இன்று சர்வதேச பெண்கள் தினம். அதில் நானொரு அங்கம் என்ற படியால் சக பெண்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசியல், விளையாட்டு, உத்தியோகம் என பலவற்றிலும் ஒதுக்கப்பட்டிருந்த பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக எல்லாவற்றிலும் ஈடுபடுகின்றார்கள். இதில் “ஆண்களுக்கு நிகராக” என சொல்வது இறுமாப்பல்ல, யார் விதித்த சாபமோ தெரியவில்லை அன்றைய காலத்தில் பெண்கள் ஒதுக்கப்பட்டார்கள். வீடுகளுக்குள் முடக்கப்பட்டார்கள். வெறும் ஆண்களுக்கு சேவை செய்யும் அடிமைகளாக மட்டும் நடத்தப்பட்டார்கள். இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இதனையே பேசிக் கொண்டிருந்தால் வெறும் பெண்ணியவாதமாகப் போய்விடும் அதைவிடுத்து வேறு சில விடயங்களைப் பார்ப்போம்.


மகளிர் தின ஆரம்பம்

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பணிநேரத்தைக் குறைக்கக் கோரி பெண் தொழிலாளர்கள் போராட ஆரம்பித்திருந்தனர். 1908இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 15,000 பெண் தொழிலாளிகள் வேலைநேரத்தைக் குறைக்கக் கோரியும், ஊதிய உயர்வு மற்றும் வாக்குரிமை கேட்டும் ஊர்வலம் சென்றனர்.

அமெரிக்க சோசலிசக் கட்சியின் சார்பாக 1909 முதல் தேசிய அளவில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. 1910இல் கோபன்ஹென் நகரில் சர்வதேச உழைக்கும் மகளிர் அமைப்புக்கள், பிரதிநிதிகள் சார்பாக நடந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில்தான் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிளாரா செட்கின் என்ற புகழ்பெற்ற தலைவர் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை முன்வைத்தார். பிரதிநிதிகள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.

இதன்படி 1910 இல் மார்ச் 19 இல் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நாளில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமத்துவ, அரசியல், பொருளாதார உரிமைகளுக்காக அணிதிரண்டனர். இதே ஆண்டில் நியூயார்க் நகரின் புடவைத்; தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 140 பெண் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் இத்தாலிய மற்றும் யூத இனத்தைச் சேர்ந்த அகதிகளே அதிகம். இந்த விபத்து பெண் தொழிலாளிகளின் அவல நிலையை உலகிற்கு தெரிவித்தது.

முதல் உலகப் போரில் ஈடுபட்ட ரஷ்யாவில் ஜாருக்கும், போருக்கும் எதிராக போல்ஷ்விக்குகள் காட்டிய எதிர்ப்பு பெண்களிடமும் எழுந்தது. போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைதியை வேண்டியும் ரஷ்யப் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. ரஷ்யாவில் ஜூலியன் நாட்காட்டியில்; வரும் இந்நாள் மற்ற நாடுகளில் கிரிகோரியன் நாட்காட்டிப்படி மார்ச் 8 இல் அனுசரிக்கப்பட்டது.
இதன்பிறகு மார்ச் 8 என்பது சர்வதேச உழைக்கும் மகளிர் தினமாக வரலாற்றில் இடம்பெற்று கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கம்யூனிச நாடுகளிலும், மற்ற நாடுகளின் சோசலிசக் கட்சிகள் சார்பாகவும் இந்த தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தற்போது உலகமெங்கும் மகளிரின் பல்வேறு அமைப்புக்களால் மகளிர் தினம் பிரபலமாயிருக்கிறது.


நடிகைகள் வாழ்த்து.

மகளிர் தினம் தற்போது காதலர் தினம் போல பரிசுகள் பரிமாறுவதாகவும், பொங்கல் - புத்தாண்டு போல வாழ்த்துச் செய்தி கூறுவதாகவும் மாறி வருகின்றது. திரை மகளிர் நட்சத்திரங்கள் மகளிர் தினத்தையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அவற்றின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

ரம்பா
காலையில் காபி கொடுக்குறதுல தொடங்கி, ஒவ்வெரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். எனக்கு இந்திராகாந்தியை ரொம்ப படிக்கும். அவங்க பெஸ்ட் வுமன். பெண்ணா பிறந்ததுக்கு பெருமைப்படுறேன். உலகத்தில் இருக்குற எல்லா பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

த்ரிஷா
அம்மா என்னுடைய தேவைகள் எல்லாத்தையும் கவனித்துக் கொள்வதால் நடிப்புத் துறையில் சரியாக செல்ல முடிகிறது. பெண்கள் முன்னேறி நிறைய சாதிக்கணும். நாட்டுக்கே பெருமை சேர்க்கணும்.

ப்ரியாமணி
முதல்ல பெண்களா பிறந்ததுக்கு பெண்கள் எல்லாரும் பெருமைப்படணும். இப்ப இருக்குற காலகட்டத்துல ஆணுக்கு நிகரா, எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்காங்க. ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள். நிறைய பெண்கள் தைரியமா வெளில வந்து சாதிக்கணும்.

மீனாட்சி
என்னை பொறுத்தவரைக்கும் இன்னும் எங்காவது ஒரு இடத்தில் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் இதெல்லாம் மாறும்னு நினைக்கிறேன். ஆண்கள் இல்லன்னா பெண்கள் இல்லை. அவங்களால எதையும் தனியா சாதிக்க முடியாது. அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

சந்தியா
நாங்க ஜெயிச்சிட்டோம், சாதிச்சிட்டோம்னு எல்லாம் பெண்கள் சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் பெண்கள் இந்த அளவு வெளியே வர ஆண்கள்தான் காரணம். சமுதாயத்தில் பெண்களும் நல்ல நிலைக்கு வரணும்னு ஆண்கள் விரும்புறாங்க. குடும்பத்திலும் அப்பா, அண்ணா, கணவர் என் எல்லாரும் உதவி செய்தால் பெண்கள் நிறைய சாதிக்க முடியும்னு நம்புறேன்.

சானாகான்
பெண்கள்னா ஒரு பவர் இருக்குன்னு நான் நினைக்கிறேன். பெண்களுக்கு இப்ப நிறைய விழிப்புணர்வு வந்திருக்கு. யாரும் வீட்டில் சும்மா இருக்க விரும்புறதில்லை. எல்லா பெண்களுக்கும் ஒரு சப்போர்ட் தேவைப்படுது. இந்த தினத்தில் ஆண்கள்கிட்ட கேட்டுக்கிறேன். ஈகோ இல்லாம எல்லோரையும் சரி சமமா பாருங்க. நன்றி! வாழ்த்துக்கள்!

என்னை சிந்திக்க, கவலை கொள்ள வைத்த ஒரு விடயம் இது. “ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன், கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்த்து கொண்டிருக்கிறார்”.

எனக்கு ஏதோ தெரியவில்லை. பழைய நடிகைகளில் அவரை றொம்பவே பிடிக்கும். சரோஜா தேவி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா என பலரும் கண்களுக்கு பூச்சடித்து நாடகத் தன்மையாக இருக்கும் போது, அன்றைய காலத்தில் இன்றைய நடிகைகள் மாதிரி மிகவும் அழகாக இருந்தார். அந்த பழம்பெரும் நடிகையின் பெயர் காஞ்சனா. சிவந்த மண், காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களின் மூலம் லட்ச லட்சமாய் சம்பாதித்தார். ஆனால் இப்போது பெங்களுரில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இவர் பற்றி முன்னரும் காத்துவாக்கில் இப்படியான விடயம் கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்று அது ஊர்ஜிதமாகியுள்ளது. இவரை பராமரிப்பதற்கு தமிழக, கர்னாடக, ஆந்திர எந்த திரைத்துறையினரும் முன்வரவில்லையா? ஒரு மூத்த சாதனையாளருக்கு கொடுக்கும் கௌரவமா அது? சக நடிகர்கள் எவருக்கும் இரக்கம், பாசம் இல்லையா? ஏன் பலரின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த இவரை பராமரிக்க ரசிகர்கள் கூட முன்வரவில்லையே. அது சரி! எல்லாம் அழகும் பணமும் இருக்கும் வரை தான் போலும். சிலவேளை இவர்கள் எவரிடமும் கிடைக்காத நின்மதி கோவிலில் அவருக்கு கிடைக்கலாம்.