தான் தீர்மானிப்பதாக தெரிகின்றது.சிங்களவர்களும் ஜதகத்தை முன்னிலைப்படுத்துவது உண்டு. கிறிஸ்தவர்களும் முஸ்ஸிம்களும் ஜதகத்தை விட்டு குடும்ப பின்னணியையும் பழக்க வழக்கங்களையும் தான் பார்ப்பது வழமை.(பொது நடைமுறை) இந்த அடிப்படையில் தான் திருமணங்கள் நடக்கின்றன.

பிரச்சினை என்று வரும் போது அது எல்லோருக்கும் பொதுவாகவே அமைகின்றது. வீட்டுக்கு வீடு வாசல் படி போல பிரச்சினை ஒவ்வொரு வீட்டிலும் வௌ;வேறு வடிவத்தில் வேர் கொள்கிறது. பிரச்சினைக்கான அடிப்படை மூலத்தைக் கண்டறிய வேண்டும். இங்கு பிரச்சினையோ முறண்கருத்தோ ஜாதகத்தில் இருந்து வரவில்லை. மனங்களில் இருந்து தான் எழுகிறது. பெரியோர்கள் ஆரம்பத்தில் பொருளையும் வடிவையும் தான் பார்த்தார்கள். ஒருவரும் உண்மையான மனத்தையும் குணத்தையும் தேடிப்பார்ப்பதில்லை. (அப்படித் தேடத்தொடங்கினால் போச்சு யாருமே வாழ்கையில கல்யாணத்தை நினைச்சே பார்க்கேலாது.) ஒரு வகையில் இது 100 வீதம் சாத்தியம் ஆகாது. ஆனால் குறைந்தது அரைவாசியாவது தேடி அறிய முடியும். அவசர உலக்திலே வாழும் எங்களுக்கு கருத்துக் கணிப்பெடுக்க நேரமில்லை. அதனால் தானோ தெரியவில்லை எல்லாத்தையும் அவசர அவசரமாகச் செய்து பாதி வயதைக் கடக்க முதல் வாழ்கையைத் தெருவிலே தொலைத்து விட்டு ஏங்குகிறோமோ தெரியவில்லை.

குடும்பம் என்றால் பிரச்சினை இருப்பது வழமை. இல்லாவிட்டால் அது குடும்பமில்லை. இங்கு பிரச்சினையை ஊதிப் பெருப்பிப்பது தான் இன்னொரு பிரச்சினை. இப்போது அதுக்குத்தான் தீர்வு வேண்டும். அடுத்த பிரச்சினை சொந்தப் புத்தியில் குடும்பம் நடத்தாமல் மாமா ,மாமி, மச்சாள், அக்கா என்று கூட இருப்பவர்களின் முதுகில் தங்கள் குடும்பத்தைத் தூக்கி வைப்பது. அடுத்தது விட்டுக் கொடுக்காத மனப்பான்மை. அது எதையும் ஆட்டிப் படைக்க வல்லது. இறுதி விடயம் சந்தேகம். இது ஒரு துளி நஞ்சு போன்றது. ஒரு குடம் பாலை அப்படியே முழுங்கிவிடும்.

இவற்றை அகற்றுவதற்று முதலில் இருவரும் மனம் விட்டு பேச வேண்டும். அடுத்தது தனது வருமாத்துக்கு ஏற்றவாறு குடும்ப வண்டியை ஓட்டப் பழக வேண்டும். பிறர் ஆலோசனையைக் கேட்க வேண்டுமே ஒழிய அதன் படி நடக்க முற்படக் கூடாது. மிக முக்கிமான விடயம் எல்லாப்பிரச்சினையையும் தீர்க்க நல்ல மருந்து ஆகக்குறைந்தது இரவு வேளைச் சாப்பாட்டையாவது எல்லோரும் கூடி ஒரே மேசையில் உண்ண வேண்டும். இப்படி அண்மித்து முகங்களை சந்திக்கும் போதே பாதி பிரச்சினையோ மனப்பாரமோ குறைந்து விடுகிறது.

அடுத்து வெளிநாட்டு திருமணங்களில் சந்திக்கின்றேன்……என்ன நடக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாத நிலை தொடர்கிறது அது தான் ஆச்சரியமாகவும் இருக்கிறது. காரணம் தெரியாத நிலையில் தத்தளிப்பதால் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மைகள் ஆகுறோம். ஐம்புலன்கள் இருந்தும் காந்தி சொன்ன குரங்குகளாய் உருவெடுத்துள்ளோம்.யாழ் நகரின் மையத்தில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பங்காவான பழைய பூங்காவான ( old park ) திட்டமிடப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்றது.தற்போது அங்கு நூற்றாண்;டு வயதைக் கொண்டாடிய பெருமளவிலான மரங்கள் வெட்டீ அகற்றப்பட் டுவிட்டன.எஞ்சியவற்றையும் சூறையாட முனைப்புக்காட்டப்ப டுவதாக ஊகிக்கப்படுகிறது.ஆங்கிலேயர்களது ஆட்சியின் கீழ் யாழ்குடா நாடு இருந்த காலப்பகுதியில் சுண்டுக்குழியில் உருவாக்கப்பட்டதே பழைய பூங்கா காவாகும். யாழ் மாவட்டத்தில் முதலாவது அரச அதிபரான பேர்சிவல் அட்லன் டையிட் பழைய பூங்காகாவின் இயற்கையை தொடர்ந்து பேணும் வகையில் அரச அதிபருக்கான விடுதி தவிர வேறு எந்தவொரு நிரந்தர கட்டடங்களையும் அங்கு அமைக்கத் தடை விதித்திருந்தார்.

1829 ஆம் ஆண்டில் ஒக்டோபர் முதலாம் திகதி ஆங்கிலேயரான இவர் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.பழைய பூங்காவின் இயற்கையினை இறுதிவரை நேசித்து வந்திருந்த அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதனை திறந்தும் விட்டிருந்தார்.ஆட்சி மாற்றங்கள் காரணமாக பழைய பூங்காவின் நிலை சர்சைக்குள்ளாகியது. அது கேந்திர நிலையமாக இருந்ததால் ஆட்சியாளர்கள் தங்கள் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தனர்.ஏன் இப்பவும் அந்த நிலை தான் தொடர்கிறது. எனினும் 1996 ஆம் ஆண்டு யாழ்குடா படையினர் கைப்பற்றியதிலிருந்து (சாட்டு போக்கு எங்களுக்கு கைவந்தது தானே?) கண்ணிவெடியைக் காரணம் காட்டி பொதுமக்கள் பாவனைக்குத் தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் முன்னைய அரசாங்க அதிபரினால் ஆடம்பர விடுதி ஒன்று கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கிருந்த விடுதி குண்டுத்தாக்குதலில் சேதமைந்து விட்டது என்ற காரணத்தை முன்வைத்துள்ளார்கள்.

அடுத்து தற்போது வடமாகாண ஆளுநருக்காக சுமார் 100 மில்லியன் செலவில் மாளிகை ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த நிர்மாணப் பணிகளுக்காக நூறு வயதைத் தாண்டிய மரங்கள் எல்லாத்தையும் வெட்டிச்சரித்து விட்டார்கள். இது அரசாங்க சொத்து என்ற வகையினாலும் , கண்டி வீதியோரமாக அமைந்துள்ளதாலும் அனைவரது கண்களிலும் படும்படியாக இருக்கிறதால் தானோ அதற்கு இந்த நிலை ஏற்பட்டது.

சர்ச்சையில் சங்கிலியன்………….


1620 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாண இராஐயத்தின் மீது படையெடுத்தனர். அந்தப் படையெடுப்பை அன்று யாழ்ப்பாண இராஐயத்தை ஆண்டு வந்த சங்கிலிய மன்னன் எதிர் கொண்டான் என்பது வரலாறு.
கி.பி 1519 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராஐயத்தின் அரசனாக முடி சூட்டிக்கொண்டான் சங்கிலியன். என்ன தான் சங்கிலியன் கொடுங்கோல் ஆட்சி செய்தாலும் போர்த்துக்கேயரை கடைசி வரை எதிர்த்து நின்றவன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே போர்த்துக்கேயருக்கு எதிர்ப்புத் தெரிவித்தான் அவர்களோடு தொடர்புடையவர்களைத் தண்டித்தான்.உண்மையா கவே சங்கிலியன் ஆளுமை மிக்கவன் அத்தோடு நாட்டுப்பற்றுக் கொண்ட வன்.போர்த்துக்கேயர் 1505 ஆம்ஆண்டே கோட்டை இராசதானிக்கு வந்திருந்த போதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அதற்கான முழுக் காரணமும் சங்கிலியன் தானாம்.அந்த வகையில் அவன் பாராட்டுக்குரியவன் தான் உண்மையிலே………

யாழ் முத்திரைச் சந்தியில் அமைந்திருக்கும் சிலையானது முதலாவது சங்கிலியனுடையது. ஆனால் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் இவன் அல்ல இவருக்குப் பின்னால் இன்னொரு சங்கிலியன் வருகிறான் அவன் சங்கிலி குமாரன் என்று அறியப்படுகிறார். 1972 ஆம் ஆண்டே முதன் முதலாக சங்கிலியன் சிலை நல்ல}ரில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல முறை சங்கிலியன் சிலை சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இந்திய சிற்பியினால் புதிதாக வடிவமைக்கப்பட்ட சங்கிலியன் என்ற சிலை பொன்னிறத்தில் திறந்து வைக்கப்பட்டது.

  • முன்னர் இருந்த சிலை எங்கே?
  • புதிய சிலையை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
  • இந்தச் சிலை எத்தனையாம் சங்கிலியன்?(உருவ அமைப்பு)
  • பழைய சிலையயைப் பாதுகாக்க நூதனசாலையில் வைக்கப்படாமைக்கான காரணம் என்ன?
மீண்டும் சங்கிலியன் சர்ச்சையில் சிக்கினால் தமிழ் மக்கள் சங்கிலியனுக்காக போராடுவார்களா?இல்லை வாழ்நாள் மௌனிகளாக இருந்து விடுவார்களா? எனது ஆதங்கமும் அது தான்!!

நல்லூர் மந்திரிமனையின் நிலை……?


நல்லூரின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் கம்பீரமான முகப்புத் தோற்றத்துடன் அமைந்திருக்கும் இந்த வரலாற்றுச் சின்னம் “மந்திரி மனை என்றழைக்கப்படுகிறது. பருத்தித்துறை வீதியில் சட்ட நாதர் கோயிலுக்குச் சற்றுத் தெற்காக அமையப்பெற்றுள்ளது.இதன் கட்டட அமைப்பும் மரத்தினாலான சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலைமரபை பிரதிபலிக்கின்றன.இதன் வெளித் தோற்ற அமைப்பு ஒல்லாந்தரின் கலை அம்சத்தைக் குறிப்பிடுகின்றதாம். இந்த மனையில் பெரிய கிணறு உள்ளது. அந்தக் கிணற்றின் ஒரு பகுதி வெளியேயும் மற்றைய பகுதி மனைக்கு உள்ளேயும் கட்டப்பட்டுள்ளதாம். கருங்கல்லினால் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கிணற்றுக்கு இன்னொரு முக்கியத்துவம் இருக்கிறது. இக்கிணற்றுக்கும் யாழ்ப்பாண மன்னர்கால யமுனா ஏரிக்கும் இடையே சுரங்கப்பாதையி ருந்ததாகவும் சில காலங்களில் இக்கிணற்றறில் நீர்பெருக்கு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது இவை மூடுபட்டும் இடிந்த நிலையிலும் தோற்றமளிக்கிறது. பொக்கிஷமாக பேணப்படவேண்டியவை கவனிப்பாரற்று அழிந்தே போகிறது. பாதுகாப்பதற்கு பல வழிகள் இருந்தும் யாரும் முன்வருவதாக இல்லை. உலகில் உள்ள புராதனங்களைப் பாதுகாப்பதற்காகவே UNESCO அமைப்பு முன்வருகிறது. ஆனால் இது தமிழரின் பண்பாட்டு இடம் தானே!அது தானோ இந்த நிலை?

இனிவரும் எங்கள் பரம்பரைக்கு வரலாற்றைச் சொல்ல என்னத்தை ஊதாரணமாக காட்டப்போகிறோமோ தெரியவில்லை. எந்த ஒரு கலைஞராலும் இப்படி ஒரு கட்டடத்தை கட்ட முடியுமா?தெரியவில்லை.படிப்படியாக தன்னிலையை இழக்கிறது யாழ்ப்பாணம்.


சங்கிலியன் தோப்பு கல்தோரண வாசல் கரைகிறது……….

நீண்ட காலமாக கவனிப்பாரற்று கிடக்கிறது இக்கட்டடத்தொகுதி. முத்திரைச்சந்தைக்கு வடக்கே கொஞ்சத் தூரத்தில் இத்தோரண வாசல் அமைந்துள்ளது. இதனைச் சிலர் சங்கிலிய மன்னனின் அரச மாளிகை வாசல் எனவும் வேறு சிலர் யாழ்ப்பாண மக்களின் அடிமைவாழ்வுச் சின்னம் என்று கூறுகின்றனர். இக்கட்டடமும் அதன் கலை அம்சமும் ஒல்லாந்தர் காலத்துக்குரியவை. இதன் நிலையும் அதோ கதி தான்.


யாரும் தேடா யமுனா ஏரி…..

யமுனா ஏரி நல்லூர் இராசதானி காலத்து மிகமுக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். சிங்கை பரராசசேகரன் என்பவன் தனது சமய ஆர்வத்தினால் தானும் குடிமக்களும் நன்மை பெற வேண்;டுமென்று எண்ணி 1478 ஆம் ஆண்டளவில் யமுனா ஆற்றில் இருந்து காவடிகளில் புனித நீரைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததால் இது இப் பெயரைப் பெற்றுள்ளது. “ப "னா வடிவில் அமைக்கப்பட்டுள்ள யமுனா ஏரி தமிழரின் தொழில்நுட்ப திறனை எடுத்துக்காட்டுகிறது.

இப்படியான பல கட்டடங்கள் யாழ் இராசதானியின் வரலாற்றைப்பறை சாற்றுகின்ற வேளை அவை வெகுவிரைவில் காணாமல்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். வரலாறுகளைச் சொல்லத்தான் தடயங்களைப் பாதுகாக்கவேண்டும். இங்கு நிலை தலை கீழ் ஆமை தான் வந்த வழியை அழிப்பது போல நாங்கள் மாறிவிட்டோமா?சரித்திரம் படைத்த எங்கள் செயல் புகழ் இன்று சரியத்தொடங்கி விட்டன. எங்கள் பண்பாடு பழைமையானது பாதுகாப்பது எங்கள் கடமை.


அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் திகதியன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாக்கப்பட்டுள்ளது.


பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி 1909இல் அமெரிக்க சோஷலிச கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர்.மார்ச் 25,1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140ற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.இந் நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது.தொடர்ந்து அனைத்துலக மகளிர் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.


1913-1914 களில் முதல் உலகப்போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினர்.இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

ஐ.நாவின் பேரறிவிப்பின் பின் வந்த நாட்களில் ஐ.நா.பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

இதன் அடிப்படையில் எத்தனையோ பெண்கள் ஏதோ ஒரு வகையில் சாதனைப் பெண்களாக வர்ணிக்கப்படுகிறார்கள்.உதாரணமாக அன்னை திரேசா, இளவரசி டயானா,முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ,விண்வெளி வீராங்களை கல்பனாசாவுலா ,முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா ,அருந்ததி றோய் போன்ற இன்னும் பல பேரை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இன்றும் எமது நாட்டுப் பெண்கள் வேலை தேடிச் சென்று ஆணியோடு நாட்டுக்குத் திரும்புகிறார்கள். தேயிலைத் தோட்டத்துப் பெண்கள்; ஊர் குடிக்க தேயிலை பறிக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையை கங்காணி , பெரிய துரைமார் குடிக்கிறார்கள்.தினம் ஒரு கற்பழிப்பு , மனைவி கணவனால் தூக்கிட்டுக் கொலை ,பெற்ற மகளையே மாறுபட்டு நோக்கும் தந்தை இவ்வாறு பல வழிகளில் துவண்டு போகிறது எம் இனம். மாநாடுகளில் மேசை போட்டு கதைத்தால் மாத்திரம் போதாது.அதைத் துளியேனும் நிறைவேற்ற முற்படவேண்டும்.


பூபோல பெண்ணாம்.. பூமிக்கு உவமை பெண்ணாம்….போலி உவமைகள் வேண்டாம்.

நீலிக் கண்ணீரும் வேண்டாம். பெண்ணைப் பெண்ணாக வாழ அனுமதியுங்கள்.

என் சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!

கடந்த ஜனவரி 6, 7, 8, 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்க மண்டபம், வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிஸன் (இறுதி நாள்) ஆகியவற்றில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது அனைவரும் அறிந்த விடயம் ஒன்று தான். ஒவ்வொரு நாளும் பல்வேறு அரங்குகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. அதில் 7ஆம் திகதியன்று வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் மங்கள நாயகியம்மாள் அரங்கில் பெண் எழுத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

முதலாவதாக பெண் எழுத்து எனப் பார்க்கும் போது அது சிந்தனையின் அடிப்படையிலேயே உருவானது என உற்று நோக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதாவது ஆண், பெண் என்ற பால் அடிப்படையிலேயே உருவானது எனலாம். பெண் எழுத்துக்கு தனி பண்பு
உண்டு. பெண் எழுத்தை ஏன் தேடுகிறோம் என்றால் பெண்ணின் மொழி வித்தியாசம்.

அடுத்ததாக ஈழத்தில் பெண்களின் இலக்கியம் என தனித்து இனம்காணக்கூடிய இலக்கியம் உள்ளது. நாட்டார் இலக்கியம், பெண்களின் கதைகள் தொகுப்பு, எழுத்து இலக்கியம், வாய்மொழி இலக்கியம் என பலவகை உள்ளது. பெண் எழுத்து, பெண் எழுத்தின் பண்பு, ஈழத்தில் பெண்களின் இலக்கியம் போன்ற இம் மூன்றின் அடிப்படையிலேயே பெண் எழுத்து அமைகிறது.

அடுத்ததாக பெண்களின் சஞ்சிகைகள் தலைப்பில் தேவகௌரி சுரேந்திரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெண்களின் எழுத்தை அனைவருக்குமாக கொண்டு வரும் சஞ்சிகையின் தேவைப்பாட்டை வலியுறுத்தினார். மங்கள நாயகியம்மாள் - நாம்யார்க்கும் குடியல்லோம் என்ற சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். அந்த சஞ்சிகையானது சீதனக் கொடுமை, தீண்டாமை, போன்றனவுடன் ஸ்திரி பக்கம் பெண்கள் பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் தேவைகளை உள்ளடக்கிய சஞ்சிகைகள் வெளிவரவில்லை. இந்தியாவில் வெளிவரும் அவள், விகடன் அமோக விற்பனையாகிறது. இலங்கையில் பிரதேச ரீதியாக பெண்கள் சஞ்சிகைகள் வெளிவருகின்றன.

ஈரானிய பத்திரிகையாளர் ஒருவர் பெண்கள் சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். பெண் நிலைவாதி தனக்கான சுதந்திரத்தை முன்னிலைப்படுத்துவதற்காக இல்லை. அவர்கள் தனக்கான நிலையில் உள்ளதை வெளிப்படுத்த முனைகிறார்கள் என தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

1928ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஸ்திரிகள் பக்கம், பெண்கள் பக்கம் என வெளிவந்தன. ஏன் இப்போது அவ்வாறான பக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை என கேள்வி எழுப்பினார். தற்போதைய சஞ்சிகைகளில் ஆடை, அழகு, சமையல் போன்றவையை வெளிவருகின்றன. முதலாளித்துவ அடிப்படையிலேயே விற்பனை நடைபெறுகிறது. அதாவது புத்தக விற்பனைக்காக பெண்களின் படங்களை அட்டைகளில் பயன்படுத்துகிறார்கள். இந்த நடைமுறை சரியா?

இணையத்தில் பெண்களின் எழுத்துக்களை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது.

பெண்களின் சஞ்சிகைகள்

நிவேதினி – கொழும்பு – 1994
பெண் - மட்டக்களப்பு – 1995
பெண்குரல் - கொழும்பு – 1980
நங்கை – யாழ் - 1990
சொல் - கொழும்பு
ப+ங்காவனம் - கொழும்பு

இவ்வாறான சஞ்சிகைகள் பெண்களின் எழுத்துக்கு களம் அமைத்தன. பெண்ணியம் தொடர்பான பிரச்சினைகளை சமூகத்திற்கு சொல்லவே சஞ்சிகைகள் வெளிவருகின்றன. ஆனால் அவை எந்தளவுக்கு வெற்றியீட்டியுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.

பெண்கள் தங்களுடைய எழுத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நிச்சயம் ஒரு சஞ்சிகை வேண்டும். காரணம் பொது ஊடகங்கள் பெண்கள் எழுத்தைப் புறக்கணிக்குமாக இருப்பின் தங்களை நிலை நிறுத்த பெண்கள் சஞ்சிகைகள் கட்டாய தேவையாகும் என கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நாட்டிலுள்ள சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியளவில் உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்து நிறைவேற்றவுள்ளது. மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் வகையில் இந்தத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்.

ஆனால் புதிய முறைப்படி தேர்தல் நடத்தப்போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையையே தேர்தல் திருத்தச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருந்தாலும் புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கு காலம் தேவை. வட்டார எல்லைகளை மீள் நிர்மாணம் செய்யவேண்டும் அத்துடன் அது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளது சில பிரதேச சபைகள். இவற்றைத் தீர்த்து தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆவது வேண்டும்.

மாறாக அரசாங்கமோ எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் அதிகரிப்பதற்கு தயாராக இல்லை. தேர்தலை எப்படியாவது ஏப்ரல் மாத இறுதியிலாவது முடித்துவிடவேண்டும் என அரசு ஒற்றைக்காலில் நிற்கிறது. மார்ச் மாதமளவில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் ஆனது அரச தரப்புக்கும் சரி ஐக்கிய Nதிய கட்சிக்கும் சரி ஒரு பலப்பரீட்சையாகவே அமையப்போகிறது. ஜனாதிபதியைப் பொறுத்தளவில் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்பதே நோக்கு. அதைவிட முக்கிய தேவைப்பாடாகவும் உள்ளது ஏனென்றால் அண்மைய நாட்களில் தெற்கில் உள்ள உள்ளுராட்சிச் சபைகளின் வரவுசெலவுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது. இது தான் முக்கிய பிரச்சினை. இதுவரை ஐந்து உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்ற ஆளும்கட்சி மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. இதுவே ஆளும்கட்சிக்குரிய முதல் வேட்டாக அமைகிறது.

அடுத்தது விலைவாசி உயர்வுக்கு அளவுகணக்கே இல்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுவோம் என்று கூறிக்கொண்டு சரித்திரத்திலே நடந்திராதவாறு தேங்காயை இறக்குமதி செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். முட்டை கூட இறக்குமதி செய்யும் நிலை வந்துவிட்டது. மறுபக்கத்தில் வெங்காயத் தட்டுப்பாடு தலையைப் பிய்க்கிறது. இந்த நிலையில் அரசு திணறிக்கொண்டிருக்கிறது இது எதிர்த்தரப்புக்கு சாதகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் பொதுமக்கள் தான் நசிபடுகிறார்கள்.

இந்தப் போக்கு தொடருமானால் மக்கள் மனதில் அரசுக்கு எதிரான கருத்து உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான தாக்கத்தை தேர்தலில் பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளுரிலேயே இந்த நெருக்கடிகளை அரசு சந்திக்கிறதென்றால் சர்வதேசளவிலும் இதற்கு சமமான நெருக்கடிகள் உள்ளன.

பிரித்தானியாவுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு உரையாற்ற முடியாத நிலையில் நாடு திரும்பியிருந்தார். இது மிகப் பெரிய இராஜதந்திரத் தோல்வியாகும். அத்துடன் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன. எத்தனையோ பிரச்சினைகள் மத்தியில் இதை எப்படி சமாளிக்கப்போகிறதோ தெரியவில்லை. சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு எதையும் செய்யமுடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தன் பிடியில் இருந்து விலகுவதாக இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதே ஐ.நா குழுவினது இலக்கு என்கிறது அரசு. ஆனால் அந்தச் சந்திப்பு உள்நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா என்பது அறிவிக்கப்படவில்லை. உள்நாட்டில் சந்திப்பு இடம்பெற்றால் சரத்பொன்சேகாவை அவர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுகோளாகும். இது ஆபத்து என்பது அரசுக்கு தெரியும். அதேவேளை ஐ.நா நிபுணர் குழு இலங்கைவர அனுமதிப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதோ ஆபத்தானது என்றும் அதை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர்கள் இருவர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆராய்ந்து பார்க்கப் போனால் அரசு எடுத்த முடிவை அரசுக்குள் இருப்போர் எதிர்ப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. எவ்வாறாயினும் பெரிய அரசியல் ஆதாயத்தைப் பெற முடியாது. இதுவும் ஆளும்கட்சிக்கு ஒரு தலையிடியாக அமையலாம். ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி இப்போது புதிய உற்சாகத்தில் உள்ளது. தங்களுக்குள் நிலவிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பதைக் காட்ட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் எந்தளவு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்.

இவ்வாறான போக்கு அரசை ஒரு விதத்தில் மிரளவைக்கிறது. தொடர் ஆட்சி என்று கண்ட கனவு போட்ட கணக்கெல்லாம் மறுஆய்வு செய்யும் நிலைக்கு வந்து விட்டது போல். இதற்கு வழி கோலுவது கடந்த கால நிகழ்வுகள் தான். எவ்வளவு தான் வெற்றி பெற்றாலும் மக்களிடத்தில் ஏற்படக்கூடிய வெறுப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. அது எப்போது சுனாமி போல் மேலெழும் என்பது யாருக்கும் தெரியாது. உள்ளுராட்சித் தேர்தலானது இரு தரப்புக்கும் இடையில் பெரிய சவாலாகவுள்ளது.

மீண்டும் வெற்றியை தன்பக்கம் காட்டுவது அரசின் நிலை. எப்படியாவது தலை நிமிரவேண்டும் என்பது ஐ.தே.கவின் நிலை. விரைவாகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசாங்கம் முனைவதில் இருந்து தெரிகிறது வெற்றி மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கை. துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்பது பழமொழி. கணிப்பு சரியா? பிழையா? என்பதை தேர்தல் வெளிப்படுத்தும் அத்துடன் தேர்தல் முடிவு அரசின் செல்வாக்குப் போக்கையும் தீர்மானிக்கும்.

எத்தனை தடவைகள் கூக்குரல்

ஒழிப்போம்!! தடுப்போம்!! விழிப்போம்!!

நடந்திச்சா?ஓரளாவாவது முடிஞ்சுதா?

இல்லையே!!காரணம் தெரியல….

அதை முறியடிக்கவே முடியாதா?

அப்படியென்னா அடுத்த சந்ததியும்

அனுபவிக்க வேணுமா?என்ன அநியாயம்

ஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்??

ஒவ்வொரு முயற்சியும் தோல்வி தானே!

ஆட்டிப்படைக்கும் வஞ்ஞானத்தாலும் முடியாதா??

பெரிய பெரிய அமைப்புக்கள் என்னத்துக்கு காசா கொட்டுகினம்??

2009ல் பாதிக்கப்பட்டோர் அரை மில்லியன் அமெரிக்காவில

இப்ப இலங்கையிலயுமாம் அதில யாழ்ப்பாணத்திலயும் ஒட்டிக்கிச்சு

வதந்தியை விட வேகமாகப் பரவுது

காலம் மாறிப்போச்சோ கலாச்சாரம் மாறிப்போச்சோ தெரியல

என்ன தான் இருந்தாலும் எய்ட்ஸ் நோயாளியை ஒதுக்காமல்

அவர்களுக்காகப் பாடுபடுங்கள்

எய்ட்ஸ் தினத்தன்று ஏதாவது அவர்களுக்கு உதவுங்கள்.

வானம் தொடும் காலம் வரை நிம்மதி
என்றிருந்தோம்
எத்தனை கனவுகளை கருவறையில் அல்ல
இதயவறையில் சுமந்தோம்

நாங்களும் ஈசலும் உறவுகள் - காரணம்
இறக்க இறக்க பிறப்போம்
என்றும் தளைப்போம் என்ற பெருமிதம்

எங்கள் வீட்டில் விளைந்து நின்ற மரத்தில்
ஏராளம் காய்களடா..
அப்பவும் முத்தத்தில் இருந்த பாட்டி சொன்னாள்
நாவூறுபட்டு உதிரப் போகுது எண்டு..

கனவில கூட கடவுள் காட்டியதில்லையே!
இரவை விழுங்கிவிட்டு செங்கதிரவன் வரமுந்தி
அயல் வீட்டான் எங்கள் வீட்டு மரத்திலேயே
எறிந்தான் எதையோ

பிஞ்சும்..
பூவும்..
காயும்..
மரமும்..
வேரையும் விடவில்லை... - எல்லாம்

சிவந்த மண்ணில் சீவனற்றுக் கிடக்கிறது.
மூதாதையர் செய்த பாவமோ?
விழுந்தவையை அள்ளிப் பொறுக்கினோம்!
நாதியற்ற நாங்கள்!

கொடியோடு மரம் சாய்ந்ததை பாட்டி
விடிய முந்தியே நினைவூட்டினாள்
பாட்டி கிடந்து புலம்புறாள்
புது மரம் வைத்து தண்ணி கொஞ்சம்
விடு பிள்ளை என்று..
மறுப்பார் யாரும் இல்லை
ஏற்பாரும் யாரும் இல்லை.

Followers

About this blog

Labels