நாடாளுமன்றத்துக்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் கடந்த மாதம் 26ம் திகதியாகும். அன்றிலிருந்து இன்று வரை (24.03.2010) 147 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


87 பாரிய சம்பவங்களில் 22 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதே வேளை பொதுச்சொத்து துஷ்பிரயோகம் மற்றும் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தமது கவனத்தை திருப்பியுள்ளதாக வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பொதுத் தேர்தலில் எத்தனை வன்முறைகள் நடைபெறப் போகின்றனவோ? எண்ணுக்கணக்குக்கு மிஞ்சிவிடும் போல கிடக்குது. ஜனவரி மாதக் கடைசியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னர் எப்போதும் இல்லாதளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் உயர்ந்திருந்தன. தேர்தல் நெருங்கி இறுதியன்று அண்மித்தபோது 800 இற்கு மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.


வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பெப்ரவரி 26ம் திகதியிலிருந்து மார்ச் 8ம் திகதி வரை 75 (65சதவீதம்) பாரிய வன்முறைச் சம்பவங்கள் உள்ளடங்கலாக 115 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 75இல் 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பானதாகும்.

  • 06 காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 03 பாரிய காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 22 தாக்குதல் சம்பவங்கள்
  • 14 கொலை அச்சுறுத்தல்கள்
  • 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல்
  • 05 தீவைப்புச் சம்பவங்கள்.


  • பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் குருநாகல் மாவட்டத்தில் 6 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
  • தென் மாகாணம்- 05 உட்கட்சி மோதல் சம்பவம்.
  • சப்ரகமுவ மாகாணம்- 12 பாரிய சம்பவங்களுள் 05 துப்பாக்கி பிரயோகம்.
  • கிழக்கு மாகாணம்- 03 சம்பவங்கள்.
  • வடமத்திய மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • மேல் மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • வட மேல் மாகாணம்- 01 சம்பவம்.
  • மத்திய மாகாணம்- 01 சம்பவம்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அவதானிக்கக்கூடிய இன்னுமொரு விடயம் உட்கட்சி மோதல்களுக்கு வழிவகுக்கும் விருப்பு வாக்கிற்கான போட்டியாகும். ஐ.ம.சு முன்னணிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள 91 முறைப்பாடுகளுள் 23 முறைப்பாடுகள் அக்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலில் தமது பக்கம் தாம் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்றுவிட வேண்டும். தாம் ஆசனத்தைப் பெறவேண்டும் என்ற அரசியல் வெறியும் அதிகார மோகமுமே தேர்தல் கால வன்முறைகளுக்கு வித்தாகவும் உரமாகவும் அமைகின்றது.

வாக்குரிமை என்பது ஒவ்வொரு வாக்காளனும் தனது தெரிவுக்கும் விருப்பத்துக்கும் ஏற்றாற் போல அதனைப் பயன்படுத்தல் என்ற சுதந்திரச் செய்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. அந்தக் கோட்பாட்டை தகர்த்து எறியும் விதத்தில் அரசியல்வாதிகள் தமது அடாவடித்தனத்தைக் கட்டவிழ்த்து தாமே வெற்றிபெற வேண்டும் என்று செயற்படுவது இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாகச் சாதாரணமாகி விட்டது.

தேர்தல் என்பது வன்செயல்களோடு சேர்ந்தது என்ற நிலை இங்கு வழமையாகிவிட்டது.

அனேகமாக தேர்தல் கால மோதல்களும் வன்முறைகளும் போட்டியிடும் எதிரணி கட்சிகளுக்கு இடையே நடைபெறுவது தான் வழக்கமாக இதுவரை இருந்து வந்தது. இம்முறை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வது தான் கவலைக்குரிய விடயமாகும்.

மக்களாட்சி என்ற ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிந்து துவம்சம் செய்துவிடவல்ல தேர்தல் வன்செயல்களை தடுப்பதும் அவற்றில் ஈடுபடுவோரை பாகுபாடின்றி தண்டிப்பதும் பக்கசார்பின்றி நடவடிக்கைகளை எடுப்பதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பெரும் பொறுப்பு பொலீஸாரையும் நீதிமன்றங்களையும் சார்ந்தவை.

நஞ்சு மரம் முளையிலேயே கிள்ளி எறியத்தவறினால் மக்கள் ஆட்சி மல்லாக்காப் படுக்க நேரிடும். வன்முறைகள் தெளிவுபடுத்துவது ஜனநாயகம் கேலிக்குரிய பொருளாக மாறிவிட்டது என்பதைத்தான்.
நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் இவற்றை வருங்காலத்திலாவது தடுக்க அக்கறை காட்டுவார்களா?

இல்லை இனி இது தேர்தல் கால கலாச்சாரமாகுமா???

எங்களில் எத்தனை பேர் தங்களின் வாழ்க்கை ‘நரகமாகிவிட்டது’, ‘சொர்க்கமாகிவிட்டது’ என்றெல்லாம் அலட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மறந்து தற்செயலாக ஏன் என்று கேட்டால் போதும் பக்கத்து வீட்டுக்காரன்ல இருந்து பின்னால திரிஞ்சு காதலித்த காதலி வரை காரணம் சொல்ல கூப்பிடுவினம்.

இவற்றை எல்லாம் தீர்மானிக்கப்போவது நான்கெழுத்து மந்திரம் தான். அது வேறொன்றும் இல்லை……

புரிதல் ….

ஒரு சமூக கட்டமைப்பில் வாழத் தொடங்கிய பிறகு புரிதல் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது சாத்தியமற்றது.

ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலயும் பல விதமான உறவுகள் இருக்கின்றது. அந்த உறவுகளுக்கு நிகராக சிக்கல்களும் இருக்கத்தான் செய்யும். உங்கள் செயற்பாடுகள் அதிகமாகும் போது உறவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். சிக்கல்களும் அதிகரிக்கத்தான் செய்யும்.

அந்த சிக்கல்களுக்குப் பயந்து நாம் உறவகளை வெட்டிவிட முடியாது. உறவுகள் அதிகரிக்க அதிகரிக்க புரிதலை அதிகரித்துக் கொண்டே போவதில்; தான் பிரச்சினையே இருக்கிறது.

நீங்கள் ரூமில் இருப்பவராக இருந்தால், கூட இருப்பவரைப் புரிந்து கொண்டால் போதும். அதே நேரம் பலரை நிர்வகிக்கும் நிலையில் இருந்தால் நீங்கள் அத்தனை பேரையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். உங்;களை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது தவறானது.

அப்போதுதான் சூழ்நிலைக்கேற்ற மாதிரி அவர்களை இயக்க முடியும். அனைவரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அது பகல் கனவு தான். அதற்காக எல்லோரையும் புரிந்து கொள்ள முடியாது.

உ-ம் நல்ல நண்பர்கள் போல பழகிக் கொண்டு பிறருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது.


இயலுமானவரை எவ்வளவு முயற்சிக்கிறீர்களோ அவ்வளவும் போதும். மனிதனால் குறிப்பிட்டளவு தான் ஊகிக்க முடியும் குறிப்பிட்ட எல்லைவரை தான் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும். புரிந்து கொள்ளும் போது தான் உறவுகள் நெருக்கமாகவும் வாய்ப்புள்ளது. அடுத்தவர் உங்களை புரிந்து கொள்ளவே மறுப்பதாக நினைக்கக் கூடாது. பிறர் உங்களை நன்றாக புரிந்து கொள்வதற்கான சூழைலை உருவாக்க வேண்டும். (விதண்டாவாதம் செய்பவர்கள் இந்த விதிமுறைக்குள் உள்ளடங்கமாட்டார்கள்).

துரதிஷ்டவசமாக மிக நெருக்கமான இருவர் மத்தியில் ஏற்படும் மோதலானது எதிரிகளுக்கிடையில் ஏற்படும் மோதல்களைவிட மோசமாகவே இருக்கும். இதற்குக் காரணம் இருவருடைய புரிதலும் அந்த நேரத்தில் (சற்று) வேறுபட்டிருக்கலாம். அவர்கள் சில வேளை எல்லைக் கோட்டினைக்கடந்தால் வெறிபிடித்தவர்கள் போல மாறிவிடுவார்கள்.


அடுத்தவரின் புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய குறைபாடுகளையும் திறமைகளையும் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறீர்கள்.

ஓவ்வொருவரிடம் ஒவ்வொரு குணாம்சங்கள் இருக்கும். இவை அனைத்தையும் உங்கள் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட்டால் உங்கள் விருப்பம் போல் உறவுகளை அமைத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய வாழ்வில் ஒவ்வொருவருடைய உறவும் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்பவர் நீங்காளாக இருக்க வேண்டுமானால் உங்கள் புரிதலுக்குள் அனைத்தையும் அனைவரையும் கொண்டு வாருங்கள். மனிதர்களின் பைத்தியகாரத்தனத்தையும் தாண்டி அவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.

உங்களைச்சுற்றி அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவ்வப் போது சில சமயம் சில நிமிடங்களுக்கு அவர்கள் பைத்தியகாரத்தனமாக நடந்து கொள்வார்கள்.

இதனைப்புரிந்து கொள்ளாவிட்டால் நீங்கள் அவர்களை இழக்கநேரிடும். புரிந்து கொண்டால் அவர்களைக் கையாளும் விதம் உங்களுக்குத் தெரிந்து விடும். வாழ்க்கை ஒரு போதும் நேரான கோடு அல்ல.


புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் இழந்தால் உங்கள் செயல் திறனையும் இழக்க நேரிடும். சுற்றியுள்ளவர்களை இயலுமான வரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். புரிதல் என்பது சாலச்சிறந்த மருந்து.

(மேற்கூறியது இவர்களுக்கு பொருத்தமாகாது - புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்களுக்கு, எடுத்தெறிந்து நடப்பவர்களுக்கு, நண்பனாகப் பழகிக்கொண்டு தீயவர்களுடன் சேர்ந்து துரோகமிழைக்க நினைப்பவர்களுக்கு, தாங்கள் சொன்னதே சரியென்று விடாப்பிடியாக இருப்பவர்களிடம்)

அகசியம் வரோ என்னை கிரிக்கட் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கிறார். அழைச்சவர் அப்பிடியே போகவேண்டியது தானே! அதென்ன எனக்கு கிரிக்கட்ல ‘’ கூட தெரியாதெண்டு இமேஜை டமேஜ் ஆக்கிட்டு போறார்.

நடந்த ஒரு சம்பவம் ஒன்றைச் சொல்லுறன் கேளுங்க. அதுக்குப் பிறகு எனக்கு கிரிக்கட் தெரியுமா தெரியாதா எண்டு நீங்க சொல்லுங்க…

(கடந்த வருடக்கதை)


நம்ம கொலிஜ்ல 2 ரி.வி வைச்சிருக்கிறாங்க. முக்கியமா அது நியூஸ் பார்க்கத்தான். ஆனால் எங்களுக்கு ரி.வி பார்க்க டைம் கிடைக்கிறதில்லை. கிடைச்ச நேரத்திலையும் ஆளாளுக்கு எதையாவது போட்டுப் பார்க்குங்கள். ஒருத்தன் அந்த சனல்ல விடு, இன்னொருத்தன் இந்த சனல்ல விடு எண்டு… ரிமேட் தேயாத குறையா சண்டை பிடிப்பம். ஒருத்தனும் ஒழுங்கா ஒண்டையும் பார்க்கேலாது. அதால ஒருத்தரும் அந்தப் பக்கம் வரமாட்டினம்.

ஒருநாள் நான் பாட்டுப்பார்த்துக் கொண்டிருந்தன், பெடியள் வந்து மட்ச் நடக்குது விடு எண்டாங்கள். அதுகளோடை சண்டைபிடிக்கேலாது எண்டிற்று மாத்திட்டு, நான் அதிலையே உட்கார்ந்திருந்தன். எழும்பிப் போனவுடன மாத்துவம் எண்டு. நான் ரி.விக்கு கிட்ட இருந்த படியால் ஒருத்தன் ‘ஸ்கோர்’ என்ன எண்டு கேட்டான். எனக்கு என்ன மட்ச் நடக்குது எண்டே தெரியல (தெரிஞ்சா மட்டும்..?) “729 ரன்னடா..” எண்டன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்கள். எனக்கு ஒன்னுமே புரியல. என்ன எண்டு விசாரித்தேன். “அடி! கழுதை, நடக்கிறது வன்டே மட்ச்சடி… எவ்வளவு முக்கி முக்கி அடிச்சாலும் 500 ஐ தாண்டுறதே கஷ்டம். இதில நீ 729 எண்டு சொல்லுறாய்” என்றார்கள். பிறகென்ன அசடு வழிஞ்சது தான்.




இனி நான் கிரிக்கட் தொடர்பதிவு எழுதலாம் தானே!

விதி முறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். (சத்தியமா உண்மையைத் தாங்க சொல்லுவன். )

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

எல்லாக் கேள்விக்கும் விடை சொல்லேலாது.

(1) பிடித்த போட்டிவகை : ஒண்ணுமே பார்க்கிறதில்லை. இதில எதைச் சொல்ல?

(2) பிடிக்காத போட்டிவகை : ரிபீட்டு….

(3) பிடித்த அணி : பிறந்ததுக்காக இலங்கை.

(4) பிடிக்காத அணி : ஏன் சும்மா கடமைக்கு சொல்லுவான்…

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர் : குமார் சங்கக்கார (றோட்டுவழிய எயார்டெல் விளம்பரங்களில எல்லாம் சிரிச்சுக் கொண்டு நிக்கிறார். அதுக்காக எண்டு சொல்லுவம் எண்டு தான் இருந்தன். ஆனாலும் அம்மம்மா அடிக்கடி வீவா குடிக்கிறவா.. அதால போத்திலில பார்த்து பழக்கம்)

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்; : ஏன் அந்தப் பாவத்தை, எல்லாரும் திறம்.

(7) பிடித்த வேகப்பந்து வீச்சாளர் : லசித் மாலிங்க (எங்க வீட்டை எல்லாருமே மொபிடல் சிம் தான். அதால மொபிட்டலை எங்க கண்டாலும் வடிவாப் பார்ப்பம். எங்க பார்த்தாலும் இவர் தானே நிக்கிறார்)

(8) பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் : ஆசீப் (கிரிக்கட் பார்க்காட்டியும் அடிக்கடி பேப்பர் பார்ப்பன். அதில இவரைப்பற்றி அடிக்கடி வரும்)

(9) பிடித்த ஸ்பின்னர் : முரளி (என்னப்பா முரளியை தெரியாது எண்டு சொல்லலாமே)

(10) பிடிக்காத ஸ்பின்னர் : ஹப்பஜன் சிங் (தோற்றமே முகம் சுழிக்குது.)

(11) பிடித்த சகலதுறை வீரர் : எம்.பி சனத் (கிரிக்கட், அரசியல் எண்டு கலக்குறார்)

(12) கனவான் வீரர்கள் : சச்சின் (சின்னக்குழந்தையும் சொல்லும்)

பதிவை தொடர நான் அழைப்பது…

1. பங்குச்சந்தை அச்சு – ஒரே டைப்பிலயே பதிவொழுதுறார். சும்மா சேஞ்சுக்கு எழுதட்டும்.

2. சிந்தனைச்சிறகினிலே கீர்த்தி – முந்தி இருந்த வேகம் இப்ப பதிவுகளில இல்லை.

(என்னை மாதிரி பகிடி விடாம சீரியஸா எழுதுங்கோ)

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் என்னைச்சேரும்… என்னங்க உல்டா பாட்டெண்டு நினைக்கிறீங்களா? உண்மையைச் சொன்னன்… காதலர் தினத்தை முன்னிட்டு ‘த ஐலண்ட்’ ஆங்கில நாளிதழ் நடத்திய போட்டியொன்றில் அதிர்ஷ்டசாலி வாசகர்களில் ஒருவராகத் தெரிவானேன். அவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ‘ஹோல்பேஸ் ஹொட்டலில்’ வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ‘டன்கொட்டுவ’ நிறுவனத்தினர் வழங்கிய ரூபாய் _ _, 000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் எனக்குக் கிடைத்தது. (காணொளிகளில் கடைசி)




சரி! விடயம் முழுமையாக…

தொழில் நிமித்தம் எனது வேலைகளில் ஒன்று, மும்மொழி பத்திரிகை செய்திகளையும் வாசித்து செய்தி சேகரித்தல். பொதுவாகவே எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்கின்றது. இவ்வாறு பத்திரிகைகளில் வெளிவரும் பரிசுப்போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுப்பது. பரிசு கிடைப்பது, கிடைக்காதது பற்றியெல்லாம் கவலையில்லை. இவ்வாறிருக்கையில் ‘த ஐலண்ட்’ பத்திரிகையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு போட்டி வைத்தார்கள். அதற்கும் அனுப்பினேன். என்னுடன் இணைத்து என் நண்பர்கள் மூவருக்கும் அனுப்பினேன். என் அதிர்ஷ்டமோ, அவர்கள் துரதிஷ்டமோ தெரியவில்லை. பரிசுத்தொகை எனக்கே விழுந்தது. (என் நல்ல மனசுக்காக்கும்…)

என்னால் நம்பவே முடியவில்லை. அந்த வேகத்தில் தான் ஒரு பதிவெழுதியிருந்தேன் எனது நண்பியைச் சாட்டாக வைத்து ‘’. ஐந்நூறு ரூபா கூட விழாத எனக்கு இத்தனையாயிரமா?.... பரிசளிப்பு வைபவம் 12.03.2010 அன்று ஹோல்பேஸ் ஹொட்டலில்… பரிசா, காசா, வவுச்சரா… ???? குழம்பியவாறே… எதுவானாலும் பறவாயில்லை.

றோமியொ, ஜூலியட் படங்களுடன், சிவப்பு – வெள்ளை பலூன் அலங்காரத்துடன் ஹோல்பேஸ் ஹொட்டல் ‘ஜூப்லி’ ஹோல் பளபளத்தது. வர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபம். சுமார் 200 பேரளவில் அமர்ந்திருக்கக் கூடிய மேசை அணிவகுப்புக்கள். ஒரு பக்கத்தில் மேற்கத்தேய இசைக்குழு… மாலை ஆறுமணிக்கு ஆரம்பமாகும் எனக்கூறிய நிகழ்வு 7 மணியளவில் தான் ஆரம்பமாகியது.

அதிஷ்டசாலி நேயர்கள் 20 பேரில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நான் (பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் போட்டிக்கான தபாலட்டையை அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டார்கள்) எனக்கு கிடைத்த கடிதத்தை கொடுத்து வாசலில் பதிந்து விட்டு உட்கார்ந்தேன். மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த போட்டி நிகழ்ச்சிக்கு (பரிசுகளிற்கான) பல விளம்பரதாரர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்கள். குறிப்பாக ‘யூனியன் அசுரன்ஸ்’, ‘ஹட்ச்’, ‘நோலிமிட்’, ‘ஹமீடியா’, ‘டன்கொட்டுவ’, ‘பிறீமா நூடில்ஸ்’ என்பவற்றைக் கூறலாம்.

அதிஸ்டசாலியாக 20 பேரைத் தெரிவு செய்தார்கள். அதிலும் ஒரு போட்டி வைத்தார்கள். குழுக்கள் அடிப்படையில் முதல் இரண்டு இடத்தைப் பொறுபவர்களுக்கும் ‘மிகின் லங்கா’ வழங்கும் சிங்கப்பூருக்கான விமானப் பயணச்சீட்டு. மண்டபத்தில் நிகழ்ந்துவிட்ட இந்த சோதனையால் பதட்டத்துடனேயே நிகழ்ச்சி முடியும் வரை இருக்க வேண்டியதாயிற்று. தலைகீழாக 20ஆவது அதிஸ்டசாலியிலிருந்து குழுக்கல் முறையில் ஆரம்பித்தார்கள். 20 – 16 வரை பல ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொதிகளைக் கொடுத்தார்கள். அதில் நான் அடங்கவில்லை. சின்ன இடைவேளை விட்டு நடனங்களை அரங்கேற்றினார்கள். பின் மீண்டும் 15 – 11 வரையானவர்களை அழைத்தார்கள். அதிலும் நான் அடங்கவில்லை. அவர்களுக்கும் பரிசுப்பொதிகளே! எனக்கு படபடக்க தொடங்கிவிட்டது.

மீண்டும் ஒரு சிறிய இடைவேளை, புகழ்பெற்ற பாடகி (எனக்கு ஆளைத் தெரியவில்லை) பாடலிசைத்தார். பின்னர் உணவு இடைவேளை விட்டார்கள். ஐஸ் கோப்பியுடன் சிற்றூண்டிகள். கொத்துறொட்டியைக் கூட ‘ஒன் த ஸ்பொட்’ இல் சுடச்சுட போட்டார்கள். எனக்கு மனம் ஒன்றிலுமே லயிக்கவில்லை. மீண்டும் நிகழ்வு ஆரம்பமானது. நடனங்கள் மேடையை அலங்கரித்தன. 10 – 6 வரையான அதிஷ்டசாலிகளை தெரிவு செய்தார்கள். பரிசுப்பொதிகளைக் குறைத்து கிப்ட் வவுச்சர்கள் கொடுத்தார்கள். அதிலும் நான் அடங்கவில்லை.

‘அதிர்ஷ்டசாலியிலும் அதிஷ்டசாலி நான், எனக்கு மிகின் லங்கா எயார் டிக்கட் கிடைக்கப்போகுது’ எண்டு நினைச்சு நான் சந்தோசப்படுறதா, ‘ஐயோ! எனக்கு ஏதாவது கிப்ட்டை தந்து அனுப்புங்களேன்டா, சிங்கப்பூர் எல்லாம் வேண்டாம்’ என அழுகிறதா எண்டு தெரியாத நினைப்பு. இதுக்கிடையில வீட்டுக்கும், நண்பர்களுக்கும் அடிக்கடி தொலைபேசி அழைப்பெடுத்து ‘எனக்கு இன்னும் கிடைக்கல… கிடைக்கல’ எண்டு ரன்னிங் கொமன்றி வேற! என்ன செய்ய பதட்டம் தான். இடையில் ‘மிஸ்டர் பீன்’ போல உருவமுடைய ஒருவரது நடனம் இடம்பெற்றது. சகோதர மொழிக்காரர்களுக்கு தெரிந்திருக்கும். சத்தியமா எனக்குத் தெரியாதுங்க. இன்னுமொரு காமெடி பாடகரின் பாடல்… 5அவது ஆள் அழக்கப்பட்டார். அது நானில்லை. இதயம் 100 மேல் துடித்திருக்கும்… 4ஆவது ஆளுடைய சீட்டை எடுக்கிறார்கள். அறிவிப்பாளர் வாசிக்கின்றார்.. எஸ்.றொஷானி…. பிறகென்ன இரண்டு பரிசுப்பொதிகள் மட்டுமே (ஆரம்பத்தில் 10 பரிசுப்பொதிகள்) ஆனால் பெரிய ஒரு தொகையில் ‘வவுச்சர்’…. ‘டன்கொட்டுவ’ மாபிள் வீட்டு உபகரணங்கள் காட்சியறையில் போய் நான் வாங்குவதற்காக… தொடர்ந்து முதலிரண்டு அதிஸ்டசாலிகளைத் தெரிவுசெய்து விமானப் பயணச்சீட்டை வழங்கினார்கள். விழா இனிதே நிறைவு பெற்றது.. நேரமோ இரவு 10.00 மணி…

கடும்பானப் பிரியர்களுக்காக தாராளமாக ‘ஹாட் ட்ரிங்ஸ்’ வைக்கப்பட்டிருந்தது. ஒரு சிலரைத்தவிர யாருமே அதைத்திரும்பிப் பார்க்கவில்லை. காரணம் நேரமோ நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. நேரம் கடந்ததால் அம்மா அண்ணாவை அனுப்பியிருந்தார். பரிசுகளுடன், சந்தோசமாக வீடு சென்றேன்.

அட! பொறாமைப்படாதீங்க… அதிஸ்டம் யார் வீட்டு கதவை தட்டுமெண்டு தெரியுமா? நாளை உங்களுக்கும் கிடைக்கும்.

பி.கு : ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகும் ‘மை நேம் இஸ் கான்’ கேள்விக்காக பதிலளித்து 6 இலவச டிக்கட்டுக்களை ‘லிபேர்ட்டி’ திரையரங்கில் பெற்றுவிட்டேன். ஹி ஹி….


இன்று சர்வதேச பெண்கள் தினம். அதில் நானொரு அங்கம் என்ற படியால் சக பெண்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசியல், விளையாட்டு, உத்தியோகம் என பலவற்றிலும் ஒதுக்கப்பட்டிருந்த பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக எல்லாவற்றிலும் ஈடுபடுகின்றார்கள். இதில் “ஆண்களுக்கு நிகராக” என சொல்வது இறுமாப்பல்ல, யார் விதித்த சாபமோ தெரியவில்லை அன்றைய காலத்தில் பெண்கள் ஒதுக்கப்பட்டார்கள். வீடுகளுக்குள் முடக்கப்பட்டார்கள். வெறும் ஆண்களுக்கு சேவை செய்யும் அடிமைகளாக மட்டும் நடத்தப்பட்டார்கள். இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இதனையே பேசிக் கொண்டிருந்தால் வெறும் பெண்ணியவாதமாகப் போய்விடும் அதைவிடுத்து வேறு சில விடயங்களைப் பார்ப்போம்.


மகளிர் தின ஆரம்பம்

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பணிநேரத்தைக் குறைக்கக் கோரி பெண் தொழிலாளர்கள் போராட ஆரம்பித்திருந்தனர். 1908இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 15,000 பெண் தொழிலாளிகள் வேலைநேரத்தைக் குறைக்கக் கோரியும், ஊதிய உயர்வு மற்றும் வாக்குரிமை கேட்டும் ஊர்வலம் சென்றனர்.

அமெரிக்க சோசலிசக் கட்சியின் சார்பாக 1909 முதல் தேசிய அளவில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. 1910இல் கோபன்ஹென் நகரில் சர்வதேச உழைக்கும் மகளிர் அமைப்புக்கள், பிரதிநிதிகள் சார்பாக நடந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில்தான் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிளாரா செட்கின் என்ற புகழ்பெற்ற தலைவர் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை முன்வைத்தார். பிரதிநிதிகள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.

இதன்படி 1910 இல் மார்ச் 19 இல் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நாளில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமத்துவ, அரசியல், பொருளாதார உரிமைகளுக்காக அணிதிரண்டனர். இதே ஆண்டில் நியூயார்க் நகரின் புடவைத்; தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 140 பெண் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் இத்தாலிய மற்றும் யூத இனத்தைச் சேர்ந்த அகதிகளே அதிகம். இந்த விபத்து பெண் தொழிலாளிகளின் அவல நிலையை உலகிற்கு தெரிவித்தது.

முதல் உலகப் போரில் ஈடுபட்ட ரஷ்யாவில் ஜாருக்கும், போருக்கும் எதிராக போல்ஷ்விக்குகள் காட்டிய எதிர்ப்பு பெண்களிடமும் எழுந்தது. போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைதியை வேண்டியும் ரஷ்யப் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. ரஷ்யாவில் ஜூலியன் நாட்காட்டியில்; வரும் இந்நாள் மற்ற நாடுகளில் கிரிகோரியன் நாட்காட்டிப்படி மார்ச் 8 இல் அனுசரிக்கப்பட்டது.
இதன்பிறகு மார்ச் 8 என்பது சர்வதேச உழைக்கும் மகளிர் தினமாக வரலாற்றில் இடம்பெற்று கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கம்யூனிச நாடுகளிலும், மற்ற நாடுகளின் சோசலிசக் கட்சிகள் சார்பாகவும் இந்த தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தற்போது உலகமெங்கும் மகளிரின் பல்வேறு அமைப்புக்களால் மகளிர் தினம் பிரபலமாயிருக்கிறது.


நடிகைகள் வாழ்த்து.

மகளிர் தினம் தற்போது காதலர் தினம் போல பரிசுகள் பரிமாறுவதாகவும், பொங்கல் - புத்தாண்டு போல வாழ்த்துச் செய்தி கூறுவதாகவும் மாறி வருகின்றது. திரை மகளிர் நட்சத்திரங்கள் மகளிர் தினத்தையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அவற்றின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

ரம்பா
காலையில் காபி கொடுக்குறதுல தொடங்கி, ஒவ்வெரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். எனக்கு இந்திராகாந்தியை ரொம்ப படிக்கும். அவங்க பெஸ்ட் வுமன். பெண்ணா பிறந்ததுக்கு பெருமைப்படுறேன். உலகத்தில் இருக்குற எல்லா பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

த்ரிஷா
அம்மா என்னுடைய தேவைகள் எல்லாத்தையும் கவனித்துக் கொள்வதால் நடிப்புத் துறையில் சரியாக செல்ல முடிகிறது. பெண்கள் முன்னேறி நிறைய சாதிக்கணும். நாட்டுக்கே பெருமை சேர்க்கணும்.

ப்ரியாமணி
முதல்ல பெண்களா பிறந்ததுக்கு பெண்கள் எல்லாரும் பெருமைப்படணும். இப்ப இருக்குற காலகட்டத்துல ஆணுக்கு நிகரா, எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்காங்க. ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள். நிறைய பெண்கள் தைரியமா வெளில வந்து சாதிக்கணும்.

மீனாட்சி
என்னை பொறுத்தவரைக்கும் இன்னும் எங்காவது ஒரு இடத்தில் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் இதெல்லாம் மாறும்னு நினைக்கிறேன். ஆண்கள் இல்லன்னா பெண்கள் இல்லை. அவங்களால எதையும் தனியா சாதிக்க முடியாது. அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

சந்தியா
நாங்க ஜெயிச்சிட்டோம், சாதிச்சிட்டோம்னு எல்லாம் பெண்கள் சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் பெண்கள் இந்த அளவு வெளியே வர ஆண்கள்தான் காரணம். சமுதாயத்தில் பெண்களும் நல்ல நிலைக்கு வரணும்னு ஆண்கள் விரும்புறாங்க. குடும்பத்திலும் அப்பா, அண்ணா, கணவர் என் எல்லாரும் உதவி செய்தால் பெண்கள் நிறைய சாதிக்க முடியும்னு நம்புறேன்.

சானாகான்
பெண்கள்னா ஒரு பவர் இருக்குன்னு நான் நினைக்கிறேன். பெண்களுக்கு இப்ப நிறைய விழிப்புணர்வு வந்திருக்கு. யாரும் வீட்டில் சும்மா இருக்க விரும்புறதில்லை. எல்லா பெண்களுக்கும் ஒரு சப்போர்ட் தேவைப்படுது. இந்த தினத்தில் ஆண்கள்கிட்ட கேட்டுக்கிறேன். ஈகோ இல்லாம எல்லோரையும் சரி சமமா பாருங்க. நன்றி! வாழ்த்துக்கள்!

என்னை சிந்திக்க, கவலை கொள்ள வைத்த ஒரு விடயம் இது. “ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன், கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்த்து கொண்டிருக்கிறார்”.

எனக்கு ஏதோ தெரியவில்லை. பழைய நடிகைகளில் அவரை றொம்பவே பிடிக்கும். சரோஜா தேவி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா என பலரும் கண்களுக்கு பூச்சடித்து நாடகத் தன்மையாக இருக்கும் போது, அன்றைய காலத்தில் இன்றைய நடிகைகள் மாதிரி மிகவும் அழகாக இருந்தார். அந்த பழம்பெரும் நடிகையின் பெயர் காஞ்சனா. சிவந்த மண், காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களின் மூலம் லட்ச லட்சமாய் சம்பாதித்தார். ஆனால் இப்போது பெங்களுரில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இவர் பற்றி முன்னரும் காத்துவாக்கில் இப்படியான விடயம் கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்று அது ஊர்ஜிதமாகியுள்ளது. இவரை பராமரிப்பதற்கு தமிழக, கர்னாடக, ஆந்திர எந்த திரைத்துறையினரும் முன்வரவில்லையா? ஒரு மூத்த சாதனையாளருக்கு கொடுக்கும் கௌரவமா அது? சக நடிகர்கள் எவருக்கும் இரக்கம், பாசம் இல்லையா? ஏன் பலரின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த இவரை பராமரிக்க ரசிகர்கள் கூட முன்வரவில்லையே. அது சரி! எல்லாம் அழகும் பணமும் இருக்கும் வரை தான் போலும். சிலவேளை இவர்கள் எவரிடமும் கிடைக்காத நின்மதி கோவிலில் அவருக்கு கிடைக்கலாம்.

Followers

About this blog

Labels