கடந்த சில காலங்களாக இலங்கையை உழுக்கும் ‘ஜி.எஸ்.பி’ என்ற சொல்லிற்கு முடிவும் கிடைக்கப் போகின்றது போல் தெரிகின்றது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றே தீருவது என கங்கணம் கட்டி களத்தில் இறங்கிய இலங்கை அரசாங்கம் ‘சீ சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, “ஜி.எஸ்.பி யை மறந்து தன்னம்பிக்கையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்” என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றது.
இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தில் இலங்கையைத் தள்ளிவிட்டு விட்டு கை நழுவிப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. இந்த சலுகையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த நிலையிலே, பதில் அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்று ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இந்த வரிச் சலுகையானது இல்லாது போனால் ஏற்றுமதியில் 12 சதவீதத்தை இழக்க நேரிடும்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்காக அந்தக் காலப்பகுதிக்குள் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய 15 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் அறிவித்திருந்தது. மிகவும் கடுமையான நிபந்தனைகள் போல் அதை அரசு கண்டு கொள்ளவே இல்லை. அதற்கு ஒரு பதில் கூட அனுப்பவில்லை. இதிலிருந்து விளங்கிக் கொள்வது, அரசு இலங்கையின் இறைமையை எந்தளவுக்குக் கட்டிக் காக்கின்றது என்பது. ஜூலை 1ஆம் திகதிக்குள் தம்மாள் விதித்த நிபந்தனைக்கு உடன்படுகிறதா இல்லையா என்ற அறிவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எவ்வளவோ முயற்சித்தது. பல வலியுறுத்தல்களையும் முன்வைத்தது. இலங்கை அரசு அது தொடர்பாக மௌனத்தை மட்டுமே பதிலாக வைத்திருந்தது.
இலங்கையில் கடந்த 14 மாதங்களுக்குள் 40 ஆயிரம் வேலையாட்கள் தொழில் இருந்து விலக்கப்பட்டுள்ளதுடன் இனி வரும் காலங்களில் ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டதன் விளைவாக வேலையிழப்போர் தொகை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட பொருளாதாரத்திலும் பாரிய தாக்கங்கள் மறைமுகமாக ஏற்படவாய்ப்புள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினால் குறைந்த விலையில் ஆடைகளை ஏற்றுமதி செய்யக் கூடியதாக இருந்ததால் ஏனைய உலக நாடுகளுடன் போட்டி போட முடிந்தது. இனி அந்தக் கதைக்கு இடமேயில்லை என்றாகிவிட்டது. ஐரோப்பிய சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டி போட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதோடு இலங்கையில் உள்நாட்டு உற்பத்திஇ ஏற்றுமதி வருவாய்இ அந்நிய செலாவாணி போன்றவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் மூலம் எவ்வளவோ பாதிப்புக்கள் நாட்டை தாக்க காத்திருந்தும் இலங்கை அரசு ஆட்டம் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன? இதன் பின்னால் உள்ள சூழ்ச்சிகள் யாருக்கும் விளங்குவதாக இல்லை. ஆனாலும் இழப்புக்களைச் சந்திக்க அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக் குறிதான். “150 மில்லியன் டொலருக்காக நாட்டை அடகு வைக்க முடியாது என்கிறார் ஐனாதிபதி”. நடைமுறையில் இலங்கை அரசைப் பொறுத்தவரை இதை எட்டாக் கனியாகவே கருதி இவ்வாறு அசட்டையீனமாக இருப்பது போல் வெளிக்காட்டிக் கொள்கிறது. ஆனால் இச் சலுகையை பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை நடாத்தியது, பிரதிநிதிகளை அனுப்பியது. இதெல்லாம் சரிவராது என்று தெரிய வந்ததுடன் தனது பாதையை மாற்றி ‘ஐரோப்பிய ஒன்றியம் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது’ என கருத்து தெரிவிக்கிறது. கடந்த சில வருடங்களாக “சர்வதேச சமூகத்தினருக்கு உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமையில்லை” என இலங்கை அரசாங்கம் சொல்வது கேட்டு புளித்துவிட்டது.
சர்வதேசம் எத்தகைய ஆலோசனைகள் முன்மாதிரிகளை முன் வைத்தாலும் உடனே அது இலங்கை அரசுக்குரிய இறைமையை மீறுவதாகவும் உதாசீனப்படுத்துவதாகவும் இருக்கும் செயல் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த நிபந்தனைகள் எதுவும் வர்த்தக செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை என்று காரணம் காட்டி தட்டிக் கழிக்கவே முனைந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் பற்றி திருப்தியளிக்கக் கூடிய அறிக்கையை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறையாக இருந்தது. இது இலங்கை அரசுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்று. அதனால் தான் முன்கூட்டியே ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய தவறான கருத்துக்களை வெளியிடத் தயாராகியது.
ஜி.எஸ்.பி பிளஸ் இற்காக இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் அடி பணியப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான உறவு இந்தச் செயற்பாடோடு முடிந்துவிடப் போவதுமில்லை. இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு முறையிலும் விரிசல் ஏற்படுமென கருதப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் கூட பல நிபந்தனைகளுக்கு உட்பட்டே இலங்கை அரசு ஆறு கட்டங்களாக கடன்பெறத் தயாராகியுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறான தன்மானப் பிரச்சினையால் மற்றைய உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் கூட விரிசல், கசப்பு ஏற்படப்போகும் நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.
இன்று தன்மானத்தை அடகு வைக்கத் தயாராக இல்லாத இலங்கை அரசாங்கம் இனி வருங்காலங்களில் உலகளாவிய ரீதியில் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் காலமும் வெகுதொலைவில் இல்லை. காரணம் யுத்த வெற்றிக்கு பின்னணியில் செயற்பட்ட நாடுகள் தங்கள் வாய்களை திறக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு பதிலளிக்கும் கட்டாயமும் இலங்கைக்கு உண்டு. யுத்தத்தினை சுலபமாக மாற்று வழியில் கையாளத் தெரிந்த இலங்கைக்கு ஜி.எஸ்.பி யையோ, மனித உரிமைகளுக்கான நிபுணர் குழுவையோ சரியாக கையாளத் தெரியாமல் போனது எவ்வாறு? சர்வதேச அமைப்புக்கள் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகள் அல்ல அவர்களுக்கு ஆதாரமும் வேண்டும் என்பதை இலங்கை நன்றாகவே உணர்ந்துள்ளது.
1 comments:
எது எப்படியோ எல்லா கஷ்டமும் இறுதியில் மக்கள் தலையில்தான் வந்து விடியப் போகிறது விலைவாசி உயர்வாக
Post a Comment