இன்றைய காலப்பகுதிகளில் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியல்வாதிகள் சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் என்ற போக்கே தொடர்கிறது. இந்த சூழ்நிலைகளில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு குறைவடைந்து கேள்விக் குறியாகும் வேளை, மறுபுறம் மக்கள் மத்தியில் அரசியல் என்பது பொம்மலாட்டமாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஓவ்வொரு அரசியல் கட்சியும் நிலைமைகளை தமக்கு ஏற்ற மாதிரி சாதகமாக தங்கள் பக்கம் திருப்பி அதில் நன்மையடைய முயற்சிக்கிறார்கள். இதற்கு சரியான மூல காரணம் இலங்கை அரசியல் வாதிகளும் சரியான தலைமைத்துவமும் இல்லை என்பதே ஆகும். எந்த விதத்திலும் விதிவிலக்கில்லை என்ற போக்கே தொடர்கிறது.

அரசியல் விவகாரங்கள் இலங்கையில் திடீர் திடீரென மாற்றம் பெறுவதும் அதற்கேற்ப அரசியல்வாதிகளும் சாதுரியமாக காய் நகர்த்தல்களில் ஈடுபடுவதும் தான் மக்களுக்கு வியப்பாகக் காணப்படுகிறது. ஆளுந்தரப்பும் எதிர்தரப்பும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருப்பதும் மறுகணம் பூதம் வெளிக்கிட்டது போல இரு தலைவர்களும் ஒன்று கூடி பொது இணக்கப்பாட்டுக்கு இணங்குவது போல மக்கள் மத்தியில் தோன்றுவது, இவ்வாறான பின் புலத்தில் அவர்கள் இணக்கப்பாட்டை நம்புவதா? மறுப்பதா என மக்கள் மத்தியில் திடீர் கேள்விகள் முளைத்துள்ளன.

ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக கடந்த மாதம் முதல் பேச்சுக்கள் ஆமை வேகத்தில் சென்ற கொண்டிருக்கிறது. முயல் வேகத்தில் ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவருக்குமிடையேயான பேச்சுக்கள் காரணமாக கட்சித் தாவல்கள் தற்றும் கட்சிகளின் உட்பூசல்கள் வெளிவருகின்றன.

எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்த ஆளுந்தரப்பு முயற்சிப்பதாகவும் இதனால் அரசுடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ரணில் தெரிவித்துள்ளார். இவ்வாறான போக்குகள் தொடர்வதால் இரண்டு தரப்புகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுக்கு இடமே இல்லை என்று எதிர்பார்த்திருக்க திடீர் திருப்பமாக கடந்த கிழமை இரு தரப்பின் தலைவர்களும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தடைப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் பேச்சு வார்த்தையினை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

எதுவாக இருந்தாலும் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணக்கமானதோர் முடிவை எட்ட வேண்டும் என்பது தான் எல்லோர் எதிர்பார்ப்பும். ஆனாலும் ஆளுந்தரப்பு தங்கள் ஆட்சிக் காலத்தை நீடிப்பதற்கான வியூகங்களைத் தீட்டி வருகின்றது. இதை இன்றைய நடவடிக்கைகள் காட்டிக் கொடுக்கின்றன.
அதே நேரம் எதிர் தரப்பு தர்ம சங்கட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உள்வீட்டு பிரச்சியையை விட அடுத்த தலையிடி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைப்பது எப்படி? அதற்கான இறுதி நாள் நாளை ஆகஸ்ட் 15ம் திகதி. பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் இப்பொழுதும் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ம் திகதிக்குப் பின்னரும் பேச்சுவார்த்தையை தொடர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆகா எவ்வளவு அதிஷ்டம் கிடைத்தும் யானை தன் கையால் தன் தலையில் மண்ணையள்ளிப் போட்டால் யார் தான் என்ன செய்றது?

இருந்தாலும் வர்த்தக சலுகைகளை நீடிக்க வேண்டுமானால் தங்கள் 15 நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழு கோரியதை அடுத்து இலங்கை அரசு ஒன்றியத்துடன் நடத்தி வந்த சகல பேச்சுக்களை கடந்த யூலையில் நிறுத்தியது.

ஓட்டு மொத்தத்தில் இலங்கை அரசியலே ஒரு குழப்பமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தீர்வு யார் வல்லவன் யார் அரசியலமைப்பை மாற்றுவது என்ற போட்டி இல்லை. இப் பொழுது தேவை நாட்டின் பொருளாதாரத்தையும் எதிர்கால திட்டமிடல்களையும் சரியான பாதைக்கு திருப்புவது தான்.தரப்புக்கள் இணங்கி செயற்பட வேண்டிய கட்டாய தேவைப்பாடு உருவாகியுள்ளது.

இணக்கங்கள் கருத்தொன்றிப்பு மூலம் தான் தீர்வை எட்ட முடியும். இல்லா விட்டால் எதுவுமே யாருக்கும் எட்டாக் கனியாகி விடும்.