ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிரணியின் பிரதான வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 175 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். இருவருக்கும் இடையில் 18 இலட்சத்து 42 ஆயிரத்து 749 வாக்குகள் வேறுபடுகிறது. பெரு வெற்றியை இந்த வேறுபட்ட வாக்குகள் தான் பறைசாற்றுகிறது. 22 தேர்தல் மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ 16 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா ஏனைய 06 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.தேர்தல் முடிவு வெளியான நிமிடத்திலிருந்து இலங்கை அரசியலில் பெரு வீச்சான அதிர்வுகளுடன் புயலும் வீசத்தொடங்கி விட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த கட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் நகர்வுகள் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் தலைவிதி எவ்வாறு அமையப் போகிறது? என்பது குறித்து வினாக்கள் எழத் தொடங்கி விட்டன. எல்லோருமே விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் சிறுபான்மை இனமே இல்லை என்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் இந்த நாடு பெரும்பான்மை இனம், தமிழர் சிறுபான்மை இனம் என பிரிந்து கிடப்பதைத் தெளிவாக விளக்குகிறது. அதே வேளை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் போரின் முடிவுடன் தகர்ந்து போய் விடவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் என இனம் காட்டிக் கொள்வோர் அரசாங்கத்தின் சார்பாக சரியான முறையில் அபிவிருத்தி உட்பட அனைத்து விடயங்களிலும் சேவையாற்றத் தவறியதன் விளைவாகவே மக்கள் இம் முடிவை எடுத்தனர்.


தமிழ் பேசும் மக்களின் இம்முடிவு குறித்து அவர்கள் மீது எவரும் பகைமை பாராட்டுவதிலோ அல்லது குற்றம் காண்பதிலோ அர்த்தம் இல்லை. பெரும்பான்மை இனம் தங்களது உள்ளக் கிடக்கைகளைத் தெரிவிக்க எந்தளவு உரிமை இருக்கிறதோ, அதேயளவு உரிமை தமிழ் பேசும் மக்களுக்கும் உண்டு. அந்த வகையில் ஜனநாயக ரீதியாக தமது முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் தமிழ் பேசும் வேட்பாளர்களுக்குத் தமது வாக்குகளை அள்ளிக் கொட்டவில்லை. இன ரீதியாகவும் செயற்படவில்லை. நாடு பிளவுபட வேண்டும் என கோரவும் இல்லை. பெரும்பான்மை இன வேட்பாளர்களுக்குத்தான் தமது வாக்குகளை அளித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உணர்வுகளை மதித்தாகவே வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்குக் கூடுதலான ஆதரவை வழங்கினார்கள் என்பது பிரச்சினையல்ல. சுமார் 30 வருட கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து தோன்றியிருக்கும் சூழ்நிலையில் ஜனநாயகச் செயன்முறைகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டியுள்ளமை உற்சாகம் தருவதாக உள்ளது. தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளினால் ஜனாதிபதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதில் அக்கறை காட்டியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொடரும் பதவிக் காலத்தில் தமிழ் பேசும் மக்கள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்திய உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை இன மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைக்கான தீர்வினை முன்னெடுப்பதற்கு தடைகள் இருப்பதாகக் கருத முடியாது. போரினை முடிவுக்கு கொண்டு வந்தது போல் இன விவகாரத்திற்கான தீர்வு தனது ஆட்சிக் காலத்திலே காணப்படும் என்று ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்ததை இங்கு குறிப்பிடுகின்றேன்.


தொடரும் ஆட்சிக்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற வேண்டும். தூக்கியெறியப்படக் கூடாது. பொறுத்திருந்து பார்ப்போம்.