பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நாட்டிலுள்ள சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியளவில் உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்து நிறைவேற்றவுள்ளது. மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் வகையில் இந்தத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்.

ஆனால் புதிய முறைப்படி தேர்தல் நடத்தப்போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையையே தேர்தல் திருத்தச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருந்தாலும் புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கு காலம் தேவை. வட்டார எல்லைகளை மீள் நிர்மாணம் செய்யவேண்டும் அத்துடன் அது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளது சில பிரதேச சபைகள். இவற்றைத் தீர்த்து தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆவது வேண்டும்.

மாறாக அரசாங்கமோ எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் அதிகரிப்பதற்கு தயாராக இல்லை. தேர்தலை எப்படியாவது ஏப்ரல் மாத இறுதியிலாவது முடித்துவிடவேண்டும் என அரசு ஒற்றைக்காலில் நிற்கிறது. மார்ச் மாதமளவில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் ஆனது அரச தரப்புக்கும் சரி ஐக்கிய Nதிய கட்சிக்கும் சரி ஒரு பலப்பரீட்சையாகவே அமையப்போகிறது. ஜனாதிபதியைப் பொறுத்தளவில் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்பதே நோக்கு. அதைவிட முக்கிய தேவைப்பாடாகவும் உள்ளது ஏனென்றால் அண்மைய நாட்களில் தெற்கில் உள்ள உள்ளுராட்சிச் சபைகளின் வரவுசெலவுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது. இது தான் முக்கிய பிரச்சினை. இதுவரை ஐந்து உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்ற ஆளும்கட்சி மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. இதுவே ஆளும்கட்சிக்குரிய முதல் வேட்டாக அமைகிறது.

அடுத்தது விலைவாசி உயர்வுக்கு அளவுகணக்கே இல்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுவோம் என்று கூறிக்கொண்டு சரித்திரத்திலே நடந்திராதவாறு தேங்காயை இறக்குமதி செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். முட்டை கூட இறக்குமதி செய்யும் நிலை வந்துவிட்டது. மறுபக்கத்தில் வெங்காயத் தட்டுப்பாடு தலையைப் பிய்க்கிறது. இந்த நிலையில் அரசு திணறிக்கொண்டிருக்கிறது இது எதிர்த்தரப்புக்கு சாதகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் பொதுமக்கள் தான் நசிபடுகிறார்கள்.

இந்தப் போக்கு தொடருமானால் மக்கள் மனதில் அரசுக்கு எதிரான கருத்து உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான தாக்கத்தை தேர்தலில் பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளுரிலேயே இந்த நெருக்கடிகளை அரசு சந்திக்கிறதென்றால் சர்வதேசளவிலும் இதற்கு சமமான நெருக்கடிகள் உள்ளன.

பிரித்தானியாவுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு உரையாற்ற முடியாத நிலையில் நாடு திரும்பியிருந்தார். இது மிகப் பெரிய இராஜதந்திரத் தோல்வியாகும். அத்துடன் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன. எத்தனையோ பிரச்சினைகள் மத்தியில் இதை எப்படி சமாளிக்கப்போகிறதோ தெரியவில்லை. சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு எதையும் செய்யமுடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தன் பிடியில் இருந்து விலகுவதாக இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதே ஐ.நா குழுவினது இலக்கு என்கிறது அரசு. ஆனால் அந்தச் சந்திப்பு உள்நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா என்பது அறிவிக்கப்படவில்லை. உள்நாட்டில் சந்திப்பு இடம்பெற்றால் சரத்பொன்சேகாவை அவர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுகோளாகும். இது ஆபத்து என்பது அரசுக்கு தெரியும். அதேவேளை ஐ.நா நிபுணர் குழு இலங்கைவர அனுமதிப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதோ ஆபத்தானது என்றும் அதை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர்கள் இருவர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆராய்ந்து பார்க்கப் போனால் அரசு எடுத்த முடிவை அரசுக்குள் இருப்போர் எதிர்ப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. எவ்வாறாயினும் பெரிய அரசியல் ஆதாயத்தைப் பெற முடியாது. இதுவும் ஆளும்கட்சிக்கு ஒரு தலையிடியாக அமையலாம். ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி இப்போது புதிய உற்சாகத்தில் உள்ளது. தங்களுக்குள் நிலவிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பதைக் காட்ட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் எந்தளவு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்.

இவ்வாறான போக்கு அரசை ஒரு விதத்தில் மிரளவைக்கிறது. தொடர் ஆட்சி என்று கண்ட கனவு போட்ட கணக்கெல்லாம் மறுஆய்வு செய்யும் நிலைக்கு வந்து விட்டது போல். இதற்கு வழி கோலுவது கடந்த கால நிகழ்வுகள் தான். எவ்வளவு தான் வெற்றி பெற்றாலும் மக்களிடத்தில் ஏற்படக்கூடிய வெறுப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. அது எப்போது சுனாமி போல் மேலெழும் என்பது யாருக்கும் தெரியாது. உள்ளுராட்சித் தேர்தலானது இரு தரப்புக்கும் இடையில் பெரிய சவாலாகவுள்ளது.

மீண்டும் வெற்றியை தன்பக்கம் காட்டுவது அரசின் நிலை. எப்படியாவது தலை நிமிரவேண்டும் என்பது ஐ.தே.கவின் நிலை. விரைவாகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசாங்கம் முனைவதில் இருந்து தெரிகிறது வெற்றி மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கை. துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்பது பழமொழி. கணிப்பு சரியா? பிழையா? என்பதை தேர்தல் வெளிப்படுத்தும் அத்துடன் தேர்தல் முடிவு அரசின் செல்வாக்குப் போக்கையும் தீர்மானிக்கும்.