யாருமே எதிர்பார்க்காத விதமாக முரளிதரன் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக இன்று காலியில் ஆரம்பமாகிய இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டி இருக்கும்.
சனத் ஜெயசூர்யாவுக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் மரியாதை தனக்கும் எதிர்காலத்தில் கிடைத்து விடாமல் நாகரீகமாக ஓய்வு பெறுகின்றார். கிரிக்கட் பற்றியோ, முரளி பற்றியோ சொல்வதற்கு எனக்குத் தகுதியில்லை. ஆனாலும் ஒரு சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முரளிதரனின் உலக சாதனையை (ஒரு இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்கள்) கௌரவிக்கும் முகமாக 10 வருடத்திற்கு முன்னர், கொழும்பில் தமிழ்த்துறை சார்ந்த ஒரு சங்கத்தினால் பாராட்டு விழா வைத்தார்களாம். அதில் கலந்து கொண்டு முரளி ஆங்கிலத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதாக நான் அன்று கேள்விப்பட்டேன். இது பற்றி மேலதிகமாகத் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முரளி வாழ்ந்து, வளர்ந்து இன்று நிற்கும் நிலை வரையான சூழ்நிலையில், அவர் தூய தமிழ் பேசுவதென்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் தான். ஆனாலும் அண்மையில் இந்தியத் தொலைக்காட்சியொன்றில், யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல தமிழ் கதைத்தார். இலங்கையில் தமிழ் பேசுவதைத் தவிர்க்கிறாரா?
இலங்கையின் பிரபல ஊடக நிறுவனமொன்றின் ஆங்கில வானொலிக்கு, குமார் சங்கக்காராவும், சிங்கள வானொலிக்கு சனத் ஜெயசூரியாவும் விசேட தூதுவர்களாக இருந்தார்கள். (இருக்கிறார்களா தெரியவில்லை) அந்த வலையமைப்பின் தமிழ் வானொலியின் தூதுவராக இருக்குமாறு முரளியை அணுகிய போது, அவர் மறுத்திருக்கின்றார். (கேள்விப் பட்டேன்) அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
முரளி, வோர்னின் சாதனையை முறியடித்த சமயத்தில் யாழ்ப்பாணம் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்திற்கு முன்னால் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது. பின்னர் ஏதோவொரு காரணத்திற்காக தீயிட்டும் எரிக்கப்பட்டது. அது ஏன்?
பலரும் (பொதுவாகத் தமிழர்கள்), இரண்டு கண்ணோட்டத்தில் முரளியைப் பார்க்கிறார்கள். அது சரியா?
அங்கங்கே தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு விடை பகிருங்கள்…
2 comments:
இதே கேள்வியை சனிக்கிழமை அவதாரம் நிகழ்ச்சியில் லோஷன் முரளியின் அம்மாவிடம் கேட்டார். அப்போது அதற்கு அவர் முரளி தமிழில் கதைக்கும் அனைவருடனும் தமிழில்தான் கதைப்பதாக கூறினார்.
எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பிள்ளை வலைப்பதிவராக இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்..இன்றைய தினக்குரலில்தான் முகவரி பார்த்தேன்.. எழுத்துத் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Post a Comment