இலங்கைக்கு இந்தியா சார்பாக நடிகர்கள் வருவது மிக மிகக் குறைவு. இந்தியப் பணத்தில் ஆறு கோடியில் தயாரிக்கும் படத்தை அதனை விட அழகாக இலங்கை ரூபாயில் ஆறு கோடியில் தயாரித்து விடலாம். இது பலருக்கு தெரிந்தாலும் பல கோடி செலவழித்து சுவிஸ், அமெரிக்கா போவது தான் வழமை. ஆங்காங்கே பட்ஜட் இடிக்கும் போது இலங்கையில் வந்து ஒரு பாடல் எடுத்து விட்டு செல்வார்கள். தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் காசு கொடுத்து அழைத்தால் வருவார்கள். ஹிந்தி நட்சத்திரங்கள் மழைக்கு கூட ஒதுங்க நினைப்பதில்லை. ஷாருகான், ஷொயிப் அலிகான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் வந்து பங்குபற்றிய நிகழ்வில் நம்மவர்களின் சாதனையால் ‘இனி இந்தப்பக்கமே வரமாட்டேன்’ என ஓட்டம் பிடித்தார்கள் அவர்கள். இந்த நிலையில் பிரம்மாண்டமான ஒரு சினிமா விழாவிற்கு தயாராகின்றது இலங்கை.


செய்தி கேள்விப்பட்ட நான் முதலில் நம்பவே இல்லை. ஹிந்தி உச்ச நட்சத்திரங்கள் இலங்கைக்கு வருவார்களா? என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்குள்ளும் எழுந்தது. ஆனாலும் ‘வருவார்கள்’ என அடித்து உரைத்திருக்கிறார் அமிதாப். திரையில் பார்த்தவர்களை இலங்கையர்கள் நேரில் பார்க்க போகின்றார்கள். ‘சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா’ இது இந்திய சினிமாத் துறையினராலேயே கடுமையாக விமர்சிக்கப்படுவது. காரணம் பெயரில் தான் ‘சர்வதேச இந்திய’ ஆனால் விருது ஹிந்தி சினிமாவுக்கு மட்டும். இதனால் மற்ற திரைத்துறையினர் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. உள்நாட்டில் நிகழ்வுக்கு மதிப்பில்லாத படியால் தான் துபாய், இலங்கை என சுற்றுகின்றது விழாக்குழு.

இதில் இன்னொரு பகிடி. இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு விழாக்குழுவினரால் (அமிதாப்) அனுப்பப்பட்ட அழைப்பிதழை வாங்க ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் மறுத்துள்ளனர். ஏன்??? அதுபற்றி கருத்து சொல்லக் கூட ஒருவரும் முன்வரவில்லை. எங்களுக்குத் தெரியாதா… ஆதரவாக கருத்துச் சொன்னால் அல்லது யாரையும் சந்தித்தாலே நடிகர்களின் படங்களுக்கு இலவச எதிர்ப்புப் பிரசாரங்கள் முடக்கி விடப்படும் நிலையில், நேரில் இலங்கை வந்து கலந்து கொண்டால்… என்னவாவது!


இதேவேளை மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராவணா படத்தை இலங்கை திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டிருக்கும் விழாக் குழுவினர், மணிரத்னத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கை விழாவில் கலந்து கொண்டால், தன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணிரத்னம்.

ம்ம்… ஏதோ யோசிச்சு செய்யுங்கப்பா…


சர்வதேச விருது வென்ற பம்பர வலல்ல திரைப்படத்தின் இயக்குநர் அத்துல லியனகே இலங்கை வந்துள்ளார். அமெரிக்காவின் ஹஸ்டன் நகரில் இடம்பெற்ற 46ஆவது WORLD FIRST சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான ஜுலி விருதை திரு.லியனகே பெற்றுக் கொண்டார். அவர் இயக்கிய முதலாவது திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். அதேநேரம் கலை இயக்கத்தையும் திரு.லியனகே மேற்கொண்டார். திரைப்படத்தின் பிரதான பாத்திரமேற்று நடித்தவரும் அத்துல லியனகே என்பது குறிப்பிடத்தக்கது. பம்பர வெலல்ல திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிசூலதீப தபவிட்ட சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றுள்ளார். பம்பர வலல்ல திரைப்படத்தை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அளவில் இலங்கையில் திரையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக திரைப்படத்தின் இணைப்பாளர் உதய தேவாலமுல்ல தெரிவித்தார்.