அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் திகதியன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாக்கப்பட்டுள்ளது.


பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி 1909இல் அமெரிக்க சோஷலிச கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர்.மார்ச் 25,1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140ற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.இந் நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது.தொடர்ந்து அனைத்துலக மகளிர் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.


1913-1914 களில் முதல் உலகப்போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினர்.இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

ஐ.நாவின் பேரறிவிப்பின் பின் வந்த நாட்களில் ஐ.நா.பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

இதன் அடிப்படையில் எத்தனையோ பெண்கள் ஏதோ ஒரு வகையில் சாதனைப் பெண்களாக வர்ணிக்கப்படுகிறார்கள்.உதாரணமாக அன்னை திரேசா, இளவரசி டயானா,முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ,விண்வெளி வீராங்களை கல்பனாசாவுலா ,முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா ,அருந்ததி றோய் போன்ற இன்னும் பல பேரை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இன்றும் எமது நாட்டுப் பெண்கள் வேலை தேடிச் சென்று ஆணியோடு நாட்டுக்குத் திரும்புகிறார்கள். தேயிலைத் தோட்டத்துப் பெண்கள்; ஊர் குடிக்க தேயிலை பறிக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையை கங்காணி , பெரிய துரைமார் குடிக்கிறார்கள்.தினம் ஒரு கற்பழிப்பு , மனைவி கணவனால் தூக்கிட்டுக் கொலை ,பெற்ற மகளையே மாறுபட்டு நோக்கும் தந்தை இவ்வாறு பல வழிகளில் துவண்டு போகிறது எம் இனம். மாநாடுகளில் மேசை போட்டு கதைத்தால் மாத்திரம் போதாது.அதைத் துளியேனும் நிறைவேற்ற முற்படவேண்டும்.


பூபோல பெண்ணாம்.. பூமிக்கு உவமை பெண்ணாம்….போலி உவமைகள் வேண்டாம்.

நீலிக் கண்ணீரும் வேண்டாம். பெண்ணைப் பெண்ணாக வாழ அனுமதியுங்கள்.

என் சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!