உலகப் புகழ் 'தமிழ் இயக்குனர்" மணிரத்ணம் இயக்கிய ராவன், ராவணன் ஆகிய இரு திரைப்படங்களையும் பார்த்து விட்டேன். முதலில் பார்த்தது ராவணன். எனவே ராவன் பார்க்கும் போது பல இடங்களில் விக்ரமை கண்டு குழம்பி, பின் தெளிந்ததை நினைத்து சிரிக்க மட்டுமே முடிந்தது.
முதலில் இயக்குனர் மணிரத்ணத்திற்கு ஒரு சபாஷ்!
இந்தியாவைப் பொறுத்த மட்டில் அவரால் மட்டுமே இந்த காரியங்கள் சாதாரணமாகச் செய்ய முடியும். ஒரு படத்தை எடுத்து விட்டு ஆயிரம் மொழிகளில் 'டப்" செய்வதொண்றும் பெரிய சிரமமில்லை. ஆனால் ஒரே காட்சியை வேறு வேறு மொழிகளில், வேறு நட்சத்திரங்களுடன் அச்சுப் பிசகாமல் நேர்த்தியாக தந்திருப்பது மணிரத்ணத்தின் சாதனை.
கதையை விட்டு விடுவோம். பல பதிவர்கள் அக்கு வேறு, ஆணி வேறாக விமர்சித்து விட்டார்கள்.
விக்ரம் : தமிழ் சினிமாவில் நடிப்பு இன்னமும் செத்து விடவில்லை என்பதனை கமல் வழியில் இன்றும் நிரூபிக்கின்றார். ஐஸ்வர்யாவுடன் காதல் சலனப்படும் இடங்களிலாகட்டும், தங்கைக்கு நேர்ந்த கதியை எண்ணி கொதித்தெழும் இடத்திலாகட்டும் அல்லது அவ்வப்போது தூவப்படும் சில சீரியஸான சிரிப்பு இடங்களிலாகட்டும் தன் பாத்திரத்தை அற்புதமாகச் செதிக்கியிருக்கிறார். நடனம், சண்டை என தன் பங்கிற்கு திறமைகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். திரையில் அபிஷேக் பச்சனை விட ஒரு படி மேலாகத் தெரிவது தவிர்க்க முடியாததாகின்றது.
அபிஷேக் : விக்ரமுக்கு குறிப்பிட்ட பல விடயங்கள் ஒத்துப் போனாலும், இவரது இடது கைப் பழக்கமும் உயர்ந்த தோற்றமும் விக்ரமை பார்த்த கண்ணுக்கு கொஞ்சம் குறைவாகவே தெரிகின்றது.
ப்ரித்விராஜ் : ஹிந்திப் பதிப்பில் விக்ரம் தந்த நடிப்பை விட, தமிழில் இவர் நன்றாகவே செய்திருக்கின்றார். ஒரே நேரத்தில் விக்ரம் இரண்டு மொழிகளிலும் வௌ;வேறு பாத்திரங்களில் நடித்ததினால் தனது மேக் அப்பை சரிவர செய்ய முடியவில்லை. பல இடங்களில் கொடூரமான போலிஸ் ஆகவே தோற்றமளிக்கின்றார்;. ஆனால் ப்ரித்வி ஷேவ் செய்த முகத்துடன் பல இடங்களில் விறைப்பான போலிஸாக அசத்துகின்றார்.
ஐஸ்வர்யா : கள்வரே பாடலில் அன்று இருவர் திரைப்படத்தில் பார்த்த ஐஸ் ஆகவே தோன்றுகிறார். இரு மொழிகளிலும் பாகுபாடில்லாத நடிப்பு. படம் முழுவதிலும் மழையிலேயே நனைகின்றார். ஐஸ் கரைந்து விடாதா? அவருக்கு என்றுமே நீலக் கண்கள் பலம் தான்.
கார்த்திக் - கோவிந்தா : இருவரையும் எப்படி கன கச்சிதமாக மணிரத்னம் தேர்ந்தெடுத்தார். உருவ அமைப்பைத் தவிர நடிப்பில் வித்தியாசமே இல்லை.
ப்ரியாமணி : தமிழ் - ஹிந்தியில் குறிப்பறிந்து நடிப்பைக் காட்டியிருக்கிறார். பெரிதாக ஒன்றும் கவரவில்லை.
பிரபுவை போல ஒரு பருமனானவரையே அண்ணனாக ஹிந்தியிலும் எதிர்பார்த்தேன். அவர் அபிஷேக்கை விட சின்னவர் போல் தோற்றமளிக்கின்றார்.
படத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய விடயம் ஒளிப்பதிவு மற்றும் ஆடையலங்காரம், கலை.
காட்சிக்கு காட்சி மலைக்க வைக்கிறார்கள். இசை என்றுமே பலம். அதற்காக நன்றாக பிடித்த காட்டுச் சிறுக்கியை கண்ட துண்டமாக வெட்டுவதா? உசிரே போகுதே போற நேரம் தியேட்டரை விட்டு போகலாம் போலயிருக்கு.
மொத்தத்தில் மணிரத்ணம், நவீன ராமாயணத்தை எங்களுக்கு தந்தாலும். வால்மீகி, கம்பர் கூறியதைத் தானே வழிமொழிந்திருக்கின்றார்.
3 comments:
படம் பார்க்கிற அளவுக்கு வளந்திட்டீன்கள்!
/////மொத்தத்தில் மணிரத்ணம், நவீன ராமாயணத்தை எங்களுக்கு தந்தாலும். வால்மீகி, கம்பர் கூறியதைத் தானே வழிமொழிந்திருக்கின்றார்.////
??????
@ மருதமூரான். said...//
இராவணனின் நல்ல குணங்களை மறைத்து அவனை ஒரு அரக்கனாக காட்டி காவியம் படைத்த வால்மீகி, இறுதியில் அவனை அழித்தார்.
காவிய ராவணனை வில்லனாக பார்த்த மனது, ராவணன் 'வீரா' வை ஹீரோவாக பார்க்கிறது. ஆனால் முடிவும் இராமயணம் போலவே!
Post a Comment