இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 8ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் வந்தாலே சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது. இன்று உள்நாட்டு , வெளிநாட்டு ஊடகங்களின் முக்கிய செய்திகளில் ஒன்று "ஜெயசூரியாவின் தேர்தல் அறிவிப்பு"

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இம்முறை பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்துள்ளது. அதில் ஒருவர் ஜனாதிபதியின் புத்திர சிகாமணி நாமல் ராஜபக்ஷ. இன்னொருவர் எங்கள் தலை, அது தாங்க சனத். கிரிக்கெட்டில் ஆடியது போதவில்லை போலும், சனத் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது தெரிந்த விடயமே! இந்நிலையில் ஜெயசூர்யாவை தேர்தலில் போட்டியிட வருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்ட ஜெயசூர்யா, மாத்தறை மாவட்டத்தில் அவர் போட்டியிடுவார் என்றும், விருப்ப மனுவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் விரைவில் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயசூர்யா கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒப்பந்தம் போட்டுள்ளது. . எனவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கிரிக்கெட் சபையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுபற்றி ஜெயசூர்யாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, 'தேர்தலில் போட்டியிட என்னை அழைத்துள்ளனர். கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது' எனக் கூறிவிட்டார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றாக ஓய்வு பெற்ற பின்னர் சனத் இந்த முடிவை அறிவித்திருக்கலாம், ரசிகர்கள் பெரும்பகுதியினர் சனத்தை கொஞ்சமாவது வெறுப்பார்கள். பெரும்பாலும் சனத்தின் வெற்றி உறுதி. அதில் சந்தேகம் வேண்டாம்.

இதற்கு முந்தைய இந்தியப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து பெரும் சாதனைப் படைத்துள்ளது ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் திரைப்படம். இந்திப் படங்களுக்கு பெரிய சந்தை வாய்ப்புக்கள் இல்லாத தமிழகத்தில்கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போடுகிறதாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாடினால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே, ஷாருக்கானை தேசத் துரோகி என்று குற்றம்சாட்டி, பெரும் கலவரத்தைத் தூண்டப் பார்த்தது பால்தாக்கரேயின் சிவசேனை கட்சி.

கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசான போது மும்பை நகரம் முழுவதும் சிவசேனா கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல தியேட்டர் அதிபர்கள் பயந்து போய் படத்தை நிறுத்தினார்கள். ஆனால் மராட்டிய அரசும், ரசிகர்களும் ஷாருக்கானுக்கு ஆதரவாக களம் இறங்கியதும் மறுநாள் பல தியேட்டர்களில் படம் ரிலீசானது. தற்போது அங்கு 80-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ஓடுகிறதாம். இந்தி திரையுலகில் சமீபத்திய படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் மை நேம் இஸ் கான் படம் முறியடிக்கும் என்கின்றனர். தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் ஒரு டிக்கெட் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகின்றது. பெர்லின் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு ஒரு டிக்கெட் ரூ.60 ஆயிரம் என விற்கப்பட்டு சில நிமிடங்களிலேயே முடிந்ததாம்.

அமெரிக்காவிலும் இந்தப் படம் சக்கைபோடு போடுகிறது. அந்த படம் ரிலீசான 3 நாட்களில் 1.86 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. சென்னையில் 5 தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. இப்படம் இலங்கை, எகிப்து , நியுசிலாந்து,அமேரிக்கா உட்பட 45 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூல் மட்டும் 250 மில்லியன் இந்திய ரூபாய்களாம்.