கடந்த ஜனவரி 6, 7, 8, 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்க மண்டபம், வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிஸன் (இறுதி நாள்) ஆகியவற்றில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது அனைவரும் அறிந்த விடயம் ஒன்று தான். ஒவ்வொரு நாளும் பல்வேறு அரங்குகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. அதில் 7ஆம் திகதியன்று வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் மங்கள நாயகியம்மாள் அரங்கில் பெண் எழுத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

முதலாவதாக பெண் எழுத்து எனப் பார்க்கும் போது அது சிந்தனையின் அடிப்படையிலேயே உருவானது என உற்று நோக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதாவது ஆண், பெண் என்ற பால் அடிப்படையிலேயே உருவானது எனலாம். பெண் எழுத்துக்கு தனி பண்பு
உண்டு. பெண் எழுத்தை ஏன் தேடுகிறோம் என்றால் பெண்ணின் மொழி வித்தியாசம்.

அடுத்ததாக ஈழத்தில் பெண்களின் இலக்கியம் என தனித்து இனம்காணக்கூடிய இலக்கியம் உள்ளது. நாட்டார் இலக்கியம், பெண்களின் கதைகள் தொகுப்பு, எழுத்து இலக்கியம், வாய்மொழி இலக்கியம் என பலவகை உள்ளது. பெண் எழுத்து, பெண் எழுத்தின் பண்பு, ஈழத்தில் பெண்களின் இலக்கியம் போன்ற இம் மூன்றின் அடிப்படையிலேயே பெண் எழுத்து அமைகிறது.

அடுத்ததாக பெண்களின் சஞ்சிகைகள் தலைப்பில் தேவகௌரி சுரேந்திரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெண்களின் எழுத்தை அனைவருக்குமாக கொண்டு வரும் சஞ்சிகையின் தேவைப்பாட்டை வலியுறுத்தினார். மங்கள நாயகியம்மாள் - நாம்யார்க்கும் குடியல்லோம் என்ற சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். அந்த சஞ்சிகையானது சீதனக் கொடுமை, தீண்டாமை, போன்றனவுடன் ஸ்திரி பக்கம் பெண்கள் பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் தேவைகளை உள்ளடக்கிய சஞ்சிகைகள் வெளிவரவில்லை. இந்தியாவில் வெளிவரும் அவள், விகடன் அமோக விற்பனையாகிறது. இலங்கையில் பிரதேச ரீதியாக பெண்கள் சஞ்சிகைகள் வெளிவருகின்றன.

ஈரானிய பத்திரிகையாளர் ஒருவர் பெண்கள் சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். பெண் நிலைவாதி தனக்கான சுதந்திரத்தை முன்னிலைப்படுத்துவதற்காக இல்லை. அவர்கள் தனக்கான நிலையில் உள்ளதை வெளிப்படுத்த முனைகிறார்கள் என தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

1928ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஸ்திரிகள் பக்கம், பெண்கள் பக்கம் என வெளிவந்தன. ஏன் இப்போது அவ்வாறான பக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை என கேள்வி எழுப்பினார். தற்போதைய சஞ்சிகைகளில் ஆடை, அழகு, சமையல் போன்றவையை வெளிவருகின்றன. முதலாளித்துவ அடிப்படையிலேயே விற்பனை நடைபெறுகிறது. அதாவது புத்தக விற்பனைக்காக பெண்களின் படங்களை அட்டைகளில் பயன்படுத்துகிறார்கள். இந்த நடைமுறை சரியா?

இணையத்தில் பெண்களின் எழுத்துக்களை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது.

பெண்களின் சஞ்சிகைகள்

நிவேதினி – கொழும்பு – 1994
பெண் - மட்டக்களப்பு – 1995
பெண்குரல் - கொழும்பு – 1980
நங்கை – யாழ் - 1990
சொல் - கொழும்பு
ப+ங்காவனம் - கொழும்பு

இவ்வாறான சஞ்சிகைகள் பெண்களின் எழுத்துக்கு களம் அமைத்தன. பெண்ணியம் தொடர்பான பிரச்சினைகளை சமூகத்திற்கு சொல்லவே சஞ்சிகைகள் வெளிவருகின்றன. ஆனால் அவை எந்தளவுக்கு வெற்றியீட்டியுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.

பெண்கள் தங்களுடைய எழுத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நிச்சயம் ஒரு சஞ்சிகை வேண்டும். காரணம் பொது ஊடகங்கள் பெண்கள் எழுத்தைப் புறக்கணிக்குமாக இருப்பின் தங்களை நிலை நிறுத்த பெண்கள் சஞ்சிகைகள் கட்டாய தேவையாகும் என கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நாட்டிலுள்ள சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியளவில் உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்து நிறைவேற்றவுள்ளது. மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் வகையில் இந்தத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்.

ஆனால் புதிய முறைப்படி தேர்தல் நடத்தப்போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையையே தேர்தல் திருத்தச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருந்தாலும் புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கு காலம் தேவை. வட்டார எல்லைகளை மீள் நிர்மாணம் செய்யவேண்டும் அத்துடன் அது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளது சில பிரதேச சபைகள். இவற்றைத் தீர்த்து தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆவது வேண்டும்.

மாறாக அரசாங்கமோ எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் அதிகரிப்பதற்கு தயாராக இல்லை. தேர்தலை எப்படியாவது ஏப்ரல் மாத இறுதியிலாவது முடித்துவிடவேண்டும் என அரசு ஒற்றைக்காலில் நிற்கிறது. மார்ச் மாதமளவில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் ஆனது அரச தரப்புக்கும் சரி ஐக்கிய Nதிய கட்சிக்கும் சரி ஒரு பலப்பரீட்சையாகவே அமையப்போகிறது. ஜனாதிபதியைப் பொறுத்தளவில் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்பதே நோக்கு. அதைவிட முக்கிய தேவைப்பாடாகவும் உள்ளது ஏனென்றால் அண்மைய நாட்களில் தெற்கில் உள்ள உள்ளுராட்சிச் சபைகளின் வரவுசெலவுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது. இது தான் முக்கிய பிரச்சினை. இதுவரை ஐந்து உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்ற ஆளும்கட்சி மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. இதுவே ஆளும்கட்சிக்குரிய முதல் வேட்டாக அமைகிறது.

அடுத்தது விலைவாசி உயர்வுக்கு அளவுகணக்கே இல்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுவோம் என்று கூறிக்கொண்டு சரித்திரத்திலே நடந்திராதவாறு தேங்காயை இறக்குமதி செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். முட்டை கூட இறக்குமதி செய்யும் நிலை வந்துவிட்டது. மறுபக்கத்தில் வெங்காயத் தட்டுப்பாடு தலையைப் பிய்க்கிறது. இந்த நிலையில் அரசு திணறிக்கொண்டிருக்கிறது இது எதிர்த்தரப்புக்கு சாதகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் பொதுமக்கள் தான் நசிபடுகிறார்கள்.

இந்தப் போக்கு தொடருமானால் மக்கள் மனதில் அரசுக்கு எதிரான கருத்து உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான தாக்கத்தை தேர்தலில் பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளுரிலேயே இந்த நெருக்கடிகளை அரசு சந்திக்கிறதென்றால் சர்வதேசளவிலும் இதற்கு சமமான நெருக்கடிகள் உள்ளன.

பிரித்தானியாவுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு உரையாற்ற முடியாத நிலையில் நாடு திரும்பியிருந்தார். இது மிகப் பெரிய இராஜதந்திரத் தோல்வியாகும். அத்துடன் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன. எத்தனையோ பிரச்சினைகள் மத்தியில் இதை எப்படி சமாளிக்கப்போகிறதோ தெரியவில்லை. சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு எதையும் செய்யமுடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தன் பிடியில் இருந்து விலகுவதாக இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதே ஐ.நா குழுவினது இலக்கு என்கிறது அரசு. ஆனால் அந்தச் சந்திப்பு உள்நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா என்பது அறிவிக்கப்படவில்லை. உள்நாட்டில் சந்திப்பு இடம்பெற்றால் சரத்பொன்சேகாவை அவர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுகோளாகும். இது ஆபத்து என்பது அரசுக்கு தெரியும். அதேவேளை ஐ.நா நிபுணர் குழு இலங்கைவர அனுமதிப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதோ ஆபத்தானது என்றும் அதை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர்கள் இருவர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆராய்ந்து பார்க்கப் போனால் அரசு எடுத்த முடிவை அரசுக்குள் இருப்போர் எதிர்ப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. எவ்வாறாயினும் பெரிய அரசியல் ஆதாயத்தைப் பெற முடியாது. இதுவும் ஆளும்கட்சிக்கு ஒரு தலையிடியாக அமையலாம். ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி இப்போது புதிய உற்சாகத்தில் உள்ளது. தங்களுக்குள் நிலவிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பதைக் காட்ட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் எந்தளவு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்.

இவ்வாறான போக்கு அரசை ஒரு விதத்தில் மிரளவைக்கிறது. தொடர் ஆட்சி என்று கண்ட கனவு போட்ட கணக்கெல்லாம் மறுஆய்வு செய்யும் நிலைக்கு வந்து விட்டது போல். இதற்கு வழி கோலுவது கடந்த கால நிகழ்வுகள் தான். எவ்வளவு தான் வெற்றி பெற்றாலும் மக்களிடத்தில் ஏற்படக்கூடிய வெறுப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. அது எப்போது சுனாமி போல் மேலெழும் என்பது யாருக்கும் தெரியாது. உள்ளுராட்சித் தேர்தலானது இரு தரப்புக்கும் இடையில் பெரிய சவாலாகவுள்ளது.

மீண்டும் வெற்றியை தன்பக்கம் காட்டுவது அரசின் நிலை. எப்படியாவது தலை நிமிரவேண்டும் என்பது ஐ.தே.கவின் நிலை. விரைவாகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசாங்கம் முனைவதில் இருந்து தெரிகிறது வெற்றி மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கை. துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்பது பழமொழி. கணிப்பு சரியா? பிழையா? என்பதை தேர்தல் வெளிப்படுத்தும் அத்துடன் தேர்தல் முடிவு அரசின் செல்வாக்குப் போக்கையும் தீர்மானிக்கும்.

எத்தனை தடவைகள் கூக்குரல்

ஒழிப்போம்!! தடுப்போம்!! விழிப்போம்!!

நடந்திச்சா?ஓரளாவாவது முடிஞ்சுதா?

இல்லையே!!காரணம் தெரியல….

அதை முறியடிக்கவே முடியாதா?

அப்படியென்னா அடுத்த சந்ததியும்

அனுபவிக்க வேணுமா?என்ன அநியாயம்

ஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்??

ஒவ்வொரு முயற்சியும் தோல்வி தானே!

ஆட்டிப்படைக்கும் வஞ்ஞானத்தாலும் முடியாதா??

பெரிய பெரிய அமைப்புக்கள் என்னத்துக்கு காசா கொட்டுகினம்??

2009ல் பாதிக்கப்பட்டோர் அரை மில்லியன் அமெரிக்காவில

இப்ப இலங்கையிலயுமாம் அதில யாழ்ப்பாணத்திலயும் ஒட்டிக்கிச்சு

வதந்தியை விட வேகமாகப் பரவுது

காலம் மாறிப்போச்சோ கலாச்சாரம் மாறிப்போச்சோ தெரியல

என்ன தான் இருந்தாலும் எய்ட்ஸ் நோயாளியை ஒதுக்காமல்

அவர்களுக்காகப் பாடுபடுங்கள்

எய்ட்ஸ் தினத்தன்று ஏதாவது அவர்களுக்கு உதவுங்கள்.

வானம் தொடும் காலம் வரை நிம்மதி
என்றிருந்தோம்
எத்தனை கனவுகளை கருவறையில் அல்ல
இதயவறையில் சுமந்தோம்

நாங்களும் ஈசலும் உறவுகள் - காரணம்
இறக்க இறக்க பிறப்போம்
என்றும் தளைப்போம் என்ற பெருமிதம்

எங்கள் வீட்டில் விளைந்து நின்ற மரத்தில்
ஏராளம் காய்களடா..
அப்பவும் முத்தத்தில் இருந்த பாட்டி சொன்னாள்
நாவூறுபட்டு உதிரப் போகுது எண்டு..

கனவில கூட கடவுள் காட்டியதில்லையே!
இரவை விழுங்கிவிட்டு செங்கதிரவன் வரமுந்தி
அயல் வீட்டான் எங்கள் வீட்டு மரத்திலேயே
எறிந்தான் எதையோ

பிஞ்சும்..
பூவும்..
காயும்..
மரமும்..
வேரையும் விடவில்லை... - எல்லாம்

சிவந்த மண்ணில் சீவனற்றுக் கிடக்கிறது.
மூதாதையர் செய்த பாவமோ?
விழுந்தவையை அள்ளிப் பொறுக்கினோம்!
நாதியற்ற நாங்கள்!

கொடியோடு மரம் சாய்ந்ததை பாட்டி
விடிய முந்தியே நினைவூட்டினாள்
பாட்டி கிடந்து புலம்புறாள்
புது மரம் வைத்து தண்ணி கொஞ்சம்
விடு பிள்ளை என்று..
மறுப்பார் யாரும் இல்லை
ஏற்பாரும் யாரும் இல்லை.

நேற்று உலக உணவுகள் தினம் கொண்டாடப்பட்டது. இன்று வறுமை ஒமிப்புக்கான சர்வதேச தினமாகும். இரண்டிற்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறதென்றால் உணவும் வறுமையும் அடுத்தடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. அதில் தான் அந்த இரு நாட்களின் பொருத்தப்பாடும் அதன் கருத்தமைவும் வெளிப்படுகிறது. அனைவருக்கும் உணவுத் தேவை பூர்த்தி செய்கையிலே தான் வறுமை என்பது தலை தூக்குகிறது. அதாவது அடிப்படை வசதியான உணவுக்காக அடுத்தவரிடமோ அல்லது அயல் நாட்டிடமோ கையேந்தும் நிலை ஏற்படும் போதே அதை வறுமை என வரையறுக்கிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதையும் நேற்றைய உணவுகள் தினம் குறிக்கிறது. உலக உணவு தினம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப் பொருளில் கொண்டாடப்படுகிறது. நேற்றைய உணவுகள் தினத்துக்கான தொனிப்பொருள் - பட்டினிக்கு எதிராக ஐக்கியப்பட்ட நிலைப்பாட்டை எடுங்கள். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1992ம் ஆண்டிலேயே ஒக்டோபர் 17ம் திகதியை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக பிரகடனம் செய்து தீர்மானத்தை நிறைவேற்றியது. இன்றைய வறுமை ஒமிப்பு தினத்துக்கான தொனிப் பொருள் - வறுமையில் இருந்து கண்ணியமான வேலைக்கு இடைவெளியை நிரப்புதல் ஆகும்.

உலக நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால் உணவுப் பற்றாக்குறையினால் 100 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலும் தற்போதைய நிலவரப்படி ஆபிரிக்க நாடுகள் மிக மோசமாகப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. களிமண்ணை உணவாக உண்ணும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் பட்டினியோடு மட்டும் வாடுதல் அல்லாமல் அவர்களைக் கொடிய நோய்களும் பீடித்திருக்கின்றன. இவற்றோடு அவர்களின் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி போன்றன பாதிப்படைகின்றன. அதே வேளை அண்மைய வருடங்களில் உலகில் ஏற்பட்ட உணவுத் தானிய நெருக்கடியும் பொருளாதார மந்த நிலையும் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களை தொடர்சியாகப் பாதித்துக்கொண்டியிருக்கின்றன.


பட்டினிக்கு சவாலாக மறுபுறம் இயற்கை அனர்த்தங்கள் குறிப்பிட்ட சில நாடுகளைத் தாக்கிய வண்ணம் இருக்கின்றது. இதனாலும் பட்டினி, வறுமை மேலும் அதிகரிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் மத்திய காலப்பகுதி கணக்கெடுப்பின் படி 17000 குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். குவைத், மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் பட்டினி ஒழிப்பில் ஆர்வத்துடன் செயற்படுகின்றன. தெற்காசிய வல்லரசான இந்தியாவின் நிலை பட்டினி விடயத்தில் கவலைக்கிடமாகத் தான் உள்ளது. உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் அதாவது அரைவாசி எண்ணிக்கையானோர் இந்தியர்களாகவே உள்ளனர்.

பட்டினி ஒழிப்பில் இலங்கை 88 நாடுகளில் 39வது இடத்தில் உள்ளது.

பட்டினி ஒழிப்பிற்கு வல்லரசு மற்றும் தனவந்த நாடுகள் உதவி செய்வதில் பின் நின்றாலோ அல்லது அளித்த உத்தரவாதத்தை மீறினால் அடுத்து வரும் பத்து வருடங்களில் 4கோடி 50லட்சம் சிறுவர்கள் இறக்க நேரிடும் என பிரிட்டிஷ் நிறுவனமான ஒக்ஸ்பாம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

பட்டினிக்கு எதிராக அரசாங்கங்களும் உணவு முறைமை நிறுவனங்களும் பிராந்தி ரீதியிலான வர்த்தக மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் உலகளாவியரீதியில் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும். பட்டினியில் வாடும் மக்களை காப்பாற்றுவதற்காகவும் உணவு தொடர்பான உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்கும் ஐக்கியப்பட்ட அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.


தேவையான பொருட்கள்

  1. சீரகச்சம்பா அரிசி - 1 கப்
  2. பாசிப்பருப்பு - 1/2 கப்
  3. மிளகு - சிறிதளவு
  4. சீரகம் - 1 டீஸ்பூன்
  5. மிளகு, சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
  6. இஞ்சி - 1 டீஸ்பூன்
  7. கருவேப்பிலை - சிறிதளவு
  8. முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
  9. நெய் - 4 டேபிள் ஸ்பூன்
  10. தண்ணீர் - 4 கப்
  11. உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :

  • ரைஸ் குக்கரில் 2 கப் தண்ணீரை ஊற்றி ON பண்ணவும்.
  • பிறிதான அடுப்பில் தாச்சியை வைத்து பாசிப்பருப்பை மிதமான சூட்டில் வாசனை வரும்வரை வறுத்து குக்கரில் கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
  • அதே தாச்சியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • அதனுடன் இஞ்சி, மிளகு, சீரகம், சேர்த்து நெய்யில் நன்கு பொரித்து எடுத்து குக்கரில் கொதிக்கும் பாசிப்பயறுடன் சேர்த்து கிளறவும்.
  • சீரகச் சம்பா அரிசியை நன்கு களைந்து 2 கப் தண்ணீருடன் குக்கரில் சேர்க்கவும்.
  • கருவேப்பிலை, உப்பு, மிளகு, சீரகம் என்பவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • நமக்கு ஐந்து நிமிட வேலை தான். மீதியை றைஸ் குக்கர் பார்த்துக் கொள்ளும்.
  • Keep warm mode வந்தவுடன் குக்கரை OFF செய்து பொங்கலை வேறாக்கி ஆறவிட்டு பரிமாறவும்.
  • நீங்களும் முயற்சி செய்து பார்த்து ருசியைப் பகிருங்கள்.

பி.கு : றைஸ் குக்கர் இல்லாதவன் என்ன செய்யுறது எண்டு அதிக பிரசங்கித் தனமா கேட்கக் கூடாது.

இலங்கையின் அரசியல் வியூகங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்ற வேளை தற்போது இலங்கை சீனாவுடனான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த உடன்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் அவருடன் இராணுவ மற்றும் முப்படைத் தளபதிகளும் சீனாவிற்கு கடந்த வாரம் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போதே இராணுவ ஒத்துழைப்புக்களை பரிமாறி வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய இலங்கை நாடுகளின் படைகளுக்கு இடையில் இராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு நடந்து சில நாட்களின் பின்னரே சீனாவுடன் இது போன்ற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது இலங்கை.

தெற்காசியாவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. அது போராக வெடிக்காத நிலையில் பொருளாதாரப் போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது.அதிக முதலீடுகள், ஏட்டிக்குப் போட்டியான உதவிகள் இராணுவ தந்திரங்கள் போன்றன பனிப்போரின் உச்சக்கட்டத்தினை அடைய வைக்கின்றது. இந்த போட்டிக்குள் தான் இலங்கை சரியாக மாட்டியிருக்கின்றது. இலங்கை சீனாவை பகைத்துக் கொள்ளாமலும் இந்தியாவை கை நழுவ விடாமலும் இரண்டு கைகளில் பிடித்த வண்ணம் தனது யுக்திகளை நகர்த்துகின்றது.

இந்தியாவுடன் சுமுகமான உறவை பேணத்தவறினால் கடந்த காலம் படிப்பித்த பாடம் சொல்லும் மீதியை, அதேவேளை சீனாவை உதறித்தள்ளி விட முடியாது. காரணம் கேட்டதை விட கேட்காததையும் வாரிக் கொடுக்கிறது. மேற்குலக நாடுகள் இலங்கையை கைவிட்ட நிலையில் ஜப்பானும் தனது உதவிகளை சரி பாதி நிறுத்திவிட்டது. இவற்றுக்கு எல்லாம் மத்தியில் போர் என்ற சாட்டு முடிவடைந்த நிலையில் இலங்கைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய தேவைப்பாடு உள்ளது. இதில் முக்கியமாக தென் பகுதி அபிவிருத்தி சீனாவின் கையில் இருக்கின்றது.

சீனா தான் கடந்த வருடம் இலங்கைக்கு அதிக நிதி வழங்கிய நாடுகளின் பட்டியலில் முன் நிற்கின்றது. இப்படி வாரி வழங்குவாரை எப்படித்தான் கைவிடும் இலங்கை. இதனால் தான் இந்தியாவை விட ஒரு முழம் கூட்டி இலங்கை சீனாவுக்கு மதிப்பளிக்கின்றது. இவ்வாறான இலங்கையின் விளையாட்டை இந்தியா விரும்பாது. அது இலங்கைக்கு தெரியும். மறுபுறம் இலங்கையின் காய்நகர்த்தல்களை இந்தியாவும் அறியும். இருந்தாலும் நடவடிக்கைகளைப் பார்க்கையில் இலங்கை சீனாவிடம் தான் உண்மையான நண்பனாக இருக்க ஆசைப்படுகின்றது போல். காரணம் புலிகளுடன் போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் சீனா செய்த உதவிகளை என்றுமே மறக்கத் தயாரில்லை இலங்கை.

யுத்தத்தின் போது இலங்கை இந்தியாவிடம் இருந்து நிறைய உதவிகளை எதிர்பார்த்தன. ஆனால் கிடைத்தது திருப்தியளிக்கவில்லை. அதாவது போரின் போது இராணுவ உதவிகளை வழங்கவில்லை என்பது தான் குறை. சீனா விடயத்தில் இறுதி முடிவு இதுதான். ஆயுதங்கள், வெடி பொருட்கள், தொழில்நுட்ப உதவிகள், இராணுவ தந்திரோபாயங்கள் போன்றவற்றில் சீனாவின் பிடியில் தான் இலங்கை. பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்கவுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளால் இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு பலப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

என்ன தான் தலை தெறித்தாலும், இலங்கை அரசு பாதுகாப்பை பலப்படுத்துவதிலும், புதிய இராணுவ யுத்திகளை பெற்றுக் கொள்வதிலும் முனைப்பாக உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. இதற்கான பின்னணி தெரியாத நிலையில் அனைவரினதும் மனதில் எழும் ஒரே கேள்வி, இலங்கையின் இந்த இரட்டைப்போக்கு தன்மை எவ்வளவு காலம் நீடிக்கப் போகின்றது என்பதும், மற்றும் இரட்டை பாசத்தால் இலங்கையை வலுப்படுத்தும் அளவிற்கு ஏதாவது நாடு குதித்து விடுமோ என்ற பயம்.

Followers

About this blog

Labels