கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்து வருகின்றது. இந்த விசாரணை முன் ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், முக்கிய நபர்கள், பிரஜைகள் என பல தரப்புக்கள் சாட்சியம் அளித்துவருகின்றன. இருந்தாலும் இந்த ஆணைக்குழு தொடர்பாக உள்ளுரிலும் சர்வதேசத்திலும் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றது. இருந்தாலும் சாட்சியம் அளிப்போர் சொல்லும் கருத்துக்கள், முன்வைக்கும் சாட்சியங்கள் வித்தியாசமாக இருப்பதுடன் சிந்தனைகளின் கோணத்தை தூண்டி விடுகின்றது.
பல ஆண்டுகளாக இலங்கையை ஆட்டிவித்து புரையோடிய இனப்பிரச்சினைக்கு காரணம் என்ன? இவ்வாறானதோர் பிளவு நிலை ஏன் ஏற்பட்டது? தொடர்பான கருத்துக்கள், ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சமதான ஒப்பந்தங்கள் வெற்றியளிக்காமை, புலிகள் தோற்கடிக்கப்பட்டும் இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படாமை, இனப்பிரச்சினைக்கு தீர்வுகளை காலம் தாழ்த்துவது போன்ற பல உண்மைகள் முன்வைக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவின் முன் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் மிகவும் முக்கியமானது பயங்கரவாதம் இலங்கையில் எவ்வாறு தலைதூக்கியது என்பது தான்.இந்த நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கியவர்கள் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள் தான் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியாவுக்கான தூதுவராக பணியாற்றியவருமான மங்கள முனசிங்க தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் அமைதிவழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய போது சில சிங்கள பௌத்த செயற்பாட்டாளர்கள் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். 1956ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தின் காரணமாகத் தமிழ் மக்களின் எதிர்காலம் பொருளாதாரம் கலாச்சாரம் போன்றன சிதைவடையத் தொடங்கியன. அன்றிலிருந்து இன்று வரை சிதைவடைந்த நிலையில் தடயங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்கா செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால் இதற்கெதிராக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கண்டிக்கு பாதயாத்திரை சென்றார்.
இந்த எதிர்ப்புக்கள தான் அரசியலை சிதறடித்தன காலப்போக்கில்.2002ம் ஆண்டில் கையெழுத்திட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் அதில் ஒன்றும் நடைமுறைப்படுத்தவில்லை. 1983ம் ஆண்டு நடைபெற்றது ஒரு இனவன்முறை அல்ல.அது அரசியலின் பின்புலத்தில் நிகழ்ந்த வன்முறை. அதற்குப் பின்னர் தான் தமிழ் இளைஞர்கள் சிந்தித்தார்கள் இனப்பிரச்சினையை அடியோடு தகர்க்க சரியான வழி வன்முறை என்று.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் இந் நாட்டில் தமிழ் மக்களுக்கு அனுபவித்து வந்த சலுகைகள் உரிமைகள் இல்லாமல் ஆக்கப்பட்டது சுதந்திரத்துக்குப் பின்னர் தான். அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகவும் சர்வதேசத்திற்கு காட்ட முயற்சித்தும் இருக்கிறார்கள்.யுத்தம் முடிவடைந்து 15 மாதங்கள் கடந்தும் இன்று வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.தமிழ் மக்கள் மீதான இனப்பாகுபாடு அடக்குமுறைகள் இவற்றோடு விட்டுவிடாமல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளும் அபகரிக்கப்படுகிறது.
தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்படாமல் முன்னைய ஒப்பந்தங்கள், அறிக்கைகள் போலவே கிடங்கில் போடப்படுமானால் இலங்கை பல விதமான விமர்சனத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும்.இப்பொழுதும் இந்த நிலைதான் காணப்படுகிறது.
ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்துத் தான் இலங்கையின் எதிர்காலத் திட்டமிடல்கள் அமையுமானால் தமிழருக்கான ஒதுக்கீடுகள்,சலுகைகள்,உரிமைகள் எல்லாமே கேள்விக்குறி தான்.
கேள்விக் குறியிலேயே பிறந்து கேள்விக் குறியிலேயே குடிசை போட்டு இறப்பும் கேட்பார் அற்றுப் போனால்…….வெளிசமூகங்களும் சட்டங்களும் ஏன்?நாங்கள் சிந்திய இரத்தம் , உழைப்பு , இழந்த உயிர்கள் வீணே…வீண்!!!!
0 comments:
Post a Comment