இலங்கையிலிருந்து செயற்படும் யாழ்தேவி திரட்டியின் இந்தவார நட்சத்திரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்காக யாழ்தேவி நண்பர்கள் வட்டத்திற்கு எனது நன்றிகள்.
பதிவெழுத வந்து ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இன்று எழுதுவது என் 60ஆவது பதிவு. என் நண்பர்களை தவிர பதிவுலக வட்டத்தில் நண்பர்கள் யாரையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கிடைக்கும் இணைய வசதியிலும், நேரத்திலும் என் பதிவை இடவும், அதை திரட்டிகளில் இணைக்கவுமே நேரம் சரியாகின்றது. பிறரின் ஒரு சில பதிவுகளை மேலோட்டமாக வாசிப்பது. யாருக்கும் பெரிதாக பின்னூட்டமிட்டதில்லை. எனக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் பதிலளிப்பது குறைவு.
பொதுவாக என் தளத்தைப் பார்ப்பவர்களுக்கு, அது "Geography" சனல் பார்ப்பது போன்ற பிரமையே இருக்கும். இதனால் பின்னூட்டங்கள் அவ்வளவு வருவதில்லை. பதிவுகளின் தரத்தைப் பொறுத்து வாக்குகள் மட்டும் தாராளமாகக் கிடைக்கும். குறித்த பதிவுகளுடன் தொடர்பு பட்ட விடயங்களில் ஆர்வமுள்ளவர்கள் மாத்திரமே தொடர்ந்து படிப்பார்கள்.
இலங்கையிலிருந்து தொடர்ச்சியாகப் பதிவிடும் பெண்பதிவர்களை எண்ணினால், பத்து விரல்களே மிஞ்சி விடும். பெண்கள் வலைப்பதிவுகளில் காட்டும் ஆர்வமும் குறைவு. அதனால் பதிவுலகத்திற்கு அவர்கள் வரவும் விரும்புவதில்லை. வந்தாலும் ஒரு பெண்ணாக அவர்களால் தங்கள் கருத்தை முழுமையாக தெரிவிக்கவும் முடிவதில்லை. பதிவுலக கும்மிகள், மொக்கைகளில் கலந்து கொள்ளவும் முடியாது. நீதி, நியாயம் கேட்டு எங்கள் வாதத்தை முன்வைக்கவும் முடியாது.
ஏதோ எங்கள் பாட்டுக்கு எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்க வேண்டியது தான். எந்த வம்புக்கும் போகாத என் மீதே மறைமுகமான வார்த்தைப் பிரையோகங்களால் தாக்குதல்கள் சில வேளைகளில் இடம்பெற்றதுண்டு. இந்த நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குப் போனால் என்னாவது?
என் வலையுலக சில கால அனுபவத்தைக் கொண்டு புதியவர்களுக்கு ஒரு விடயம் கூற ஆசைப் படுகின்றேன். "உங்கள் எழுத்துக்களையும் திறமைகளையும் வேறு வழிகளில் காட்டுங்கள். வலைப்பதிவுப் பக்கம் வந்து விடாதீர்கள். வந்தால் காலப்போக்கில், நேரம் வீணாகும், வீண் சோழிகள் திருப்பப்படும், மனக் கஷ்டம் ஏற்படும், ஏன் இனி வருங்காலங்களில் உயிருக்குக் கூட உலை வைக்கும். ஏனெனில் வலையுலகம் அதால பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அதனைக் காப்பற்றவும் முடியாது.
யாழ்தேவி நட்சத்திர வாரத்தில் இனிவரும் நாட்களில் காத்திரமான படைப்புக்களுடன் இணைந்து கொள்கின்றேன்.
4 comments:
வாழ்த்துக்கள்!
நான் நட்சத்திர பதிவரான போது சொல்ல நினைத்த நிதர்சனங்களை நீங்கள் தைரியமாய் சொல்லியிருக்கின்றீர்கள்... வாழ்த்துகள்...
நட்சத்திர வாரம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்
Post a Comment