உலகப்பிரசித்தி பெற்ற ஓவியர் பிக்காஸோ உட்பட ஐந்து பிரபல ஓவியர்களின் ஓவியங்களைத் திருடியவரை தேடி பிரான்ஸ் பொலிஸார் வலை விரித்துள்ளனர். இந்த ஓவியங்கள் பிரான்ஸின் நவீன ஓவிய நூதனசாலையின் வைக்கப்பட்டிருந்தன. கடந்த சில வாரங்களாக நூதனசாலையின் விழிப்புமணி சரியாகச் செயற்படவில்லை. இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முகமூடியணிந்த நபரொருவர் உடைந்திருந்த நூதனசாலை ஜன்னலூடாக புகுந்து உட்சென்றிருப்பது கண்காணிப்பு கமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.


நூதனசாலை நன்கு அறிந்த ஒருவரோ அல்லது குழுவோ இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமென பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடிச்செல்லப்பட்ட ஒவ்வொரு ஓவியங்களும் தலா 123 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடையன. இந்த ஓவியங்களின் பெறுமதி குறித்து நன்கு அறிந்த திருடர்கள் அதனை பகிரங்க சந்தையில் விற்கமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பொலிஸார் கொள்ளையர்களை முழுவீச்சாக தேடிவருகின்றனர். பிக்காசோவினால் 1911ஆம் ஆண்டு வரையப்பட்ட ஓவியமும், மரிஸ்ஸேயினால் 1906ஆம் ஆண்டு வரையப்பட்ட ஓவியமும் மற்றும் பிரபல ஓவியர்கள் மூவரது புகழ்பெற்ற பண்டைய ஓவியங்களே திருடப்பட்டுள்ளன.


கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து எச்சரிக்கை மணி பழுதடைந்துள்ளதாக பாரிஸ் நகர மேஜர் பேனார்ட் டிலனோ தெரிவித்துள்ளார். அது திருத்தப்பட்டு வரும்வரை காத்திருந்த காலப்பகுதியேலே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிஸின் பிரபஞ்ச கலாச்சார நகரத்துக்கு இடம்பெற்ற பாரிய திருஷ்டியாக இந்தச் சம்பவம் இருக்குமென குறிப்பிடப்படுகின்றது. திருடன் அதிகாலை 4 மணியளவில் நூதனசாலைக்குள் நுழைந்து 15 நிமிடங்களுக்குள் இந்த ஐந்து ஓவியங்களையும் திருடிச்சென்றுள்ளான். மூன்று காவலாளிகள் அந்தச் சமயம் கடமையில் இருந்தபோதும் காலை 7 மணியளவிலேயே இக்கொள்ளைச் சம்பவம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நூதனசாலையானது ஈபிள் கோபுரத்திலிருந்து ஆரம்பிக்கும் செய்ன் நதிக்கு குறுக்காக அமைந்துள்ளது.