தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்குமான மரபு ரீதியான போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனிதாபிமானப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தும் அங்கவீனமுற்றும் உள்ளனர். அத்துடன் உடமைகளையும் உறவுகளையும் இழந்து நிர்க்கதியாக நலன்புரி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்னர். இங்குள்ள மக்களை கைதிகள் போல் நடத்துவதாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான முதல் காரணமாவது சரியான முறையில் சிவில் நிர்வாகம் ஒழுங்கு படுத்தப்படவில்லை என்பதாகும். இதனால் பல பிரச்சினைகள் தலை தூக்க முற்படுகின்றன.
போரினால் பாதிப்படைந்த மக்கள் அதிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளை நோய்கள் பரவி கடும் இன்னல்களை தோற்றுவிக்கின்றன. முகாம்களில் தொற்றுநோய்களான நெருப்புக்காய்ச்சல், அம்மைநோய், டெங்கு போன்றனவும் பரவுவதற்கான அபாயமும் காணப்படுகின்றன. ஐந்து பேர் தங்கக் கூடிய கூடாரங்களில் 30 பேர் தங்கவைக்கப்படுகின்றனர். இந்த இட நெருக்கடி தான் நோய்க்கான காரணி ஆகவும் அமைகிறது. இந்த மக்களுக்கு போதியளவு சுகாதார வசதியும் வழங்கப்படவில்லை. ஆத்துடன் சுத்தமான குடி நீர் பற்றாக்குறையும் பெரிய பிரச்சினை தான். சிறிய குழந்தைகள் முதல் கர்ப்பிணிப் பெண்கள் வரை கொழுத்தும் வெயிலில் குடிநீருக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சித்தும் சரியான முறையில் இதற்கான தீர்வு காணப்படவில்லை.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் பல்வேறுபட்ட தரப்பினராலும் சேர்க்கப்பட்டு வந்தாலும் அவை உரிய முறையில் அம்மக்களை போய்ச்சேர்வதில்லை. இதற்கு காரணம் சுரண்டல்களும் நிர்வாக நடவடிக்கையில் காணப்படும் சிக்கல்களும் தான். சேர்க்கப்படும் பொருட்கள் இடைநடுவில் சில இடங்களில் இறக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச தொண்டு நிறுவனங்களும் தங்கள் பணிகளை சுதந்திரமான முறையில் முன்னெடுப்பதற்கு பல்வேறுவிதமான தடைகள் இருக்கின்றது. நிவாரண உணவுப் பொருட்கள் உரிய காலப்பகுதியில் வழங்கப்படுவதில்லை. முகாம்களில் 2 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் உள்ளனர். இவர்களில் காணப்பட்டவர்களும் அங்கவீனமுற்றவர்களும் அடங்குகிறார்கள். இவர்களுக்கான எந்த சிறப்பான வசதியும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
வயோதிபர்களும் சிறுவர்களும் உரிய பராமரிப்பு இன்றியும் போசாக்கான உணவு இன்றியும் வாடுகின்றனர் .இதுவரை 80 இற்கும் அதிகமான மரணங்கள் நலன்புரி முகாம்களில் சம்பவித்துள்ளன. அவர்களை அடக்கம் செய்வதில் கூட அரசு தற்போது சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது. பெற்றோரை இழந்த சிறுவர்களையும் முதியோர்களையும் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. பல்வேறு விசாரணைகளின் பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் மட்டும் உறவினர்களிடம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை சொந்தங்களை இழந்த பல சிறுவர்கள் முகாம்களில் உள்ளனர். தாய், தந்தை இருவரையுமே இழந்த 350 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் அங்கு உள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். இவர்களுக்கு அவர்களின் இழப்புக்களை பொறுத்து சிறு தொகைப்பணம் நிவாரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. இது கண்துடைப்பாகவே கருதப்படுகின்றது. இப்பணம் அவர்கள் இழந்த வாழ்வை மீட்டெடுக்கப்போவதில்லை. அவர்களுக்கு தேவையான கல்வி தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கவனமெடுத்த போதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. புல சிறுவர்கள் போர் அதிர்ச்சியால் உளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கான சீர்படுத்தும் உளவள நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இடைத்தங்கள் முகாம்களில் வதியும் மக்களின் துயரங்களை சனல்-4 மற்றும் ஸ்கைய் நியூஸ் செய்தி நிறுவனங்கள் வெளிக்கொண்டுவந்தன. இதில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான துஷ்பிரயோகம் தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தது. குறிப்பாக துணை ஆயுதக்குழுக்களால் சிறுவர்கள் கடத்தப்பட்டு ஆயுதப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தன. இதேவேளை இவை உண்மைக்கு புறம்பானவை என மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அகதி முகாம்களில் பணியாற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் யுனிசெவ் உம் எந்தவொரு முறைப்பாட்டையும் தமக்கு வழங்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்
முகாம்களில் உள்ள மக்களின் நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் திறந்த சிறைக்கைதிகளாகவே வாழ்கின்றனர். இவர்களை சென்று பார்ப்பதற்கு கூட உறவினர்களால் முடியாததாக உள்ளது. பணத்தைத் தவிர எந்தவொரு பொருட்களும் அவர்களுக்காக எடுத்துச் சென்று கொடுக்கமுடியாது. இதேவேளை நலன்புரி முகாமிலுள்ள பத்து வயதை அடைந்த சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டமொன்றை அரசு ஆரம்பித்துள்ளது. அதன் பின்னரே இவர்கள் சுதந்திரமான முறையில் நடமாட முடியும் என சிவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இருந்தாலுமம் இப்பணி முன்னகர்வதற்கான எந்தவித அறிகுறியும் காணப்படவில்லை. ஆனால் இந்த திட்டம் கவலை அளிப்பதாக ஆனந்த சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் எல்லோரும் தொடர்ந்தும் பிழை செய்ய மாட்டார்கள். பெற்றோர்களுக்கு இத்திட்டம் அதிருப்தியாக இருக்கும் தமிழ் சிறுவர்கள் பின்தள்ளப்படுவார்கள் அவர்கள் மற்றவர்களிடம் கையேந்துவது போலாகும் என்றும் இந்த வயதெல்லையை பதினாறாக மாற்றுமாறும் கோரியிருந்தார்.
எல்லாவற்றையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு தப்பி வந்த மக்களுக்கு அந்த உயிர் கூட இல்லாது போகுமானால் பிறகு எதற்கு போலியான மனிதாபிமானப் பணிகளும் மீள்குடியமர்த்தும் செயற்பாடுகளும். குறித்தவொரு வன்னியர் பரம்பரைNயு அழிவை எதிர்நோக்கியுள்ள வேளையில் இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடின் அவர்களின் எதிர்கால சந்ததி என்பது கேள்விக்குறிதான்….
0 comments:
Post a Comment