வழமையான தேர்தல்களை விட இம்முறை சற்று வித்தியாசம். தமிழ்க்கூட்டமைப்பின் நேரடி ஆதரவுடன் தமிழர்கள் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் தரப்பாகவுள்ளனர். எனவே இருபெரும் வேட்பாளர்களின் வாக்குத் திரட்டும் நடவடிக்கைகளும் தமிழர் பிரதேசங்கள் நோக்கி நகர்ந்திருக்கின்றது. தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கையுடன் ஆங்காங்கே சூட்டுச்சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதுவரை மூவர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். 26ம் திகதி வாக்களிக்க முடியுமா என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் பார்வையாளர்களா? பங்காளிகளா?


கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இது வரை மூன்று பாரிய அளவிலான வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பிரதேச சபை முன்னாள் தலைவரின் கடை 18.01.2010 நள்ளிரவு எரிக்கப்பட்டது, பிரச்சாரம் சென்று விட்டு வீடு திரும்பியோர் மீது துப்பாக்கிச் சூடு)

இதைவிட எத்தனையோ குழறுபடிகள் நடந்துள்ளது, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் கண்காணிப்பு அவதானிப்பாளரிடம் இருந்து பெற்றவை சில……

• சில இடங்களில் பதிவு செய்யப்படாத கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரம் போஸ்டர்கள் கட்அவுட்களை அகற்றுமாறு கோரியும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

• கட்சிக் கூட்டங்கள்;; இடம் பெறும் போது தாக்குதல்கள் இடம் பெறுவதுண்டு. நேற்று அட்டாளைச்சேனையில் 500 மீற்றருக்குள் இரண்டு கட்சிகளின் கூட்டம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பொலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே பிரச்சாரங்கள் இடம் பெறுகின்றன. மக்களுடைய ஆர்வத்தைக் கண்டு கொள்ள முடியவில்லை.

• நாடு முழுவதும் இன்றுவரை 501 முறைபாடுகள் பதிவாகியுள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நீதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துமாறு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நீதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துமாறு ஆயர் மன்றமும் கோரிக்கை விடுத்துள்ளது.

• நேற்று(20.01.2010) முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தேர்தல் முறைப்பாடு பதிவாகியுள்ளது. தேர்தல் கூட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

• தேர்தலை இடையூறு இல்லாமல் நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என பஃவ்ரல் (PAFFRAL)அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

• இது வரை 124 வாகனங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது இடம் பெற்ற தாக்குதலில் சேதமாக்கப்பட்டுள்ளது. 83பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 4 நாட்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றன. அட்டகாசமா? அடக்கமா? பொறுத்திருப்போம்.