சஞ்சிகை ஒன்றை ஆரம்பிப்பது என்பது எங்களின் நீண்ட நாள் யோசனை. (தனிப்பட்டதும் கூட) ஆனால் நாங்கள் பதிவுலகிலும் இருப்பதால் பதிவர்களின் ஆக்கங்களை திரட்டி சஞ்சிகையாக கொண்டுவர தற்போது யோசித்து இருக்கின்றோம்.

கொழும்பில் அரையாண்டு இதழாக வெளிவரும் இரண்டு சஞ்சிகையிலும் (பல்கலை மற்றும் சட்டக்கல்லூரி நண்பர்கள்), யாழ்ப்பாணத்தில் காலாண்டு இதழாக வெளிவரும் ஒரு சஞ்சிகையிலும் எமது சிறிய பங்களிப்பு இருப்பதால்... அதனையே அனுபவமாகக் கொண்டு நாங்களாகவே ஒரு சிற்றிதழை அடுத்துவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் உருவாக்க முயற்சிக்கின்றோம்.

எடுக்கப்படும் பதிவுகள் பற்றிய அறிவிப்பு உரியவர்களுக்கு சென்றடையும். இது பற்றிய மேலதிக விடயங்களை சக பதிவர், நண்பி கிப்பூ வலைத்தளத்தில் பார்க்கவும்.

இங்கே கிளிக்குங்கள்

பதிவுலகில் காத்திரமான படைப்புக்கள் தொடர்ச்சியாக வருவதற்கு, இந்த முயற்சி துணைபுரியும் என நம்புகின்றோம்.

'MCQ" பேப்பர் செய்திருக்கிறீங்களா?
சரியான விடை தெரியாட்டி என்ன செய்வீங்க?
நாலு விரலில ஒண்டை தொட்டுட்டு விடையை கீறுவீங்க...
அல்லது இருக்கவே இருக்கு எறும்பு! விடைகளுக்கு நடுவில எறும்பை விட்டா, அது எந்த விடையில நிக்குதோ அது சரியென்பது ஆண்டாண்டு காலமாக மாணவர்கள் கைக்கொள்ளும் வழிமுறை.




உயர்தரத்தில் ஆசிரியர் ஒரு விடயம் சொன்னார், 'ஒருத்தனிட்ட 60 கேள்வியுள்ள எம்.ஸி.கியூ பேப்பரை குடுத்தா... படபடவென குத்துமதிப்பா விடையளை கீறிட்டு தருவனாம். சரி பார்த்தா... அதில குறைஞ்சது 45 சரியா இருக்குமாம். கஷ்டப்பட்டு படிச்சு, மண்டையை கிளறி விடை எழுதின ஆக்களுக்கு 30 விடை கூடச் சரிவராது."

இப்படி ஆரூடங்கள் பல இடத்தில் பலித்தும், சில இடத்தில் பொய்த்தும் போயுள்ளமை வரலாறுகள். (2000ஆம் ஆண்டு உலகம் அழியும் எண்டும் கதை வந்தது.)

அண்மையில் பரவலாகப் பேசப்படும் ஆரூடம், ஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் என்ற அக்டோபஸ் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது" என்பது.

தொட்டிக்குள் 2 சிறிய பெட்டிகள் அக்டோபஸ{க்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படும். அதனுடன் பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படும். அக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுகிறது. என்பது கணிப்பு.

இம்முறை அது கூறியவாறே கானா, அஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதிய போது ஜேர்மனிதான் வெற்றி பெறும் என அக்டோபஸ் கூறியது சரியானது. பலமிக்க செர்பியா அணியூடன் ஜேர்மனி தோற்கும் என்றது. அதுவும் சரியாக நடந்தது. இந்த நிலையில் கால் இறுதியில் ஆர்ஜன்டினாவை ஜேர்மனி வீழ்த்தும் என கணித்தது. இதுவும் சரியாக நடந்து விட்டது. தொடர்ந்து ஜேர்மனியை சரியாக கணித்து வரும் அக்டோபஸ் அரை இறுதியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் அரை இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்தது. இது ஜேர்மனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் கடந்த ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் அக்டோபஸ்ஸின் முடிவு தவறானதால் ஜேர்மனி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இப்பொழுது அக்டோபஸ் பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது.

உலகப் புகழ் 'தமிழ் இயக்குனர்" மணிரத்ணம் இயக்கிய ராவன், ராவணன் ஆகிய இரு திரைப்படங்களையும் பார்த்து விட்டேன். முதலில் பார்த்தது ராவணன். எனவே ராவன் பார்க்கும் போது பல இடங்களில் விக்ரமை கண்டு குழம்பி, பின் தெளிந்ததை நினைத்து சிரிக்க மட்டுமே முடிந்தது.

முதலில் இயக்குனர் மணிரத்ணத்திற்கு ஒரு சபாஷ்!
இந்தியாவைப் பொறுத்த மட்டில் அவரால் மட்டுமே இந்த காரியங்கள் சாதாரணமாகச் செய்ய முடியும். ஒரு படத்தை எடுத்து விட்டு ஆயிரம் மொழிகளில் 'டப்" செய்வதொண்றும் பெரிய சிரமமில்லை. ஆனால் ஒரே காட்சியை வேறு வேறு மொழிகளில், வேறு நட்சத்திரங்களுடன் அச்சுப் பிசகாமல் நேர்த்தியாக தந்திருப்பது மணிரத்ணத்தின் சாதனை.

கதையை விட்டு விடுவோம். பல பதிவர்கள் அக்கு வேறு, ஆணி வேறாக விமர்சித்து விட்டார்கள்.

விக்ரம் : தமிழ் சினிமாவில் நடிப்பு இன்னமும் செத்து விடவில்லை என்பதனை கமல் வழியில் இன்றும் நிரூபிக்கின்றார். ஐஸ்வர்யாவுடன் காதல் சலனப்படும் இடங்களிலாகட்டும், தங்கைக்கு நேர்ந்த கதியை எண்ணி கொதித்தெழும் இடத்திலாகட்டும் அல்லது அவ்வப்போது தூவப்படும் சில சீரியஸான சிரிப்பு இடங்களிலாகட்டும் தன் பாத்திரத்தை அற்புதமாகச் செதிக்கியிருக்கிறார். நடனம், சண்டை என தன் பங்கிற்கு திறமைகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். திரையில் அபிஷேக் பச்சனை விட ஒரு படி மேலாகத் தெரிவது தவிர்க்க முடியாததாகின்றது.

அபிஷேக் : விக்ரமுக்கு குறிப்பிட்ட பல விடயங்கள் ஒத்துப் போனாலும், இவரது இடது கைப் பழக்கமும் உயர்ந்த தோற்றமும் விக்ரமை பார்த்த கண்ணுக்கு கொஞ்சம் குறைவாகவே தெரிகின்றது.

ப்ரித்விராஜ் : ஹிந்திப் பதிப்பில் விக்ரம் தந்த நடிப்பை விட, தமிழில் இவர் நன்றாகவே செய்திருக்கின்றார். ஒரே நேரத்தில் விக்ரம் இரண்டு மொழிகளிலும் வௌ;வேறு பாத்திரங்களில் நடித்ததினால் தனது மேக் அப்பை சரிவர செய்ய முடியவில்லை. பல இடங்களில் கொடூரமான போலிஸ் ஆகவே தோற்றமளிக்கின்றார்;. ஆனால் ப்ரித்வி ஷேவ் செய்த முகத்துடன் பல இடங்களில் விறைப்பான போலிஸாக அசத்துகின்றார்.

ஐஸ்வர்யா : கள்வரே பாடலில் அன்று இருவர் திரைப்படத்தில் பார்த்த ஐஸ் ஆகவே தோன்றுகிறார். இரு மொழிகளிலும் பாகுபாடில்லாத நடிப்பு. படம் முழுவதிலும் மழையிலேயே நனைகின்றார். ஐஸ் கரைந்து விடாதா? அவருக்கு என்றுமே நீலக் கண்கள் பலம் தான்.

கார்த்திக் - கோவிந்தா : இருவரையும் எப்படி கன கச்சிதமாக மணிரத்னம் தேர்ந்தெடுத்தார். உருவ அமைப்பைத் தவிர நடிப்பில் வித்தியாசமே இல்லை.

ப்ரியாமணி : தமிழ் - ஹிந்தியில் குறிப்பறிந்து நடிப்பைக் காட்டியிருக்கிறார். பெரிதாக ஒன்றும் கவரவில்லை.

பிரபுவை போல ஒரு பருமனானவரையே அண்ணனாக ஹிந்தியிலும் எதிர்பார்த்தேன். அவர் அபிஷேக்கை விட சின்னவர் போல் தோற்றமளிக்கின்றார்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய விடயம் ஒளிப்பதிவு மற்றும் ஆடையலங்காரம், கலை.
காட்சிக்கு காட்சி மலைக்க வைக்கிறார்கள். இசை என்றுமே பலம். அதற்காக நன்றாக பிடித்த காட்டுச் சிறுக்கியை கண்ட துண்டமாக வெட்டுவதா? உசிரே போகுதே போற நேரம் தியேட்டரை விட்டு போகலாம் போலயிருக்கு.

மொத்தத்தில் மணிரத்ணம், நவீன ராமாயணத்தை எங்களுக்கு தந்தாலும். வால்மீகி, கம்பர் கூறியதைத் தானே வழிமொழிந்திருக்கின்றார்.

கடந்த சில காலங்களாக இலங்கையை உழுக்கும் ‘ஜி.எஸ்.பி’ என்ற சொல்லிற்கு முடிவும் கிடைக்கப் போகின்றது போல் தெரிகின்றது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றே தீருவது என கங்கணம் கட்டி களத்தில் இறங்கிய இலங்கை அரசாங்கம் ‘சீ சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, “ஜி.எஸ்.பி யை மறந்து தன்னம்பிக்கையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்” என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றது.

இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தில் இலங்கையைத் தள்ளிவிட்டு விட்டு கை நழுவிப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. இந்த சலுகையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த நிலையிலே, பதில் அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்று ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இந்த வரிச் சலுகையானது இல்லாது போனால் ஏற்றுமதியில் 12 சதவீதத்தை இழக்க நேரிடும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்காக அந்தக் காலப்பகுதிக்குள் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய 15 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் அறிவித்திருந்தது. மிகவும் கடுமையான நிபந்தனைகள் போல் அதை அரசு கண்டு கொள்ளவே இல்லை. அதற்கு ஒரு பதில் கூட அனுப்பவில்லை. இதிலிருந்து விளங்கிக் கொள்வது, அரசு இலங்கையின் இறைமையை எந்தளவுக்குக் கட்டிக் காக்கின்றது என்பது. ஜூலை 1ஆம் திகதிக்குள் தம்மாள் விதித்த நிபந்தனைக்கு உடன்படுகிறதா இல்லையா என்ற அறிவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எவ்வளவோ முயற்சித்தது. பல வலியுறுத்தல்களையும் முன்வைத்தது. இலங்கை அரசு அது தொடர்பாக மௌனத்தை மட்டுமே பதிலாக வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தனது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியிட்டது. 2005ல் சுனாமி ஏற்படுத்திய அழிவைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக இந்த சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருந்தது. உலகில மொத்தமாக 14 நாடுகள் இச் சலுகையை அனுபவிக்கின்றன. அதிலும் ஆசியாவில் இச்சலுகையைப் பெறும் ஒரே நாடு இலங்கை தான். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7200 வகையான பொருட்களை எந்த விதமான சுங்கத் தீர்வையும் இன்றி ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலமாக வருடாந்தம் இலங்கை அரசு 150 மில்லியன் ரூபாவை வருவாயாகப் பெறுகிறது.

இலங்கையில் கடந்த 14 மாதங்களுக்குள் 40 ஆயிரம் வேலையாட்கள் தொழில் இருந்து விலக்கப்பட்டுள்ளதுடன் இனி வரும் காலங்களில் ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டதன் விளைவாக வேலையிழப்போர் தொகை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட பொருளாதாரத்திலும் பாரிய தாக்கங்கள் மறைமுகமாக ஏற்படவாய்ப்புள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினால் குறைந்த விலையில் ஆடைகளை ஏற்றுமதி செய்யக் கூடியதாக இருந்ததால் ஏனைய உலக நாடுகளுடன் போட்டி போட முடிந்தது. இனி அந்தக் கதைக்கு இடமேயில்லை என்றாகிவிட்டது. ஐரோப்பிய சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டி போட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதோடு இலங்கையில் உள்நாட்டு உற்பத்திஇ ஏற்றுமதி வருவாய்இ அந்நிய செலாவாணி போன்றவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புள்ளது.



ஜி.எஸ்.பி பிளஸ் மூலம் எவ்வளவோ பாதிப்புக்கள் நாட்டை தாக்க காத்திருந்தும் இலங்கை அரசு ஆட்டம் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன? இதன் பின்னால் உள்ள சூழ்ச்சிகள் யாருக்கும் விளங்குவதாக இல்லை. ஆனாலும் இழப்புக்களைச் சந்திக்க அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக் குறிதான். “150 மில்லியன் டொலருக்காக நாட்டை அடகு வைக்க முடியாது என்கிறார் ஐனாதிபதி”. நடைமுறையில் இலங்கை அரசைப் பொறுத்தவரை இதை எட்டாக் கனியாகவே கருதி இவ்வாறு அசட்டையீனமாக இருப்பது போல் வெளிக்காட்டிக் கொள்கிறது. ஆனால் இச் சலுகையை பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை நடாத்தியது, பிரதிநிதிகளை அனுப்பியது. இதெல்லாம் சரிவராது என்று தெரிய வந்ததுடன் தனது பாதையை மாற்றி ‘ஐரோப்பிய ஒன்றியம் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது’ என கருத்து தெரிவிக்கிறது. கடந்த சில வருடங்களாக “சர்வதேச சமூகத்தினருக்கு உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமையில்லை” என இலங்கை அரசாங்கம் சொல்வது கேட்டு புளித்துவிட்டது.

சர்வதேசம் எத்தகைய ஆலோசனைகள் முன்மாதிரிகளை முன் வைத்தாலும் உடனே அது இலங்கை அரசுக்குரிய இறைமையை மீறுவதாகவும் உதாசீனப்படுத்துவதாகவும் இருக்கும் செயல் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த நிபந்தனைகள் எதுவும் வர்த்தக செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை என்று காரணம் காட்டி தட்டிக் கழிக்கவே முனைந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் பற்றி திருப்தியளிக்கக் கூடிய அறிக்கையை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறையாக இருந்தது. இது இலங்கை அரசுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்று. அதனால் தான் முன்கூட்டியே ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய தவறான கருத்துக்களை வெளியிடத் தயாராகியது.



ஜி.எஸ்.பி பிளஸ் இற்காக இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் அடி பணியப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான உறவு இந்தச் செயற்பாடோடு முடிந்துவிடப் போவதுமில்லை. இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு முறையிலும் விரிசல் ஏற்படுமென கருதப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் கூட பல நிபந்தனைகளுக்கு உட்பட்டே இலங்கை அரசு ஆறு கட்டங்களாக கடன்பெறத் தயாராகியுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறான தன்மானப் பிரச்சினையால் மற்றைய உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் கூட விரிசல், கசப்பு ஏற்படப்போகும் நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.

இன்று தன்மானத்தை அடகு வைக்கத் தயாராக இல்லாத இலங்கை அரசாங்கம் இனி வருங்காலங்களில் உலகளாவிய ரீதியில் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் காலமும் வெகுதொலைவில் இல்லை. காரணம் யுத்த வெற்றிக்கு பின்னணியில் செயற்பட்ட நாடுகள் தங்கள் வாய்களை திறக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு பதிலளிக்கும் கட்டாயமும் இலங்கைக்கு உண்டு. யுத்தத்தினை சுலபமாக மாற்று வழியில் கையாளத் தெரிந்த இலங்கைக்கு ஜி.எஸ்.பி யையோ, மனித உரிமைகளுக்கான நிபுணர் குழுவையோ சரியாக கையாளத் தெரியாமல் போனது எவ்வாறு? சர்வதேச அமைப்புக்கள் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகள் அல்ல அவர்களுக்கு ஆதாரமும் வேண்டும் என்பதை இலங்கை நன்றாகவே உணர்ந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 20 திகதி அகதிகள் தினமாக நினைவு கோரப்படுகிறது. நேற்று முன்தினம் அது உலகளாவிய ரீதியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பற்றிய உலகளாவிய கண்ணோட்டம் பலவிதமாகவுள்ளது. “அகதி என்றால் என்ன?” எனக் கேட்கும் பிள்ளையும் உலகின் இன்னொரு பாகத்தில் இருப்பதை தவிர்க்க முடியாது. அகதிகளுக்காக நாம் செய்ய நினைப்பவையும் செய்தவையும் என்ன? நாங்கள் அகதிகளாகிய போது எங்களுக்கு கிடைத்தது என்ன? பல்வேறு விதமான எண்ண ஓட்டங்கள் மனதில் அகதிகள் பற்றி ஓடிக்கொண்டேயிருக்கின்றது.



2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் சிறப்புத் தீர்மானம் ஒன்றின் படி அகதிகளுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந் நாளின் முக்கிய நோக்கம் பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி இன்னல் பட்டு உடமைகள், உறவுகளை இழந்து உள்நாட்டிலும் பிற நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு சூட்டப்பட்ட பெயரான அகதிகள் எனும் பட்டத்தையும் அதன் வலிகளையும் உலக மக்களுக்க உணரவைப்பது தான்.

கடந்து சென்ற காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு போர்களால், அரசியல் சமூகச் சூழல்களால், அகதிகளாக அல்லலுறும் மக்களை நினைவு கூரும் வகையில் பல்வேறுபட்ட நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், நினைவஞ்சலிகள் போன்றன இடம்பெற்றன. இவற்றுக்கெல்லாம் தலைமை தாங்குவது UNHCR.


1951ஆம் ஆண்டின் அகதிகள் நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் மேல் குறிப்பிட்ட வரைவிலக்கணம் ஒன்றைச் செய்தது.

அகதி என்ற கருத்து சொந்த நாட்டில் இடம்பெறும் போர் இவன்முறை, அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தன்னை அகதியாக ஏற்கும் படி விண்ணப்பம் கோரும் ஒருவர் அகதியாக ஏற்கத்தகுதியுடையவராகிறார். 2006ம் ஆண்டு அகதிகளின் எண்ணிக்கை 8.4 மில்லியன். ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு, உலகின் மொத்த அகதிகள் தொகை 12 019 700 என கணக்கிட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் வரையறுத்துள்ளபடி அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு
  • அகதிகள் தாமக சொந்த நாட்டுக்கு திரும்புதல்
  • குடியேறிய நாட்டிலேயே கலந்து விடுதல்.

போர்க் குற்றவாளிகள் ஒரு போதும் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.

விளக்கம் முடிந்து விட்டது. இனி நடைமுறைக்கு வருவோம். அதுவும் இலங்கைக்குள் வருவோம்…. அகதிகள் தினம் என்ன மே 18ஐ நினைத்தாலே போதும். பிரபல புள்ளிகள் கடந்த வாரத்துக்குள் இலங்கைக்கு வந்து போயுள்ளார்கள். இலங்கையில் எவ்வளவு பேர் அகதிகளாகியுள்ளனர் என்ற சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இங்க இருக்கிற ஆட்;களை விட கூடவாகத்தான் இருக்கும்.

தினங்களைப் பிரகடனப்படுத்துவதில் பிரயோசனம் இல்லை. அந்த நாளுக்கான கருப்பொருளுக்கு உயிர் கொடுப்பதில் தான் இருக்கிறது அதன் தார்ப்பரியம். அதைத்தான் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்ப்பாட்டங்களும் மேடைப்பேச்சுக்களும் செய்யப் போவது ஒன்றும் இல்லை.

அடுத்தகட்ட நடவடிக்கையைத் தான் எப்போதும் சிந்திக்க வேண்டும். அங்கு தான் தீர்வு கிட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஓலமிட்டுக் கொண்டிருப்பதில் கிடைக்கக் கூடியதும் கைவிட்டுச் செல்லலாம். எனவே சிந்தித்து செயற்படுங்கள்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் சர்சையை உருவாக்கியுள்ளது. அவரின் விஜயத்தின் பூகோள அரசியலை தொடர்ந்து ஆசியப் பிராந்திய வல்லரசுகள் இரண்டினதும் பிடிக்குள் இலங்கை தனது எதிர்காலத்தை தொலைத்து விடப்போகிறது என்ற கவலை அதிகமாக தென்னிலங்கை மக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.

சீனாவுக்கு இணையாக வர்த்தக பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த முனைவது சீனாவின் தொழிலாளர்களை போல இந்தியாவின் தொழிலாளர்களையும் இலங்கைக்குள் திறந்துவிடும் வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அச்சம் உருவெடுக்கிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா சிந்தித்து செயல்படும் என எதிர்பார்த்தோம் ஆனால் நடந்தது தலைமாறு தான். ஆனால் சீனாவுக்கு இணையாக பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையை தன் பக்கம் இழுக்க இந்தியாவினுடைய கடைசி முயற்சி தான் ஜனாதிபதியின் விஜயம் போல் தென்படுகிறது.

இந்த வலைக்குள் இலங்கை சென்றுவிடக்கூடாது என்ற அவதானிப்பில் சீனா இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஸ இலங்கைக்கு திரும்பிய போது சீனா அரச சபையில் துணைப்பிரதமர் சாங் டிஜிங் அதிக கடன் உதவிகளுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சீனாவின் உதவிகள் தென்னிலங்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் அது தற்போது வடக்கிலும் தனது நிலையை விரிவுபடுத்தி வருகின்றது.இந்த நிலையில் இந்தியா தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றது.இந்தியாவின் உதவிகள் வடக்கையே பிரதான குறியாகக் கொண்டுள்ளது.அதிலும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டவை புகையிரத அபிவிருத்திஇ தொழிற்சாலை நிறுவுதல், விவசாய ஆராய்சி நிலையம் நிறுவுதல் போன்ற பல திட்டங்கள்.

அம்பாந்தோட்டையில் நடைபெறும் சீனாவின் துறைமுகப் பணிகளை அவதானிக்கும் நோக்கத்துடன் அங்கு ஒரு தூதரகத்தை அமைக்கும் நோக்கத்தை இந்தியா கொண்டுள்ளது. ஜனாதிபதி இந்தியா செல்ல அமெரிக்கத் தூதுவர் இரு நாள் வி;ஜயத்தை யாழ்ப்பாணம் மேற்கொண்டுள்ளார். இந்த மூன்று நிகழ்வுகளும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கை ஆகும்.

அதாவது இந்து சமுத்திரத்தைக் கைப்பற்றப் போகும் பலம் யாருடைய கைகளில் உள்ளது என்பது தான் போட்டியாகிறது.இந்து சமுத்திர அதிகாரத்தில் வெற்றிடம் இருப்பதாகவும் அதை நிரப்ப சீனா முயற்சிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சீனாவுடன் இந்தியா தாக்குப்பிடிக்கும் பலம் உள்ளதா என்பது தான் கேள்வி? சீனாவின் கடற்படை பலம் ஆயுதபலம் மித மிச்சமாகவே இருக்கிறது யாவருக்கும் தெரிந்ததே.


இந்த நாடுகளின் பாதுகாப்பு ஒதுக்கீட்டைப் பார்த்தால் சீனா 61 பில்லியன் டொலர் இந்தியா 25 பில்லியன் டொலர் அமெரிக்கா 607 பில்லியன் டொலர் இந்தத் தரவுகள் வெளிப்படுத்துவது புரிந்திருக்கும். ஆசியப் பிராந்தியத்தில் உள்ள வறிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அதனை மேற்கொள்ள பிராந்திய வல்லரசுகள் தமக்குள் பனிப்போரை ஆரம்பித்துள்ளன.இதிலும் சீனா முந்தி விட்டது.சார்க் நாடுகளுடன் பர்மாவுடன் சீனா தன்கான சுற்றுவளையத்தை உருவாக்கி விட்டது.இந்த நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.

ஆனாலும் தலைமன்னார் பகுதி ஊடாக இந்தியா வரக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது. அமெரிக்கா ஈரான் மீது கடுமையான தடைகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத்திரட்டிக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை ரஸ்யாவும் சீனாவும் எதிர்க்கின்றன.

ரஸ்யாவின் இந்த நகர்வுக்குப் பின்னாலும் கொரியாவின் வளைகுடாவில் தோற்றம் பெற்றுள்ள நடவடிக்கைகளுக்கு பின்னால் சீனா உள்ளதாக நம்பப்படுகிறது. சீனாவை முடக்கவே அமெரிக்கா தனது காய்களை நகர்த்தி வருகிறது.

இவ்வாறான ஒரு சிக்கலுக்குள் தான் இலங்கை தன்னைத் தொலைத்து விட்டு திகைக்கப் போகிறது என வெளிப்படையாகவே தெரியவருகிறது.ஏனென்றால் இறுதியாக நடைபெற்ற 14வது மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் மேற் சொல்லப்பட்டவைக்கு சார்பாகவே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதிக ஆட்டம் காணப்போவது தென்னிலங்கை தான்.

எனக்கு தமிழ் தந்த பாடம், “உப்புத் திண்டவன் தண்ணி குடிக்கத்தான் வேணும்”.




உலகப்பிரசித்தி பெற்ற ஓவியர் பிக்காஸோ உட்பட ஐந்து பிரபல ஓவியர்களின் ஓவியங்களைத் திருடியவரை தேடி பிரான்ஸ் பொலிஸார் வலை விரித்துள்ளனர். இந்த ஓவியங்கள் பிரான்ஸின் நவீன ஓவிய நூதனசாலையின் வைக்கப்பட்டிருந்தன. கடந்த சில வாரங்களாக நூதனசாலையின் விழிப்புமணி சரியாகச் செயற்படவில்லை. இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முகமூடியணிந்த நபரொருவர் உடைந்திருந்த நூதனசாலை ஜன்னலூடாக புகுந்து உட்சென்றிருப்பது கண்காணிப்பு கமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.


நூதனசாலை நன்கு அறிந்த ஒருவரோ அல்லது குழுவோ இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமென பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடிச்செல்லப்பட்ட ஒவ்வொரு ஓவியங்களும் தலா 123 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடையன. இந்த ஓவியங்களின் பெறுமதி குறித்து நன்கு அறிந்த திருடர்கள் அதனை பகிரங்க சந்தையில் விற்கமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பொலிஸார் கொள்ளையர்களை முழுவீச்சாக தேடிவருகின்றனர். பிக்காசோவினால் 1911ஆம் ஆண்டு வரையப்பட்ட ஓவியமும், மரிஸ்ஸேயினால் 1906ஆம் ஆண்டு வரையப்பட்ட ஓவியமும் மற்றும் பிரபல ஓவியர்கள் மூவரது புகழ்பெற்ற பண்டைய ஓவியங்களே திருடப்பட்டுள்ளன.


கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து எச்சரிக்கை மணி பழுதடைந்துள்ளதாக பாரிஸ் நகர மேஜர் பேனார்ட் டிலனோ தெரிவித்துள்ளார். அது திருத்தப்பட்டு வரும்வரை காத்திருந்த காலப்பகுதியேலே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிஸின் பிரபஞ்ச கலாச்சார நகரத்துக்கு இடம்பெற்ற பாரிய திருஷ்டியாக இந்தச் சம்பவம் இருக்குமென குறிப்பிடப்படுகின்றது. திருடன் அதிகாலை 4 மணியளவில் நூதனசாலைக்குள் நுழைந்து 15 நிமிடங்களுக்குள் இந்த ஐந்து ஓவியங்களையும் திருடிச்சென்றுள்ளான். மூன்று காவலாளிகள் அந்தச் சமயம் கடமையில் இருந்தபோதும் காலை 7 மணியளவிலேயே இக்கொள்ளைச் சம்பவம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நூதனசாலையானது ஈபிள் கோபுரத்திலிருந்து ஆரம்பிக்கும் செய்ன் நதிக்கு குறுக்காக அமைந்துள்ளது.

Followers

About this blog

Labels