வானம் தொடும் காலம் வரை நிம்மதி
என்றிருந்தோம்
எத்தனை கனவுகளை கருவறையில் அல்ல
இதயவறையில் சுமந்தோம்

நாங்களும் ஈசலும் உறவுகள் - காரணம்
இறக்க இறக்க பிறப்போம்
என்றும் தளைப்போம் என்ற பெருமிதம்

எங்கள் வீட்டில் விளைந்து நின்ற மரத்தில்
ஏராளம் காய்களடா..
அப்பவும் முத்தத்தில் இருந்த பாட்டி சொன்னாள்
நாவூறுபட்டு உதிரப் போகுது எண்டு..

கனவில கூட கடவுள் காட்டியதில்லையே!
இரவை விழுங்கிவிட்டு செங்கதிரவன் வரமுந்தி
அயல் வீட்டான் எங்கள் வீட்டு மரத்திலேயே
எறிந்தான் எதையோ

பிஞ்சும்..
பூவும்..
காயும்..
மரமும்..
வேரையும் விடவில்லை... - எல்லாம்

சிவந்த மண்ணில் சீவனற்றுக் கிடக்கிறது.
மூதாதையர் செய்த பாவமோ?
விழுந்தவையை அள்ளிப் பொறுக்கினோம்!
நாதியற்ற நாங்கள்!

கொடியோடு மரம் சாய்ந்ததை பாட்டி
விடிய முந்தியே நினைவூட்டினாள்
பாட்டி கிடந்து புலம்புறாள்
புது மரம் வைத்து தண்ணி கொஞ்சம்
விடு பிள்ளை என்று..
மறுப்பார் யாரும் இல்லை
ஏற்பாரும் யாரும் இல்லை.